அரசியல் தமைமைக்குழுசெய்தி அறிக்கை

தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்க! மோடி அரசுக்கு சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்

Cpim WBS copy

29 தொழிலாளர் சட்டங்களை ஒழித்துக்கட்டிய மோடி அரசு

தொழிலாளர் சட்டத்தொகுப்புகள் நான்கும், இதுவரை தொழிலாளர்களை ஓரளவிற்குப் பாதுகாத்து வந்த, கடும் போராட்டத்தினால் பெறப்பட்ட 29 தொழிலாளர் சட்டங்களை ஒழித்துக் கட்டுகின்றன. பல வரம்புகள் இருந்தபோதிலும், ஊதியங்கள், வேலை நேரம்,  சமூகப் பாதுகாப்பு, தொழிற்சாலைகளில் பாதுகாப்பு, ஆய்வுக்கு  உட்படுத்தும் முறைமைகள் (Inspection–compliance mechanisms), மற்றும் தொழிலாளர்களின் கூட்டுபேர சக்தி ஆகியவை ஓரளவுக்கு நடைமுறையில் இருந்தன. சட்டங்களை எளிமைப்படுத்துவதற்குப் பதிலாக, புதிய சட்டத் தொகுப்புகள் முதலாளிகளுக்குச் சாதகமான முறையில், தொழிலாளர்கள் இதுநாள் வரை அனுபவித்து வந்த பல உரிமைகளை நீர்த்துப்  போகச் செய்யவும், ஒழித்துக்கட்டவும் முற்படுகின்றன.

போராட்டங்கள் கிரிமினல் குற்றங்களாக அறிவிப்பு

தொழிலாளர் சட்டத்தொகுப்புகள் வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டை அதிகரிக்கும் என்ற அர சாங்கத்தின் கூற்று முற்றிலும்  ஆதாரமற்றதாகும். மூலதனத்தின்  தாக்குதலுக்கு எதிராகத் தொழிலாளர்களைப் பாதுகாப்பற்றவர்களாக மாற்றும் விதத்திலேயே இந்தச்  சட்டத்தொகுப்புகள் வடிவமைக்கழு ழுட்டு இருக்கின்றன. தொழிலாளர் உரிமைகளின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய அனைத்து அர்த்தமுள்ள விதி முறைகளும் இந்தத் தொழிலாளர் சட்டத் தொகுப்புகளில் ரத்து செய்யப் பட்டிருக்கின்றன. இவற்றின் மூலமாகத் தேசிய மற்றும் சர்வதேச மூலதனத்தை ஈர்ப்பதே இந்த அரசாங் கத்தின் நோக்கமாகும். மேலும்  தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் செய்யும் உரிமையைப் பறிக்கவும், தொழிலாளர் வர்க்கத்தின் எந்தவொரு கூட்டு நடவடிக்கையையும் கிரிமினல் குற்றமாக்கவும் இந்தச் சட்டத்தொகுப்புகள் வகை செய்துள்ளன.

கார்ப்பரேட் காட்டாட்சிக்கு வழிவகுக்கும் சட்டங்கள்

தொழிலாளர் சட்டத்தொகுப்புகள், ஒட்டுமொத்தமாக, அரசாங்கம் மற்றும் நிர்வாகத்தின் ஆதரவுடன் தொழிலாளர்களின் உரிமைகளை துவம்சம் செய்து, கார்ப்பரேட்டுகளுக்கு ஒருதலைப்பட்சமான அதிகாரங்களை அளிப்பதன் மூலம் ஒரு காட்டாட்சியை (Jungle Raj) நிறுவ முயற்சிக்கின்றன. இந்தச் சட்டத்தொகுப்புகள் அனைத்தையும், சம்பந்தப்பட்டவர்களுடன், குறிப்பாகத் தொழிலாளர்களுடன் உண்மையான முத்தரப்பு ஆலோசனை இல்லாமல், ஜனநாயக மற்றும் கூட்டாட்சி விதிமுறைகளை மிக மோசமாக மீறி அமல் படுத்த முன்வந்திருப்பதை, அரசியல் தலைமைக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

அனைத்து ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும்!

அரசாங்கம் இந்தச் செயல்முறை முழுவதும் தொழிற்சங்கங்களை ஓரங்கட்டிவிட்டு, நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதமும் இன்றி அவசர அவசரமாக இவற்றை நிறைவேற்றியது. இவை தொழிலாளர் நலன்களுக்கு எதிரானவை என்று  உறுதியான ஆவண ஆதாரங்களுடன் அளிக்கப்பட்ட ஆட்சேபனைகளையும் அது ஆணவத்துடன் நிராகரித்தது.

இந்தத் தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மேலும் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், விரிவான அளவில் தொழிலாளர் உரிமைகளை  மீட்டெடுக்கவும், அரசாங்கத்தின் இந்த எதேச்சதிகார நடவடிக்கைகளை முறியடித்திடவும், அனைத்துத் தொழிற்சங்கங்களும், ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரண்டு  போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவி அழைக்கிறது.