செய்தி அறிக்கைதீர்மானங்கள்மாநில செயற்குழு

சாம்சங் தொழிலாளர் பிரச்சனை: தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) மாநிலக்குழு கண்டனம்!

Cpim Thirmanam

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம்  2024 நவம்பர் 15 அன்று சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

தீர்மானம் – 1

சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்து ஒரு மாத காலத்திற்கும் மேல் ஆகிறது. வேலை நிறுத்தம் முடிவுக்கு வருவதற்கு தமிழக அரசும், தொழிற்சங்கம் மற்றும் நிர்வாகமும் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை காரணமாகும். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 1450 தொழிலாளர்களில் இதுவரை 450 பேர் மட்டுமே ஆலைக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 1000 தொழிலாளர்கள் வேலைக்கு அனுமதிக்கப்படவில்லை. ஆலைக்குள் அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கும் பயிற்சி என்ற பெயரில் தொழிலாளர்களை மறைமுகமாக நிர்வாகம் அச்சுறுத்துகிறது. பயிற்சி கொடுப்பவர்கள் தொழிலாளர்களிடம் தொழிற்சங்கத்திற்கு வெளித்தலைமை, மூன்றாம் நபர் எதற்கு என்று கேட்டு மூளைச் சலவை செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. மேலும், நிர்வாகத்திற்கு ஆதரவாக அமைக்கப்பட்டுள்ள தொழிலாளர் குழுவை ஏற்கச் சொல்லி, கையெழுத்து கேட்டும் கட்டாயப்படுத்துகிறது.

இத்தகைய சாம்சங் நிர்வாகத்தின் மோசமான நடவடிக்கைகள் தொழிலாளர்கள் சங்கம் அமைத்துக் கொள்ளும் அரசியல் சட்ட உரிமைகளுக்கும், ஜனநாயக உரிமைகளுக்கும் எதிரானதாகும்.  தொழிலாளர்கள் விரும்பிய சங்கத்தை அமைத்துக் கொள்வதற்கு நிர்வாகம் மறுத்து, பழிவாங்கல் நடவடிக்கையை மேற்கொண்டதே வேலை நிறுத்தத்திற்கு பிரதான காரணமாகும். முத்தரப்பு பேச்சுவார்த்தையில் அரசு  வழங்கிய அறிவுரையை ஏற்று, தற்போது வரை அதனை செயல்படுத்தாமல் நிராகரிக்கும் வகையிலேயே சாம்சங் நிர்வாகத்தின் செயல்பாடு உள்ளது. தொழிற்சங்க உரிமையையும், முத்தரப்பு பேச்சுவார்த்தை அறிவுரைகளையும் நிராகரிக்கும் சாம்சங் நிர்வாகத்தின் அடாவடித்தனமான, சட்டவிரோதமான நடவடிக்கைகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட அடிப்படையில் சாம்சங் தொழிலாளர்கள் அனைவருக்கும் உடனடியாக வேலை வழங்கப்பட வேண்டும். எவ்வித பழிவாங்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக் கூடாது. சம்பளம் வழங்குகிறோம் என்று கூறிவிட்டு, தொழிலாளர்களை தொழிற்சாலைக்குள் அனுமதிக்காமல் இருப்பது முத்தரப்பு பேச்சுவார்த்தை முடிவுகளுக்கு முரணானதாகும். எனவே, அனைத்து தொழிலாளர்களும் ஆலைக்குள் அனுமதிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும்.

தமிழ்நாடு அரசின் தொழிலாளர் துறை, தொழிற்சங்க சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஏற்று பதிவு சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது இன்னும் நிறைவேற்றப்படவில்லை. சங்கப் பதிவு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜராகும் வழக்கறிஞரும் நிர்வாகத்திற்குச் சாதகமாக கால அவகாசம் கேட்டு வழக்கை நீட்டிக்கச் செய்வது தொழிலாளர்களையும், தொழிற்சங்கத்தையும் வஞ்சிக்கும் செயலாகும். தமிழக அரசின் இத்தகைய அணுகுமுறையை கட்சியின் மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது. எனவே, தமிழக அரசு சாம்சங் நிர்வாகத்தின் அடாவடித்தனமான தொழிலாளர் விரோத, சட்ட விரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும், முத்தரப்பு முடிவுகளை செயல்படுத்திட சாம்சங் நிர்வாகத்தை அரசு வற்புறுத்த வேண்டுமெனவும், தொழிலாளர்துறை தொழிற்சங்க பதிவினை விரைந்து முடித்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது