மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் செப்டம்பர் 29-30 தேதிகளில் புதுதில்லியில் நடைபெற்றது. மறைந்த தோழர்கள் சீத்தாராம் யெச்சூரி, புத்ததேவ் பட்டாச்சார்யா மற்றும் இதர தலைவர்களுக்கும் தோழர்களுக்கும் அஞ்சலி தெரிவித்து இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றியது. கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கை:‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’: ஜனநாயக விரோதமானது, கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது
ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் ஒன்றிய அமைச்சரவையால் ஏற்றக் கொள்ளப்பட்டிருக்கும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ கருத்தாக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கடுமையாக எதிர்க்கிறது. நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே சமயத்தில் தேர்தல் நடத்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட இருப்பது நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையையும், கூட்டாட்சி கட்டமைப்பையும் அரித்து வீழ்த்திடும். இது சட்டமன்றங்களும், நாடாளுமன்றமும் ஐந்தாண்டு காலம் பொறுப்பில் இருந்திட வேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் அளித்திருக்கிற திட்ட வரையறையை மீறும் செயலாகும். இது, மாநிலங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களின் உரிமைகளைப் பறித்து, மையப்படுத்தப்பட்ட ஒற்றை ஆட்சி அமைப்பு முறையைக் கொண்டு வந்திடும்.
இந்த ஜனநாயக விரோத, கூட்டாட்சி விரோத நடவடிக்கைக்கு எதிராக பொதுக் கருத்தை உருவாக்க மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு தீர்மானித்திருக்கிறது.
பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைத்திடுக!
பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விலைகளை உடனடியாகக் குறைக்க வேண்டும் என்று மத்தியக் குழு கோருகிறது. இந்த ஆண்டு ஏப்ரலிலிருந்தே கச்சா எண்ணெய் சர்வதேச விலை ஒரு பேரலுக்கு 89.40 டாலரிலிருந்து 73.59 டாலராக, சுமார் 18 விழுக்காடு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. ஆனால், மோடி அரசாங்கத்தின் வழிகாட்டுதல் காரணமாக, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் உள்நாட்டு சில்லரை விலைகளைக் குறைத்திடவில்லை.
பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்வுகள் பணவீக்கத்திற்கும், காய்கறிகள், உணவு தானியங்கள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வுக்கும் இட்டுச் செல்லும்.
பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் சில்லரை விலைகளை உடனடியாகக் குறைக்கவும், விலைவாசி உயர்வுக்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்திட மத்தியக்குழு தீர்மானித்திருக்கிறது.
மணிப்பூரில் நிலைமை மோசம்
மணிப்பூரில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. இது குறித்து கட்சியின் மத்தியக் குழு ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது. மணிப்பூர் பள்ளத்தாக்கின் எல்லைப் பகுதிகளிலும், மலை மாவட்டங்களிலும் வன்முறையில் நீடித்து வருகின்றன. ஒன்றிய அரசாங்கமும், பாஜக மாநில அரசாங்கமும் இந்நிலைமை உருவானதற்கான அடிப்படைப் பிரச்சனைகளைச் சரிசெய்வதில் பரிதாபகரமான முறையில் தோல்வி அடைந்திருக்கின்றன. மக்களிடையே பிளவினை மேலும் கடுமையாக்கக்கூடிய விதத்திலேயே இவ்விரு அரசுகளும் நடந்துகொண்டு வருகின்றன.
கடந்த பதினாறு மாதங்களில் ஒருமுறை கூட மணிப்பூருக்குச் செல்ல வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நினைக்கவில்லை என்பதன் மூலம், மணிப்பூர் பிரச்சனையில் மத்திய அரசு தனது பொறுப்பை கைவிட்டது அப்பட்டமாகத் தெரிகிறது. அரசியல் பேச்சுவார்த்தை மற்றும் தீர்வுக்கான சூழ்நிலையை உருவாக்குவதற்கான முதல் படியாக முதல்வர் பைரேன் சிங் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது.
மணிப்பூரில் வாழும் அனைத்துக் குடிமக்களின் உரிமைகளையும் உறுதி செய்வதற்கு, அங்கே செயல்பட்டுக்கொண்டிருக்கும் முக்கியமான இனப்பிரிவினர்களுடன் அரசியல் பேச்சுவார்த்தைகள் நடத்தி, ஒரு சுமூகமான சூழ்நிலையை உருவாக்கிடக்கூடிய விதத்தில் ஒன்றிய அரசாங்கம் நேரடியாகத் தலையிட வேண்டும்.
மேற்கு வங்கம்: பாலியல் வன்கொலை
மேற்கு வங்கத்தில் முதுநிலை மருத்துவ மாணவி ஒருவர் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதற்கு எதிராக நடைபெற்றுவரும் மக்கள் இயக்கத்திற்கு கட்சியின் மத்தியக் குழு தன் முழு ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது. இந்த இயக்கமானது, மாநிலத்தில் சுகாதாரத் துறை உட்பட அனைத்துத்துறைகளிலும் கொடிகட்டிப் பறக்கும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி—கிரிமினல்களுக்கு இடையேயான கள்ளப் பிணைப்புக்கு எதிராகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று – நாடு முழுவதும் நடைபெற்றுவரும் மருத்துவ சமூகத்தினரின் போராட்டங்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது.
