தீர்மானங்கள்மாநிலக் குழு

2025 ஜூன் 25, 26 மாநிலக்குழு கூட்ட தீர்மானங்கள்

Pc meeting resolution

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் 2025 ஜூன் 25, 26 ஆகிய தேதிகளில் திருச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் அசோக் தாவ்லே, கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மாநில செயலாளர் பெ.சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், என்.குணசேகரன், கே.பாலபாரதி, உள்ளிட்டு மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு;

தீர்மானம் 1:

ஜூலை 9 அகில இந்திய வேலை நிறுத்தம் – வெற்றி பெறச் செய்வீர்!

இந்திய அளவில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் மத்திய சம்மேளனங்கள் சார்பில் ஜூலை 9 அன்று பொது வேலை நிறுத்தத்திற்கான அறைகூவல் விடுத்துள்ளன. ஒன்றிய பாஜக அரசு கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை கடைப்பிடித்து தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை தொடர்ச்சியாக கையாண்டு வருகிறது. போராடி பெற்ற சட்ட உரிமைகளை பறித்து, சுரண்டலைத் தீவிரப்படுத்தும் வகையில் தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களை செய்துள்ளது. அனைத்து மாநில அரசுகளையும் மேற்படிச் சட்டங்களுக்கான விதிகளை உருவாக்கி அமலாக்கிட கட்டாயப்படுத்துகிறது. இந்த சட்ட திருத்தங்கள், தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகரிப்பதற்கும், ஆட்குறைப்பு செய்வதற்கும் ஏதுவானதாக உள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு குறித்து எதுவும் பேசாத ஒன்றாக உள்ளது. எனவே, அனைத்து ஜனநாயக அமைப்புகளும், கார்ப்பரேட் ஆதரவு சட்டத் தொகுப்பை முறியடிக்க போராட வேண்டியது அவசியம்.

மக்களுக்கு சேவை செய்யவும், அரசு உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களையும், பங்குகளையும் கார்ப்பரேட் ஆதரவு பாஜக அரசு, தனியாருக்கு தாராளமாக விற்பனை செய்து வருகிறது. வேலை வாய்ப்பு என்ற பெயரில், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. உண்மையில் பன்னாட்டு நிறுவனங்கள் எதிர் பார்த்த அளவில் வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை. மாறாக, தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைப் பறித்து வருகிறது. கிராமப்புற விவசாயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக புலம்பெயர்ந்து வரும் தொழிலாளர்களுக்கு குறைவான கூலி மற்றும் அதிக வேலை நேரம் என கடுமையாக சுரண்டி வருகிறது. இந்த அணுகுமுறை கட்டுப்படுத்தப்படுவதன் மூலமே, தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற்றம் பெறும்.

கிராமப்புற தொழிலாளர்கள் வாழ்க்கையில் மேம்பாடு காண தேசிய கிராமப்புற வேலை உறுதிச் சட்டத்தினை 200 நாட்களாக உயர்த்தவும், ஒரு நாள் கூலியை ரூ.600 ஆக அதிகரிக்கவும் வேண்டும் என்பது முக்கிய கோரிக்கை. ஆனால் மோடி அரசு இந்த சட்ட அமலாக்கத்திற்கான நிதியை குறைத்த காரணத்தால், கோடிக்கணக்கான மக்கள் இத்திட்டத்தில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர். இந்த கோரிக்கை மீதும் தொழிற்சங்கங்கள் வெளிப்படுத்தும் உணர்வு மிக நியாயமானது. அந்த அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஜூலை 9 அன்று நடைபெற உள்ள வேலை நிறுத்தத்தை ஆதரிக்கிறது. இதர ஜனநாயக சக்திகளும் இந்த வேலை நிறுத்தத்தை ஆதரிக்க வேண்டுகோள் விடுக்கிறது.

அதுமட்டுமல்ல, ஜூலை 9 அன்று வேலை நிறுத்தம் நடைபெறும் நாளில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறும் மறியல் உள்ளிட்ட கிளர்ச்சி போராட்டங்களில் ஐக்கிய விவசாயிகளின் முன்னணி அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகளும் ஆதரித்து பங்கெடுப்பதாக அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் இந்த போராட்டங்களில் நேரடியாக ஈடுபட்டு வெற்றி பெறச் செய்ய வேண்டும் என தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 2;

சமஸ்கிருத மொழிக்கு அதீத நிதி; செம்மொழி தமிழுக்கு அநீதி! மோடி அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தபிறகு, 2014 – 2015 ஆண்டு முதல் 2024 – 2025 வரையிலான பத்தாண்டுகளில் சமஸ்கிருத மொழிக்கு மட்டும் 2,532.59 கோடி ரூபாய் நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய  செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்ட 5 மொழிகளுக்கு ரூ.147.56 கோடி மட்டுமே ஒன்றிய அரசினால் செலவிடப்பட்டுள்ளது.

செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தமிழ் மொழிக்கு மோடி அரசு இந்திய மொழிகள் வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை வழங்கியது ரூ.113.48 கோடி மட்டுமே. இது சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட 22 மடங்கு குறைவாகும்.

இந்த 5 மொழிகளின் வளர்ச்சிக்கு மொத்தமாக ஒதுக்கப்பட்ட தொகையை விட சமஸ்கிருத மொழிக்கு மட்டும் ஒதுக்கப்பட்ட தொகை 17 மடங்கு அதிகமாகும். தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளியாகியுள்ள மேற்கண்ட தகவல் ஒற்றைத் தன்மையை திணிக்கும் ஆர்.எஸ்.எஸ். பாஜகவின் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பினால் இயக்கப்படும் பாஜக தலைமையிலான அரசு அனைத்து நிலைகளிலும் சமஸ்கிருதம் மற்றும் இந்தித் திணிப்பிலேயே முனைப்பாக உள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கை என்பதும் சமஸ்கிருத, இந்தி ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

அரசியல் சட்டத்தின் 8 ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளை சம அந்தஸ்து கொடுத்து ஒன்றிய அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை மோடி அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.

ஆர்.எஸ்.எஸ் கருத்தியல் அடிப்படையிலேயே சமஸ்கிருதத்திற்கு அதீத நிதியும், இன்றைக்கும் வாழ்வியல் மொழியாக திகழும் தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளுக்கு மிகக் குறைவான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழர் பண்பாட்டின் தொன்மையை எடுத்துரைக்கும் கீழடி அகழ்வாய்வு அறிக்கையை வெளியிட மோடி அரசு மறுப்பதும் தமிழ் மொழி மீதும், தமிழ்நாட்டு மக்கள் மீதும், இந்தியாவின் பன்முக பண்பாட்டு வளர்ச்சி மீதும் ஒன்றிய அரசுக்கு இருக்கும் வன்மமே ஆகும்.

தமிழ் மொழி மீது பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் வெளிப்படுத்தும் “புகழ் மொழிகள்” வெறும் போலி நாடகமே என்பதை இப்போது வெளியாகியுள்ள புள்ளி விவரங்களும் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

ஒன்றிய அரசின் இத்தகைய பாரபட்ச நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ் உள்ளிட்ட அனைத்து செம்மொழிகளுக்கும், இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிகளுக்கும் நியாயமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று மாநிலக்குழு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.

Leave a Reply