இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் 2024 நவம்பர் 15 அன்று சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
தீர்மானம் – 3
தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்கள்) சட்டம் 2023 தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு முழுமையான விவாதமின்றி குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது. அப்போதே விவசாய அமைப்புகளும் சுற்றுச்சூழல் அமைப்புகளும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தின. அண்மையில் விதிமுறைகள் வெளியிடப்பட்டு சட்டம் அமலுக்கு வந்துள்ளது. 250 ஏக்கருக்குக் குறையாத நிலப்பரப்பில் நீர் நிலைகள் இருந்தாலும், பல்வேறு திட்டங்களுக்கும், தேவைகளுக்கும் அவசியம் எனக் கருதினால், அதனைத் தனியாருக்கு வழங்கும் அதிகாரத்தை இச்சட்டம் அரசுக்கு அளிக்கிறது. இதன் மூலம் கையகப்படுத்தப்படும் நிலங்களில் உள்ள நீர்நிலைகள், நீர்ப்பிடிப்பு பகுதிகள், கால்வாய்கள், மேய்ச்சல் நிலங்கள் என அனைத்தும் அந்தத் தனியாரின் கட்டுப்பாட்டுக்குள் செல்லும். இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நிலமில்லாமல் போகும் நிலை ஏற்படும். மக்களின் பொதுத்தேவைக்கு பெரும் சிரமம் ஏற்படும். நீர்நிலைகளை, மேய்ச்சல் நிலங்களை மக்களும் கால்நடைகளும் பயன்படுத்தும் வாய்ப்பும் அற்றுப்போகும். சுற்றுச்சூழலும் பாதிப்புக்குள்ளாகும். ஏற்கனவே அமலில் உள்ள நிலம் கையகப்படுத்தும் சட்டம் உட்பட பல்வேறு சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு, நீர் நிலைகள் மேய்ச்சல் நிலங்கள் உள்ளிட்ட அம்சங்கள் தடையாக இருப்பதை சரிகட்டும் நோக்கம் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. இதுபோன்ற சட்டம் வேறு எந்த மாநிலத்திலும் நிறைவேற்றப்பட்டதாகத் தகவல் இல்லை. இது கார்ப்பரேட்டுகளுக்கே பலனளிக்கும்.