பல்வேறு மாநிலங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்தும் மத்தியக்குழு தன் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது.
நிர்மலா சீத்தாராமனை விசாரித்திடுக!
தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் மூலமாகப் பணம் பறிக்கப்பட்டது தொடர்பாக எழுந்துள்ள முறையீடுகள் மீது ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உட்பட இதரர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்து வழக்கு தொடர வேண்டும் என்று பெங்களூருவில் உள்ள ஒரு சிறப்பு நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருப்பதை மத்தியக் குழு சுட்டிக்காட்டுகிறது. இந்த வழக்கு முறையாக புலன்விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்; நிதி அமைச்சர் விசாரிக்கப்பட வேண்டும்.
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு
தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் போராடி வரும் தொழிலாளர்களுக்கு மத்தியக்குழு தன் முழு ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது. இந்த வேலைநிறுத்தப் போராட்டம் தொழிலாளர்கள் சங்கம் அமைத்துக் கொள்ளும் உரிமைக்கானதாகும். தொழிலாளர்கள் சங்கம் வைத்துக்கொள்ள அனுமதிக்க மாட்டோம் என்று பன்னாட்டு நிறுவனங்கள்கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தொழிலாளர் நலத் துறை இது வரை சங்கத்தைப் பதிவு செய்ய அனுமதிக்காதது துரதிர்ஷ்டவசமாகும்.
தமிழ்நாடு அரசாங்கம் இதில் தலையிட்டு, சங்கம் பதிவு செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மத்தியக்குழு கேட்டுக்கொள்கிறது.
பெர்ரோ தொழிலாளர் வேலைநிறுத்தம்
செப்டம்பர் 28இலிருந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஃபெர்ரோ ஸ்க்ராப் நிகாம் லிமிடெட் (FSNL-Ferro Scrap Nigam Ltd.) தொழிலாளர்களுக்கு மத்தியக் குழு தன் ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கொள்கிறது. நன்கு லாபம் ஈட்டி வந்த மேற்கண்ட மினிரத்னா நிறுவனத்தை தனியாருக்குத் தாரை வார்த்திட அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கையை எதிர்த்து தொழிலாளர்கள் இவ்வேலைநிறுத்தத்தில் இறங்கி இருக்கிறார்கள். அரசாங்கம், இந்நிறுவனத்தை ஜப்பானிய பன்னாட்டு நிறுவனத்திற்கு விற்பதற்குத் திட்டமிட்டிருக்கிறது. நாட்டின் உருக்குத் தொழிற்சாலைகளில் முக்கியமான நிறுவனமாக செயல்பட்டு வந்த நிறுவனமாகும் இது.
இஸ்ரேலுக்கு அரசாங்கத்தின் மோடி அரசின் வெட்ககரமான ஆதரவு
இந்திய அரசாங்கம் பாலஸ்தீனத்திற்கு வெகுகாலமாக அளித்துவந்த கொள்கையை மோடி அரசாங்கம் கைகழுவிவிட்டது. ஐ.நா. மன்றத்தில் இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வாபஸ் பெற வேண்டும் என்று கோரி முன்மொழியப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்காமல், தவிர்த்துள்ளது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை இஸ்ரேலுக்கு அரசாங்கம் ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறது. இந்த ஆயுதங்களைத்தான் இஸ்ரேல் காசா பகுதியில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்கு உடனடியாகத் தடை விதித்திட வேண்டும்.
பிரச்சார அறைகூவல்கள்
காசாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்ட இனப்படுகொலை யுத்தத்தின் முதலாம் ஆண்டு தினமான அக்டோபர் 7 அன்று இடதுசாரிக் கட்சிகளின் அறைகூவலுக்கிணங்க நடைபெறும் இயக்கங்களில் கட்சிக் கிளைகள் தங்களை முழுமையாக இணைத்துக்கொள்ள வேண்டும் என்று மத்தியக்குழு அறைகூவி அழைக்கிறது.
மேலும் மத்தியக்குழு —
(1) ஒரே நாடு, ஒரே தேர்தல் முன்மொழிவுக்கு எதிராகவும்;
(2) பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விலைகள் உயர்வைக் குறைத்திடக் கோரியும், விலைவாசி உயர்வுக்கு எதிராகவும்;
(3) வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் அடிப்படை சேவைகளைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்கு எதிராகவும்;
(4) பெண்களுக்கு எதிராகவும், பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள் உள்ளிட்ட குற்றங்களைக் தடுத்திடக் கோரியும் பிரச்சாரம் மேற்கொள்ள தீர்மானித்திருக்கிறது. மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரையிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்தியக்குழு தீர்மானித்திருக்கிறது.