சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு அறிக்கை
மணிப்பூரில் இரு இனங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள வன்முறை நிகழ்வுகள் மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ளன; இதனை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய விதத்தில் ஒன்றிய அரசாங்கம் வலுவான நட வடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் இன ரீதியாக கொலைகள் மற்றும் எதிர்கொலைகள் என நிலைமைகள் மிகவும் மோசம் அடைந்துள்ளன. நவம்பர் 7க்குப்பின்னர் நடை பெற்றுள்ள எண்ணற்ற சம்பவங்கள் காரணமாக இது வரை 20 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். முன்னதாக ஒரு கொடூரமான சம்பவத்தில் கடத்தப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளின் 5 உடல்கள் கண்டெடுக்கப் பட்டிருப்பதே அம்மாநிலம் இவ்வாறு இப்போது எரிந்து கொண்டிருப்பதற்குக் காரணமாகும்.
இவ்வாறு மணிப்பூரில் நிலைமை மோசமடைந்தி ருப்பதற்கு ஆரம்பத்திலிருந்தே முதல்வர் பைரேன் சிங்தான் காரணமாகும். எனினும் ஒன்றிய அரசாங்க மும், ஆளும் பாஜக-வும் அவரை நீக்குவதற்கு மறுத்து, அவரையே முதல்வராகத் தொடர அனுமதித்திருக் கின்றன. இதன் விளைவாக இப்போது மாநில அரசும் நிர்வாகமும் இயங்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது. வன்முறைக்கு முடிவு கட்ட ஒன்றிய அரசாங்கம் உடனடியாக வலுவாகத் தலையிட வேண்டிய நேரம் இது.
மாநிலத்தில் வாழும் அனைத்து இனக் குழுக்களின் உரிமைகளைப் பாதுகாத்திடக் கூடிய விதத்திலும், அமைதியை மீண்டும் ஏற்படுத்தும் விதத்திலும் ஓர் அரசியல் தீர்வு காண்பதற்காகத் தீவிரமாகப் பணிகளைத் தொடங்கிட வேண்டும். இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கோரியுள்ளது.