செய்தி அறிக்கை

கோவையில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு சிபிஐ(எம்) கண்டனம்

11

கோவை விமானநிலைய பகுதியில் நேற்றிரவு (2.11.2025) கல்லூரியில் பயிலும் இளம் பெண் ஒருவர் தனது நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சமூக விரோதிகள் மூன்று பேர் கார் கண்ணாடியை அரிவாளைக் கொண்டு உடைத்து, இளம் பெண்ணின் நண்பர் வினித்-யை வெளியே இழுத்துத் தாக்கியுள்ளனர். இதில் அவர் மயக்கமடைந்துள்ளார். இளம்பெண்ணையும் தாக்கி 500 மீட்டருக்கு அப்பால் தூக்கிசென்று கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு தப்பியுள்ளனர். வினித் மயக்கம் தெளிந்து காவல்துறைக்கு தகவல் சொல்லி, காவல்துறை வந்து மீட்டு சிகிச்சைக்காக இளம் பெண்ணையும், வினித்தையும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். விமானநிலையம் அமைந்துள்ள பகுதிக்கு அருகாமையிலேயே  இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது.

இந்த கொடிய குற்றத்தை செய்த கயவர்களை உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெறுவது மிகுந்த கவலையளிக்கிறது. இதை தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது.

(பெ. சண்முகம்)

மாநில செயலாளர்

Leave a Reply