இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் 2024 நவம்பர் 15 அன்று சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
தீர்மானம் – 2
தமிழகத்தில் 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தி 19,000 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அதற்கு பின்பு கடந்த 11 ஆண்டுகளாக ஆசிரியர் தேர்வு வாரியம், ஆசிரியர் நியமனத்துக்கான எந்த தேர்வுகளையும் நடத்தவில்லை. இந்நிலையில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட ஆசிரியர் நியமனத் தேர்வில் 40,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ள போதிலும் 3192 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக ஆசிரியர் நியமனம் இல்லாத நிலையில் தற்போது 14,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் 3192 பணியிடங்கள் மட்டுமே நியமிப்பது எந்த வகையிலும் பொருத்தமான நடவடிக்கையாகாது. ஆசிரியர் பணியை எதிர்பார்த்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில் தற்போதுள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தையும் நிரப்புவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.