செய்தி அறிக்கை

தமிழ்நாட்டு மக்கள் மீது வன்மம் கக்கும் பிரதமர் மோடி!

1

தேர்தல் ஆதாயத்திற்காக தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் நேசிப்பது போல வேஷம் கட்டும் பிரதமர் நரேந்திர மோடி வேறு மாநிலங்களில் தேர்தல் ஆதாயத்திற்காக தமிழ்நாட்டின் மீதும், தமிழக மக்கள் மீதும் வன்மம் கக்குவதையும், அவதூறு பொழிவதையும், இழிவு செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஒடிசா சட்டமன்ற தேர்தல்களின் போது ஒரு தமிழன் ஒடிசாவை ஆளலாமா என்று இனவெறி கிளப்பினார். பூரி ஜெகநாதர் கோயில் கருவூலத்தின் சாவி தமிழ்நாட்டில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது என்று அவதூறு செய்து இழிவுபடுத்தினார். தற்போது, பீகாரில் தேர்தல் ஆதாயத்திற்காக பீகாரிகள் தமிழ்நாட்டில் சித்தரவதை செய்யப்படுகிறார்கள் என்று பேசியிருக்கிறார்.

கீழடி ஆய்வுகளை அங்கீகரிக்க மறுப்பது, தமிழ்நாட்டிற்கு உரிய சட்டப்படியான நிதிகளை வழங்க மறுப்பது என்பதில் தொடங்கி இப்போது தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்தும் நிலைக்கும் அதன் மூலம் இதர மாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டின் மீது பகை உணர்வை தூண்டுவதற்கும் முயற்சிக்கிறார்.

தனது ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்க முடியாத இயலாமையில் சில நேரங்களில் இஸ்லாமியர்கள், சில நேரங்களில் கிறித்தவர்கள், சில நேரங்களில் அந்நிய நாட்டினர் என்று பகை உணர்வை தூண்டிய நரேந்திர மோடி தற்போது இனரீதியாக தமிழ்நாட்டின் மீது இந்த வன்மத் தாக்குதலை தொடங்கியிருக்கிறார். பிரதமரின் இந்தப் பேச்சு அவர் வகிக்கும் பதவிக்கு பொருத்தமானதல்ல என்று சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

நரேந்திர மோடியின் இந்த பேச்சை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதோடு, தேர்தல் ஆணையம் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது.

தோழர் பெ.சண்முகம், மாநில செயலாளர், சிபிஐ(எம்)

Leave a Reply