இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் 2024 நவம்பர் 15 அன்று சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
தீர்மானம் – 4
தமிழகத்தில் வேளாண் திட்டங்களுக்கான மின்னணு சர்வேயில் மாணவர்களைப் பயன்படுத்துவதை கைவிடுக!
நாடு முழுவதும் ஒருங்கிணைந்த வேளாண் திட்டங்களை உருவாக்குவதற்கு அனைத்து மாநிலங்களிலும் மின்னனு முறையில் சர்வே செய்து அறிக்கை அனுப்ப ஒன்றிய அரசு கோரியுள்ளது. இதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிலத்தின் அளவு, நிலத்தின் தன்மை, சாகுபடி பரப்பு, பயிர்களின் விபரம், விவசாயிகள் எண்ணிக்கை, கடன் விபரம் உட்பட கிராமங்கள் தோறும் சென்று கணக்கிடும் பணியை வேளாண் கல்லூரி மாணவர்கள் மூலம் செயல்படுத்திட அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக மாணவர்களின் தேர்வுகள், கல்வி சுற்றுலா உட்பட ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இத்தகைய கணக்கெடுப்புகள் வழக்கமாக வருவாய்த்துறை – கிராம அலுவலர்கள் மூலமே எடுக்கப்பட்டது. படிக்கும் மாணவர்களை இதற்குப் பயன்படுத்துவது பொருத்தமானதல்ல. அண்மையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சர்வே எடுக்கச் சென்ற இரண்டு மாணவிகளை வரப்பில் பாம்பும், விஷப்பூச்சியும் கடித்துள்ளன.
எனவே, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்து மின்னணு கணக்கெடுப்பை நடத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும், மாணவர்களைப் பயன்படுத்துவதைக் கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.