செய்தி அறிக்கை

அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்! சிபிஐ(எம்) ஆதரவு!!

Cpim WBS copy

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் நீண்ட வரலாறு கொண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்கள், 7வது ஊதியக்குழு நிலுவைத் தொகைகளை வழங்குதல், அயற்பணியிட ஆசிரியர்கள் அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களிலேயே உள்ளெடுப்பு செய்தல், ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணப் பயன்கள் உடன் வழங்குதல், ஆட்சிக்குழு-கல்விக்குழுக்களில் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்குதல், காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்தல்  உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி 10.11.2025ந் தேதி முதல் காலவரையற்ற உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் இரவு-பகலாக ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி ஆசிரியர்களின் குடும்பங்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் போராட்டம் நீடிப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நியாயமான கோரிக்கைகளுக்காக தொடர் போராட்டங்களை மேற்கொண்டும், அரசின் சார்பில் எவ்வித தீர்வும் ஏற்படாத நிலையில் தற்போது உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு பல்கலைக்கழக ஆசிரியர்கள்  தள்ளப்பட்டுள்ளனர். வாழ்வாதார கோரிக்கைகளுக்காக போராடும் பல்கலைக்கழக ஆசிரியர்களின் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக ஆசிரியர்களை தமிழ்நாடு அரசு நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

(பெ. சண்முகம்)

மாநில செயலாளர்