இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை என்றுமே மதிக்காத, ஏற்றுக் கொள்ளாத ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களுக்காக ஒன்றிய அரசு, ரூபாய் 100 சிறப்பு தபால் தலை, மற்றும் ரூபாய் 100 நாணயம் ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுவது, அரசியல் அமைப்புச் சட்டத்தையே அவமானப்படுத்தும் செயலாகும்.
பிரிவினைவாதத்தை வளர்க்கும் RSSன் – ஹிந்துத்துவ ராஷ்டிரத்தின் அடையாளமாக, அந்த அமைப்பு பிரச்சாரப்படுத்தும் பாரத மாதா உருவத்தை குறிப்பிட்டு அந்த சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது மிகுந்த கண்டனத்திற்குரியது.
1963ல் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் தங்கள் சீருடை உடன் நிற்பது போன்ற காட்சி அதில் காட்டப்பட்டுள்ளது வரலாற்றுக்கு முரணானது;
இந்தோ-சீனப் போரின் போது, ஆர்எஸ்எஸ்ஸின் தேசப்பற்றினை மெச்சி அவர்களை பிரதமர் நேரு அழைத்ததாக, அந்த சிறப்புப்பேரணியில் அவர்கள் கலந்து கொண்டதாகக் கட்டமைக்கப்பட்ட செய்தியும் தவறானது.
அன்று நிகழ்ந்த பேரணியில் லட்சோப லட்சம் பொது மக்கள் கலந்து கொண்டனர், அதில் சீருடை அணிந்த ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் இருந்தனர் என்பது எங்கும் பதிவு செய்யப்படவில்லை. அப்படி இருந்தால் அது தற்செயலானதாக தான் இருக்க முடியும்.
பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு ஆதரவாக, அவர்கள் மேற்கொண்ட பிரித்தாளும் சூழ்ச்சிக்கு ஆதரவாகவே இருந்ததும், இந்திய விடுதலைப் போரில் இருந்து முற்றிலும் விலகியே இருந்ததுமான ஆர்எஸ்எஸ் அமைப்பு தன் அப்போதைய நடவடிக்கைகளை மறைக்க முயற்சிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றே இந்த சிறப்பு வெளியீடுகள்.
சுதந்திர இந்தியாவில் நிகழ்ந்த கொடுமையான மதவாத வன்முறை செயல்களில் ஆர் எஸ் எஸ் பங்கு எத்தகையது என்பதை அரசால் உருவாக்கப்பட்ட ஆணையங்களின் அறிக்கைகள் மூலம் அறிந்து கொள்ள இயலும்.
இன்றும் RSSம் அதன் அமைப்புகளும் மனுவாத சித்தாந்தத்தை ஆதாரமாகக்கொண்டு சிறுபான்மை, விளிம்பு நிலை சமூகத்தினரை குறி வைத்து தாக்குவதையும் அதிகமாக காண முடிகிறது.
பிரதமர் தனது பதவியை பயன்படுத்தி ஆர்எஸ்எஸ் அமைப்பின் உண்மை வரலாற்றை மறைக்க முயலும் செய்கையே இதன் மூலம் வெளிப்படுகிறது. பிரதமர் தான் வகிக்கும் அரசியலமைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட பதவியை தரம் தாழ்த்தும் செயலை செய்வது அம்பலமாகிறது.







