செய்தி அறிக்கைமாநில செயற்குழு

மறைந்த பின்னரும் மானுட மேம்பாட்டுக்காக சி.பி.ஐ(எம்) உடல்தான இயக்கம் சீத்தாராம் யெச்சூரி நினைவு நாளில் தொடங்குகிறது 

Sy

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் செப்டம்பர் 8-9, ஆகிய தேதிகளில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். முத்துக்கண்ணன் தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே. பாலகிருஷ்ணன், உ. வாசுகி, மாநில செயலாளர் பெ. சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், க. பாலபாரதி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

மறைந்த பின்னரும் மானுட மேம்பாட்டுக்காக சி.பி.ஐ(எம்) உடல்தான இயக்கம் சீத்தாராம் யெச்சூரி நினைவு நாளில் தொடங்குகிறது 


மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர், தோழர் சீத்தாராம் யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவுநாள் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அந்த நாளில், பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

தான் வாழ்ந்த காலத்தில், மார்க்சிய லட்சியங்களுக்காகவும், நாட்டின் விடுதலையை பாதுகாப்பதற்காகவும் இடைவிடாமல் போராடிய தோழர் சீத்தாராம் யெச்சூரி, தனது மறைவுக்குப் பின்னர், தனது உடலை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ ஆராய்ச்சிக்காக ஒப்படைக்க முடிவு செய்தார். இதற்கு முன், சி.பி.ஐ(எம்) நவரத்தின தலைவர்களில் ஒருவரும், மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான ஜோதிபாசு, முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா உள்ளிட்ட தலைவர்கள் தமது உடலை மருத்துவ கல்லூரிகளுக்கு ஆராய்ச்சிக்காக வழங்கியுள்ளனர். நமது மகத்தான தலைவர்கள் வாழ்க்கையில் மட்டுமல்ல, மறைந்த பின்னரும் தமது உடல் மானுட மேம்பாட்டுக்காக பயன்பட வேண்டும் என்ற உன்னதமான லட்சியத்தை நமக்கு வழங்கியுள்ளார்கள். அதைப் பின்பற்றி ஏராளமான தோழர்களும் இந்த நடைமுறையைப் பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.

உடல்தானத்தால் மாணவர்களுக்கு உடற்கூறு குறித்து படிப்பதற்கும், பயிற்சி பெறுவதற்கும் பயன்படுகிறது. குறிப்பிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை பரிசோதனை செய்து அந்த நோய்களால் உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிந்து சிகிச்சை முறைகளை உருவாக்க முடிகிறது. மேலும், திசுக்கள் அல்லது செல்களில் ஏற்படும் மாற்றங்களை கண்டறிந்து சிகிச்சை மற்றும் மருந்துகள் பற்றிய ஆய்வுகளையும் நடத்த முடிகிறது.

இந்த நிலையில், தோழர் சீத்தாராம் யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவுநாளில் ‘உடல் தான இயக்கத்தை’ சி.பி.ஐ(எம்) முன்னெடுக்கிறது. தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் விருப்பம் உள்ள  கட்சி தோழர்களும், ஆதரவாளர்களும்  தங்கள் இறப்புக்குப் பின்னர் தம் உடல்களை மருத்துவ ஆராய்ச்சிக்காக வழங்க ஒப்புதல் அளிக்கும் படிவத்தை, குடும்பத்தாரின் சம்மதத்தோடு வழங்கிட கட்சியின் மாநில செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது.

ஏற்கனவே ரத்த தானம், கண் தானம் போன்றவை குறித்து ஓரளவு விழிப்புணர்வு உள்ளது. மூளைச் சாவு அடைந்தவர்கள் உடல் உறுப்புகளை தானம் செய்து, பலரின் உயிரை காப்பாற்றுவதை பார்த்து வருகிறோம். இருப்பினும், இறந்த உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு வழங்குவது மிக முக்கியமான சமூக பங்களிப்பாகும். இயற்கை மரணம் அடைந்தவர்கள், கண் தானம் செய்தாலும் உடல் தானம் செய்ய முடியும். எனவே, சாத்தியமுள்ள அனைவரும் உடல் தான இயக்கத்தில் இணைந்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.

எனவே, தமிழ்நாடு முழுவதும் கட்சியின் சார்பில் மாவட்டங்களில் நடைபெறவுள்ள உடல் தான முகாமில் விருப்பமுள்ள தோழர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று உடல் தானம் செய்து தமிழகத்தில் ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கிட வேண்டுமென மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

(பெ. சண்முகம்)

மாநில செயலாளர்