சென்னை புழுதிவாக்கம் அரசு தொடக்கப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, அக்.8 அன்று வகுப்பறையில் மை சிந்தியுள்ளார். இதனை பார்த்த பள்ளித் தலைமை ஆசிரியை இந்திராகாந்தி, துடைக்கும் தடியை (மாப் ஸ்டிக்) கொண்டு மாணவியை உடல் முழுவதும் கடுமையாக தாக்கியுள்ளார்.
கடும் பாதிப்புக்குள்ளான மாணவியை அக்.9ந் தேதி அவரது பெற்றோர் தனியார் மருத்துவமனையிலும் பின்னர், தலையில் ரத்தக் கசிவு இருந்ததையடுத்து அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார். இதனையடுத்து அக்.23 அன்று பெற்றோர்கள் மடிப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் மீது காவல்துறையினர் வழக்குப்பதியவில்லை. இதனிடையே மாநகராட்சி ஆணையர் தலைமை ஆசிரியை தற்காலிக நீக்கம் செய்தார்.
இந்த நிலையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு அக்.27 அன்று போராட்டம் நடத்தினர். அதன் பின்பு சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் தலைமை ஆசிரியை மீது வழக்கு பதியப்பட்டது. பாதிக்கப்பட்ட குழந்தை தலித் சமூகத்தை சேர்ந்தவராக இருந்தபோதும், வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிய மறுத்தனர். இந்த சம்பவம் குறித்து அக்.30 அன்று நடைபெற்ற சென்னை மாநகராட்சி கூட்டத்தில் சிபிஐ(எம்) உறுப்பினர் எம்.சரஸ்வதி எழுப்பினர்.
மேலும், இந்த சம்பவத்தை கண்டித்து, கூட்டம் நடத்த 2 முறை அனுமதிக்கோரியும் காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை. இதனையடுத்து வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதியக்கோரி காவல்துறையின் தடையை மீறி இன்று (நவ. 3) மடிப்பாக்கம் கூட்டுச்சாலையில் கண்டனக் கூட்டத்தை தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் தொடங்கினர்.
முன்னணியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த இந்தப்போராட்டத்தில், தலைமை ஆசிரியையின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உயர்தர சிகிச்சை வழங்க வேண்டும், 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், ஆசிரியை இந்திரா காந்தியை பணி நீக்கம் செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவியின் உயர்கல்வி வரையிலான பொறுப்பை அரசு ஏற்க வேண்டும் என முழக்கமிட்டனர்.
இதனையடுத்து அனைவரையும் காவல்துறையினர் கைது செய்ய முற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக சாலை மறியல் நடைபெற்றது. பெண்களையும், மாணவர்களையும் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராடியவர்கiளை அடித்து இழுத்து காவல்துறை கைது செய்ததை சிபிஐ(எம்)ன் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதுடன், தலைமை ஆசிரியையின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உயர்தர சிகிச்சையும் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்குவதுடன் அந்த மாணவியின் உயர்கல்வி வரையிலான பொறுப்பை அரசு ஏற்க வேண்டுமென வலியுறுத்துகிறோம். மேலும், ஆசிரியை இந்திரா காந்தியை பணி நீக்கம் செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் தமிழ்நாடு மாநிலசெயற்குழு தமிழ்நாடு அரசு வலியுறுத்துகிறது.
(பெ. சண்முகம்)
மாநில செயலாளர்







