செய்தி அறிக்கை

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்!தமிழக அரசுதலையிட்டு சுமூகத் தீர்வு காண வேண்டும்!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!!

Ps copy 2

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தமிழகத்தில் மிக முக்கியமான பொதுத்துறை நிறுவனமாகும். சுமார் 1.50 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகள் முழுமையாக தீர்க்கப்படவில்லை. போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு ஓய்வுகால பலன்கள் உரிய காலத்தில் வழங்கப்படுவதில்லை. அதேபோல், விலைவாசி உயர்வை ஈடுகட்ட வழங்கப்படும் அகவிலைப்படி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது; மருத்துவ காப்பீடும் இல்லை. பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு பல்வேறு பணப்பலன்கள் நிலுவையில் உள்ளது. இக்கோரிக்கைகளை தீர்க்க வலியுறுத்தி தொடர் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

மேற்கண்ட சூழ்நிலையில், பணி ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள 25 மாத ஓய்வுகால பலனை வழங்க வேண்டும், ஒப்பந்த நிலுவை தொகை வழங்க வேண்டும், 01.04.2003க்கு பின் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு சார்பில் கடந்த 18.08.2025 முதல் தமிழகம் முழுவதும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. காத்திருப்பு போராட்டத்தையொட்டி தொழிற்சங்கங்களை அழைத்து பேசி பிரச்சனைக்கு சுமூகத் தீர்வுகாண தமிழக அரசு முன்வராமல், சென்னை நகரத்தில் காத்திருக்கும் போராட்டத்திற்கு  காவல்துறை மூலம் அனுமதி மறுத்துவிட்டது. இந்த அணுகுமுறை ஏற்கத்தக்கதல்ல. தற்போது பணிமனை முன்பு போராட்டம் நடைபெறுகிறது. மற்ற மாவட்டங்களிலும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த 18.08.2025ந்தேதி 10 மாதத்திற்கான ஓய்வூதிய பலன்கள் வழங்கப்பட்டுள்ளது வரவேற்கதக்கது. மீதி உள்ள 15 மாதங்களுக்கு ஓய்வுகால பலன், நிலுவைத் தொகை எப்போது வழங்கப்படும் என்பது சம்பந்தமாக தொழிற்சங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு கண்டு காத்திருக்கும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

(பெ. சண்முகம்)

மாநில செயலாளர்