செய்தி அறிக்கை

தொடரும் சாதி ஆணவப்படுகொலை சிபிஐ(எம்) கண்டனம்!

Cpim wbs copy

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் ஆர் காமாட்சிபுரத்தை சேர்ந்த ஆர்த்தி என்ற பெண்ணும், கணபதி பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் என்ற இளைஞனும் சாதி மறுப்பு  திருமணம் செய்து கொண்டுள்ளனர். ராமச்சந்திரன் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர், ஆர்த்தி பிரமலைக்கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர். பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்குள்ளேயே நடைபெற்ற இந்த சாதி மறுப்புத் திருமணத்தை ஏற்கமுடியாத ஆர்த்தியின் தந்தை சந்திரன்,  ராமசந்திரனை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளார்.  இக்கொடூரமான சாதி ஆணவப்படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இக்கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

மேலும், தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் சாதி ஆணவப்படுகொலைகள் நடந்து கொண்டேயிருக்கின்றன. எனவே தான் சாதி ஆணவப்படுகொலைக்கு எதிரான தனிச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்துகிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டு உழைக்கும் மக்களிடையே வளர்ந்து வருகிற சாதி வெறி மிகுந்த கவலையளிக்கிறது. இவ்வாறான சாதி வெறி நடவடிக்கைகளை பொது சமூகமும், அரசியல் கட்சிகளும் மௌனமாக கடந்து விடக்கூடாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக் காட்டுகிறது. காதல் கணவனை இழந்து தவிக்கும் ஆர்த்தி அவர்களுக்கு இழப்பீடு வழங்கவும், அரசு வேலை வழங்கவும் தமிழ்நாடு அரசு முன்வரவேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.


(பெ. சண்முகம்)
மாநில செயலாளர்