அண்மையில் நடந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தில்லுமுல்லுகளும், அரசு எந்திரத்தின் துஷ்பிரயோகமும், மதவெறிப் பிரச்சாரமும் எவ்வாறு ஜனநாயக ரீதியிலான மக்கள் பிரச்சனைகளைத் தோற்கடித்தன என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான அணுகுமுறையும் (SIR), பணபலமும் எவ்வாறு தேர்தலைக் கையாண்டன என்பது குறித்துக் கவலை தெரிவித்துள்ள கட்சி, பாஜகவை அரசியல் ரீதியாகவும், மக்கள் போராட்டங்களின் மூலமாகவும் முறியடிக்க எதிர்க்கட்சிகள் அனைத்தும் உடனடியாகக் கூட்டுப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளது.
பீகார் தேர்தல்
பீகார் சட்டமன்றத் தேர்தலில் 67 சதவீத வாக்காளர்கள் பங்கேற்றிருக்கின்றனர். இது முந்தைய தேர்தலை விட 9.6 சதவீதம் அதிகமாகும். குறிப்பிடத்தக்க வகையில், 71.6 சதவீத பெண்கள் வாக்களித்திருக்கின்றனர். இது பெண்கள் அரசியல் பங்கேற்பில் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்திருப்பதைக் குறிக்கிறது. வாக்குப் பகிர்வு தரவு காட்டுவது போல், தேசிய ஜனநாயகக் கூட்டணி, 2024 மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடும்போது அதிக வாக்குகளைப் பெறவில்லை என்றாலும், இப்போது அதன் எண்ணிக்கையை அதிகரிக்க முடிந்திருக்கிறது. ஆளும் கூட்டணி முழு அரசு இயந்திரத்தையும் பயன்படுத்தியது, பல்வேறு தில்லுமுல்லுகளை மேற்கொண்டது, அதிக அளவு பணத்தையும், மாநிலத்திற்கு வெளியில் இருந்து கொண்டு வரப்பட்ட ஏராளமான ஊழியர்களையும் பயன்படுத்தியது. பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் உட்பட அதன் தலைவர்களின் மதவெறி, சாதி வெறிப் பேச்சுகள் மக்கள் மத்தியில் பயன் ஏற்படுத்தி இருக்கின்றன. இவற்றை கார்ப்பரேட் ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கியதன் காரணமாக மகா கூட்டணியால் எழுப்பப்பட்ட மக்கள் பிரச்சனைகள் வெளிவராமல் மூழ்கடிக்கப்பட்டது. பாஜக-வைத் தோற்கடிக்க வேண்டுமானால், எதிர்க்கட்சிகள் அதன் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக, மேலும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு கூட்டுப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதையே பீகார் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. தேர்தல் ஆணையத்தின் பாகுபாடான அணுகுமுறை, சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) திடீர் துவக்கம் மற்றும் இவற்றுக்குப் பின்னால் உள்ள இதர காரணிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆராய்ந்திடும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் களுக்கும் பிற எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்த பீகார் மக்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
புதுதில்லியில் குண்டுவெடிப்பு
புதுதில்லியில் நடந்த குண்டுவெடிப்பு, தாக்குதலை நடத்தியதில் பரவலான ஒரு வலைப்பின்னல் இருந்திருப்பதை வெளிப்படுத்தி இருக்கிறது. மக்களுக்கு பாதுகாப்பை வழங்குவதிலும், இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்களைத் தடுப்பதிலும் அரசாங்கம் தோல்வியடைந்திருப்பது, இந்த சம்பவத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தப் பட்டிருக்கிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, ‘ஆபரேஷன் சிந்தூர்’ பயங்கரவாத உள்கட்டமைப்பை அழித்ததாக, குறிப்பாக ஜெய்ஷ்-இ-முகமது தலைமையகத்தை குறிவைத்து அழித்துவிட்டதாக அரசாங்கம் கூறி வந்தது. எனினும், புதுதில்லியில் நடைபெற்றுள்ள இந்த குண்டுவெடிப்பு இந்தக் கூற்றுக்களை முறியடித்துள்ளது. ஏனெனில் அரசாங்கமே சமீபத்திய தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது தான் காரணம் என்று கூறியுள்ளது. பொறுப்பான பயங்கரவாத வலைப்பின்னல்க ளைக் கண்டறியவும், இதில் ஈடுபட்ட அனைத்துக் கயவர்களும் நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்யவும் அரசாங்கம் விரைவாக செயல்பட வேண்டும். இந்த சம்பவத்தைப் பயன்படுத்தி சமூகத்தை மதவெறி அடிப்படையில் பிளவுபடுத்துவதற்கான முயற்சிகளை உறுதியாக நின்று முறியடித்திட வேண்டும்.
ஷ்ரம் ஷக்தி நிதி
தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட 2025ஆம் ஆண்டு ஷ்ரம் ஷக்தி நிதி சட்ட வரைவின் முக்கிய நோக்கம் தொழிலாளர் பாதுகாப்புகள், அமலாக்க எந்திரம் மற்றும் கூட்டு பேர சக்தி ஆகியவற்றை ஒழித்துக்கட்டுவதாகும். ‘தர்ம சாஸ்திரங்களிலிருந்து’ உத்வேகம் பெற்று கொண்டுவரப்படுவதாகக் கூறப்படும் இந்த சட்டமுன்வடிவானது, நாட்டிலுள்ள ஜனநாயக, மதச்சார்பற்ற, குடியரசு அமைப்பின்மீதான நேரடித் தாக்குதலாகும். மேலும் இது, ஒன்றிய அரசின் கார்ப்பரேட் ஆதரவு தொழிலா ளர் சட்டத்தொகுப்புகளை மாநில அர சாங்கங்கள் அமல்படுத்த வேண்டு மென்றும் அதற்கு நிதி ஊக்கத் தொகைகளை அளிக்கும் விதத்திலும் அதன் மூலம் நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை அரித்து வீழ்த்தும் விதத்திலும் இதன் கொள்கை வகுக்கப்பட்டிருக்கிறது. இது நாடாளு மன்றத்தில் கொண்டுவரப்பட்ட தொழி லாளர் சட்டத்தொகுப்புகளை (Labour Codes) செயல்படுத்துவதற்கான ஒரு ஏமாற்றும் முயற்சியாகும். மேலும் இது கார்ப்பரேட், மதவெறி இந்துத்துவா எதேச்சதிகார ஆட்சிக்கு சேவை செய்திடும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
கேரள இடது ஜனநாயக முன்னணியின் வரலாற்றுச் சாதனை
நவம்பர் 1 ஆம் தேதி, கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம், மாநிலத்தில் தீவிர வறுமையை ஒழிப்பதில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை அறிவித்திருக்கிறது. இந்த சாதனை, கவனமாகத் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்ட தீவிர வறுமை ஒழிப்புத் திட்டத்தின் விளைவாகும். இது நான்கு ஆண்டு கால தரவு சார்ந்த முன்முயற்சியாகும். இது உள்ளாட்சி அமைப்புகளை 64,006 வீடுகளை அடையாளம் கண்டு மேம்படுத்துவதற்காக அணிதிரட்டியது. இந்த வெற்றி, முற்போக்கான அரசியல், பரவலாக்கப்பட்ட நிர்வாகம் மற்றும் உரிமைகள் சார்ந்த அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்ட கேரள வளர்ச்சி மாதிரியின் செயல்திறனுக்கான ஒரு சான்றாகும். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதி பற்றாக்குறையை ஏற்படுத்திய ஒன்றிய அரசு இடைவிடாது நிதி நெருக்கடியைக் கொடுத்து வந்தபோதிலும் அவற்றையெல்லாம் முறியடித்து கேரளா வெற்றி பெற்றுள்ளது. இது, எவ்வளவு தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் அவற்றை யெல்லாம் தகர்த்தெறிந்து வெற்றி பெறுவோம் என்கிற இடதுசாரி அரசாங்கத்தின் அரசியல் உறுதியையும், அர்ப்பணிப்பையும் காட்டுகிறது. நடைபெறவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து, ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பாஜக போன்ற மதவெறி சக்திகளின் முழுமையான தோல்வியை உறுதி செய்யுமாறு கேரள மக்களுக்கு அரசியல் தலைமைக்குழு வேண்டுகோள் விடுக்கிறது. ஐக்கிய ஜனநாயக முன்னணி தற்போது பாஜக போன்ற பிற மதவெறி சக்திகளுடன் கள்ளக்கூட்டணி அமைத்து செயல்பட்டு வருவதும் அம்பலமாகி இருக்கிறது.
வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம்
பன்னிரண்டு மாநிலங்களை இலக்காகக் கொண்டு நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் என்பது ஆர்எஸ்எஸ்/பாஜக கூட்டணியால், இந்தியத் தேர்தல் ஆணையம் மூலமாகக் கொண்டுவரப்பட்டுள்ள ஓர் அரசியல் திட்டமாகும். இது பல லட்சக்கணக்கான வாக்காளர்களை முறையாக வாக்குரிமையை இழக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சர்ச்சைக்குரிய பீகார் செயல்முறையை மாதிரியாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் வேண்டுமென்றே கடுமையான ஆவணத் தேவைகளையும், பழமையான 2002 அடிப்படையையும் பயன்படுத்தி, தேசிய குடிமக்கள் பதிவேட்டின் கொல்லைப்புற கதவு போல திறம்பட செயல்படுகிறது. இதன் முதன்மை நோக்கம், ஆளும் கட்சிக்கு சாதகமாக தேர்தல் மக்கள்தொகையை மாற்றுவதும், தேர்தல் ஜனநாயகத்தின் மிக முக்கியமான வயதுவந்தோர் அனைவருக்குமான வாக்குரிமையை பிரதிநிதித்துவப்படுத்தும் அடித்தளத்தையே அரித்து வீழ்த்துவதுமாகும். குடியுரிமையை நிர்ணயிக்கும் உரிமையை பறிக்கும் தேர்தல் ஆணையத்தின் முயற்சிக்கு எதிராகவும், தகுதியான எந்த வாக்காளரின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் கட்சி விரிவாக பிரச்சாரம் செய்யும். அதேபோல், பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தின் ஒத்துழைப்புடன் போலி வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் மக்களை தலைமைக்குழு கேட்டுக்கொள்கிறது.
