அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், பெரியநாகலூர் ஊராட்சிக்குட்பட்ட காட்டுப்பிரியங்கம் பாலக்கரையில் சுமார் 100 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து இருப்பதை கண்டித்தும், மக்கள் பயன்பாட்டிற்கு பொதுப்பதையை மீட்டெடுக்கவும் இன்று (03.10.2025) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அவ்வூராட்சி மக்களும் இணைந்து நடத்திய போராட்டத்தில் அரியலூர் மாவட்ட காவல்துறையினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களையும், பொதுமக்களையும் கடுமையாகத் தாக்கி, வலுக்கட்டாயமாக கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்துள்ளனர். காவல்துறையின் இந்த தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
அரியலூர் வட்டம், பெரியநாகலூர் ஊராட்சிக்குட்பட்ட, காட்டுப்பிரிங்கியம் பாலக்கரை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மூன்று தலைமுறைகளாக பாலக்கரை கிராமத்திற்கு செல்வதற்காக பொதுப்பாதையை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை தனிநபர் ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்துள்ளதால் பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு செல்வதற்கு பெரிதும் சிரமப்பட்டனர். இந்த பொதுப் பாதையை மீட்டுத்தரக் கூறி, பல கட்ட போராட்டங்கள் நடத்தியதுடன், மாவட்ட அரசு அதிகாரிகளையும் சந்தித்து புகார் மனு அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த பொதுப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டதால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், வேலைகளுக்கு செல்லும் பொதுமக்கள், முதியவர்கள் உள்ளிட்டு அனைத்துதரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், இந்த பொதுப்பாதையை மீட்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், பொதுமக்களும் இணைந்து இன்று போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் உள்ளிட்டு 150 பேரை அரியலூர் மாவட்ட காவல்துறையினர் தாக்கியதுடன், வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர். பொதுப்பாதையை ஆக்கிரமித்தவர்களும் கல்வீசியுள்ளனர். இதில் சித்ரா, ஆனந்தவள்ளி, மங்கள ராஜா ஆகியோர் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நியாயமான கோரிக்கைகளுக்காக நடைபெற்ற இந்த போராட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு சுமூகத் தீர்வு காண்பதற்கு பதிலாக ஆக்கிரமிப்பாளர்களுடன் இணைந்து காவல்துறை மேற்கொண்ட மோசமான தாக்குதல் நடவடிக்கை எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல.
எனவே, பாலக்கரை பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை தனியார் ஆக்கிரமிப்பாளரிடமிருந்து உடனடியாக மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட வருவாய்த்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களையும், பொதுமக்களையும் இழிவாக பேசி, தாக்கி கைது செய்த அரியலூர் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் தலைமையிலான காவல்துறையினர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், கல்வீச்சு மற்றும் போலீஸ் தாக்கியதில் காயமடைந்து சிகிச்சை பெறும் மக்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கிட வேண்டுமெனவும், கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
(பெ. சண்முகம்)
மாநில செயலாளர்







