கடிதங்கள்மாநில செயற்குழு

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வரும் மாதாந்திர உதவித் தொகையை ரூ.6,000/ ஆக உயர்த்தி வழங்கிடுக!தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ(எம்) கடிதம்!

Uthiyam 6000

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வரும் உதவித் தொகையை உயர்த்தி வழங்கிடவும், உதவித்தொகை கேட்டு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் கால தாமதமில்லாமல் வழங்கிடவும், வயது தளர்வு கமிட்டியை ரத்து செய்யவும்,  AAY குடும்ப அட்டை வழங்கிடவும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (26.11.2024) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதம் கீழே தரப்பட்டுள்ளது.

இதனை தங்களின் மேலான பத்திரிகை / தொலைக்காட்சியில் செய்தி வெளியிட கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,
– வெ. ராஜசேகரன்

அலுவலக செயலாளர்

26.11.2024

பெறுநர்

                மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,

                தமிழ்நாடு அரசு,

                தலைமைச் செயலகம்,

                சென்னை – 600 009.

பொருள்:       தமிழக மாற்றுத்திறனாகளின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றித் தர தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க கோருவது தொடர்பாக:

வணக்கம்.

                தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் சொல்லொணா வேதனையுடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் பிரச்சனைகளை யாரும் கவனிக்காத சூழலில் டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது இவர்களுக்கென்று தனித்துறையை ஏற்படுத்தி நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியது பெரும் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றது. இருப்பினும் தமிழகத்தில் வாழும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் உதவித் தொகையை உயர்த்தி வழங்கி கண்ணியமான வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென தொடர்ந்து போராடி வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளில் பெரும்பாலோனார் ஏழை, எளிய, அன்றாட கூலித் தொழிலாளர்கள் குடும்பங்களைச் சேர்ந்தவர்களே ஆவார்கள். இதனால் இவர்களின் வாழ்நிலை குடும்பத்திற்குள்ளும், வெளியிலும் மிகவும் மோசமான துயரத்திலும், அவமானத்திலும் உலுன்று கொண்டிருக்கும் நிலைமையே உள்ளது. இச்சூழலில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட அண்டை  மாநிலங்களான புதுச்சேரியில் ரூபாய் 4800/-ம், தெலுங்கானாவில் ரூபாய் 4000/-மும், ஆந்திராவில் சாதாரண ஊனமுற்றோருக்கு ரூபாய் 6000/-மும், கடும் ஊனமுற்றோருக்கு ரூபாய் 10,000/-மும், வீட்டை விட்டு வெளியே நடமாட இயலாத கடும் ஊனமுற்றோருக்கு ரூபாய் 15,000/-மும் மாதாந்திர உதவித்தொகையாக வழங்கப்படும் நிலையில் தமிழகத்தில் மட்டும் குறைவான உதவித் தொகை வழங்கப்படுகிறது.

எனவே,

1. தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வரும் மாதாந்திர உதவித் தொகையை ரூ. 6,000 மற்றும் கடும் ஊனமுற்றோருக்கு ரூ. 10,000 ஆக உயர்த்தி வழங்கிடவும்,

2.  உதவித் தொகைக்கு விண்ணப்பித்து உதவித் தொகை கிடைக்காமல் நீண்ட காலமாக காத்திருக்கும் அனைவருக்கும் உடனடியாக உதவித் தொகை வழங்கிடவும்,

3. 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குவதற்காக மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள வயது தளர்வு கமிட்டியை ரத்து செய்வதோடு, வயது வரம்பு பாராமல் அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதாந்திர உதவித் தொகை வழங்கிடவும்,

4.  டெல்லி உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி AAY குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினர் அனைவருக்கும் உடனடியாக AAY குடும்ப அட்டை வழங்கிடவும்

மாற்றுத்திறனாளிகள் துறைக்கு பொறுப்பாக இருக்கும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் டிசம்பர் 3 உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று அறிவிப்புகள் வெளியிட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

இப்படிக்கு,

தங்களன்புள்ள,

(கே. பாலகிருஷ்ணன்)

மாநில செயலாளர்