வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்குவிப்புத் திட்டத்தை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
கூட்டுக்களவாணி முதலாளிகளுக்கு சலுகை கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பணத்தை மடைமாற்றும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள வேலை வாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு எதிர்க்கிறது.
தொழிலாளர்களின் பணத்தைக் காவு கொடுத்து தன்னுடைய கூட்டுக்களவாணி முதலாளிகளுக்கு சலுகை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒன்றிய அரசாங்கத்தால் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது.
இந்த ‘வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைத் திட்டம்’ என்பது இளைஞர்களை ஏமாற்றுவதற்காக, வேலை உருவாக்கம், வேலைவாய்ப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்துவதாக வாக்குறுதி அளித்து, பொது நிதியை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மடை மாற்றும் மற்றொரு ஏமாற்றுத் திட்டமாகும். இந்தத் திட்டம் பலவீனமான மற்றும் நிலையற்ற வேலைகளை ஊக்குவிக்கிறது. முதலீட்டுச் செலவு, உற்பத்திச் செலவுகள், தொழிலாளர் செலவுகள் மற்றும் உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு முதலாளிகளின் சட்டப்பூர்வ பொறுப்புகளுக்கு பொதுக் கருவூலத்திலிருந்து மானியம் வழங்குகிறது.
கிராமப்புற ஏழைகளுக்கு பயனளித்துவரும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்திற்கான ஒதுக்கீட்டை பாஜக தலைமையிலான அரசாங்கம் குறைத்து வருகிறது, மேலும் நகர்ப்புறங்களுக்கு அத்தகைய வேலைவாய்ப்பு உறுதிச்சட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் புறக்கணித்து வருகிறது. அதே சமயத்தில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை என்ற பெயரில் பெரும் சலுகைகளை வழங்கிட முன்வந்திருக்கிறது.
கண்ணியமான வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் குறைந்தபட்ச ஊதியம், வேலை பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புடன் கூடிய கண்ணியமான வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்; காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்; சுகாதாரம், கல்வி, பொதுப் போக்குவரத்து போன்ற பொதுச் சேவைகளை விரிவுபடுத்த வேண்டும்; கார்ப்பரேட் வர்க்கத்திற்கு மானியம் வழங்குவதற்குப் பதிலாக போதுமான நிதியை ஒதுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. அதேபோல வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்குவிப்புத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாத்திட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது.