அபாயகரமான தொழில்களில் பெண் தொழிலாளர்களை அனுமதிக்கும் வகையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள வரைவுச் சட்டத் திருத்த அறிவிப்பாணையைத் திரும்ப பெற வலியுறுத்தி, உழைக்கும் பெண்கள் சார்பில் நாளை (நவம்பர் 29, 2025) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு செய்துள்ளனர். உழைக்கும் பெண்களின் நியாயமான இந்த கோரிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.
ஆபத்தான தொழில்களான மின்னாற்பகுப்பு, கண்ணாடி உற்பத்தி, ஈயம் தொழில்கள், வாயு மற்றும் பெட்ரோலியம் உற்பத்தி, சாய உற்பத்தி, பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் ரசாயனங்களை கலக்கும் வேலை, பூச்சிக்கொல்லிகள் மற்றும் உர உற்பத்தி போன்ற 20 தொழில்களில் பெண்கள் ஈடுபட தமிழ்நாடு தொழிற்சாலைகள் சட்டம் கடந்த 75 ஆண்டுகளாக தடை விதித்துள்ளது. இந்த தொழில்களினால் பெண் உழைப்பாளிகளுக்கு பல்வேறு விதமான உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இரத்தப் புற்றுநோய், சிறுநீரகம் சேதம், கருப்பை புற்றுநோய், குழந்தைகளின் பிறவிக்குறைபாடு, மூளை வளர்ச்சி குறைவு உள்ளிட்டு பல்வேறு கொடிய நோய்களுக்கு பெண்கள் பலியாகும் அபாயம் உள்ளது. இந்நிலையில், தொழிற்சங்கங்களிடம் எவ்வித கலந்தாலோசனையும் செய்யாமல், தமிழக அரசு இந்த அபாயகரமான தொழில்களில் பெண் தொழிலாளர்களை அனுமதிக்கும் வகையில் வெளியிட்டுள்ள ஆலோசனை எவ்விதத்திலும் ஏற்கத்தக்கதல்ல. இது உழைக்கும் பெண்களுக்கு பேராபத்தாக அமையும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது.
எனவே, தமிழக உழைக்கும் பெண்களின் உணர்வை கருத்தில் கொண்டு தடை விதிக்கப்பட்டிருந்த 20 அபாயகரமான தொழில்களில் பெண்களை ஈடுபடுத்தும் வரைவு அறிவிப்பாணையை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. தொழிலாளர்கள் தொடர்பான முக்கிய திருத்தங்களை அரசு மேற்கொள்வதற்கு முன்பாக தொழிற்சங்கங்களின் கருத்துக்களை அறிந்து ஜனநாயகப் பூர்வமாக முடிவெடுக்கும் அணுகுமுறையை தமிழ்நாடு அரசு கடைபிடிக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.
(பெ.சண்முகம்)
மாநில செயலாளர்







