செய்தி அறிக்கைதீர்மானங்கள்மாநிலக் குழு

குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்தவர்களை கண்டறிந்து உடனடியாக கைது செய்திடுக! சிபிஐ(எம்) மாநிலக்குழு கண்டனம்!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் நேற்று (11.01.2023) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 3:

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா முட்டுக்காடு ஊராட்சிக்கு உட்பட்டது இறையூர் வேங்கைவயல் கிராமம். இது கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்குள் வருகிறது. வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் குடிநீருக்காகப் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மனித மலத்தை கலந்துள்ளனர். கடந்த டிசம்பர் 26 அன்று நடந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களுக்குத் தெரிய வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சட்டமன்ற உறுப்பினர் தோழர் எம்.சின்னதுரையின் உடனடியான தலையீட்டை தொடர்ந்து டிசம்பர் 27 அன்று மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டதைத் தொடர்ந்து உடனடியாக தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டு, ஒரு சிலரின் மீது வன்கொடுமை தடுப்பு பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டதோடு, அந்த கிராமத்தில் இரட்டைக் குவளை முறை உள்ளிட்ட தீண்டாமை கொடுமைகளை முடிவுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட நிர்வாகத்தின் இத்தகைய உடனடியான தலையீட்டிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளும் அதே சமயத்தில் இக்கொடிய சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் இப்போது கைது செய்யப்படாமல் இருப்பதும் வருத்தமளிப்பதாகவே உள்ளது.

இந்நிலையில், கடந்த ஜனவரி 2 அன்று ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துiறை கூடுதல் தலைமை செயலாளர் ஜகவர் தலைமையில் புதுக்கோட்டையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றதும், ஜனவரி 13 அன்று சமூக நீதிக் கண்காணிப்புக்குழு சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளே ஆகும் என கருதுவதோடு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (11.01.2023) சட்டப் பேரவையில் அறிவித்துள்ளபடி மேற்படி இழிசெயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்வதோடு, பாதிக்கப்பட்ட பட்டியல் இன மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு, அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்காக நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

தமிழகம் முழுவதும் பட்டியலின மக்கள் மீது இதுபோன்ற பல வகையான சமூக கொடுமைகள் இழைக்கப்பட்டு வருகின்றன. பல தடுப்பு சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னரும் நிலைமையில் பெரும் முன்னேற்றம் ஏற்படவில்லை. வன்கொடுமை சட்டத்தை அமல்படுத்துவதிலும் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தவில்லை. எனவே, தமிழக அரசு அனைத்து விதமான சமூக ஒடுக்குமுறைகளை களைந்திட தீண்டாமைக் கொடுமை இழைக்கும் சமூக விரோதிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.