2025ஆம் ஆண்டு மின்சார திருத்த சட்டமுன்வடிவு
2025ஆம் ஆண்டு மின்சார திருத்த சட்டமுன்வடிவு வரவிருக்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் 2025ஆம் ஆண்டு மின்சார திருத்த சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்பட்டு, அதன்மூலம் மின்சாரத்துறையை தனியார்மயமாக்கும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. பொதுத்துறையில் இருந்துவரும் மின்சாரத்துறையை அதிலிருந்து அகற்றிவிட்டு, அதனை முழுமையாக தனியாரிடம் தாரை வார்த்து, கொள்ளை லாபமீட்டும் சந்தையாக மாற்றுவதை இந்தச் சட்டமுன்வடிவு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டால், அது தவிர்க்க முடியாமல் விவசாயிகளுக்கும், உள்நாட்டு நுகர்வோருக்கும் மிகப்பெரிய அளவில் கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும். மாநில அளவில் இயங்கிவரும் மின்வாரியங்களை முடக்கிடும். மேலும் தேசிய எரிசக்தி இறையாண்மையை தனியார் ஏகபோகங்களுக்கு விட்டுக்கொடுத்திடும். இந்த சட்டமுன்வடிவு கூட்டாட்சி, வாழ்வாதார உரிமை மற்றும் மின்சாரம் ஒரு பொதுநலம் என்ற கோட்பாட்டின் மீது நேரடித் தாக்குதலாகும். இந்த சட்டமுன்வடிவுக்கு எதிராக பொதுமக்களின் கருத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திரட்டும். ஏற்கனவே இந்த சட்டமுன்வடிவுக்கு எதிராக போராட்டத்தை மேற்கொண்டுள்ள தொழிற்சங்கங்களுக்கும், விவ சாயிகள் சங்கங்களுக்கும் கட்சி ஆதரவு அளிக்கிறது. இதற்கெதிரான போராட்டத்தில் சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களையும் இணைத்துக் கொண்டு போராட்டத்தை வலுப்படுத்துமாறு அரசியல் தலைமைக்குழு வேண்டுகோள் விடுக்கிறது.
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா அதன் தலைவர்க ளின் தொடர் சொற்பொழிவுகளுடன் தொடங்கியது. இந்த சந்தர்ப்பம் அதன் இந்துத்துவா மதவெறி மற்றும் பிளவுபடுத்தும் சித்தாந்த த்தைப் பரவலாகப் பரப்புவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. மார்க்சி யத்தின் மீதான ஆர்எஸ்எஸ்-இன் வெறுப்பை அதன் தலைவர்கள் தெளிவாகக் காட்டுகிறார்கள். அவர்கள் கேரளாவைப் பற்றி சில இழிவான கருத்துக்களை வெளி யிட்டுள்ளனர். இது ஒரு ‘தொல்லை கொடுக்கும் மாநிலம்’ (‘disturbed state’) என்று அழைத்தனர். ‘இந்து ராஷ்ட்ரம்’ ஸ்தாபிக்க வேண்டும் என்ற அதன் நோக்கத்தை அடைய மாநிலத்தின் பல்வேறு அரசு எந்திரங்களின்மீதும் ஆர்எஸ்எஸ் தனது கட்டுப்பாட்டைச் செலுத்துகிறது.
பெண்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் மீதான தாக்குதல்கள்
பெண்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் மீதான தாக்குதல்கள், குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில், தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தத் தாக்குதல்கள் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளால் பரப்பப்படும் மனுதர்ம சித்தாந்தத்தின் பிரதிபலிப்பாகும். ஒன்றியத்திலும் மற்றும் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள பாஜக அரசாங்கங்களின் ஒத்துழைப்பு மற்றும் குற்றம் சாட்டப்பட்ட கயவர்களைத் தண்டிக்க அவர்கள் வெளிப்படையாக மறுப்பது, குற்றவாளிகளை மேலும் தைரியப்படுத்துகிறது மற்றும் இதுபோன்ற தாக்குதல்களின் அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. மோடி தலைமையிலான பாஜக அரசாங்கத்தின் 11 ஆண்டு காலத்தில் பெண்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் செங்குத்தான அதிகரிப்பை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகள்காட்டுகின்றன.
பொருளாதார நிலை
பொருளாதார நிலை சமீபத்தில் வெளியிடப்பட்ட தரவுகள், ஒன்றிய அரசின் கூற்றுகளுக்கு மாறாக, நமது பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லை என்பதைக் குறிக்கிறது. வேலையின்மை, வேலை வாய்ப்புகள் இல்லாமை, ஊதிய தேக்கம் ஆகியவை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றன. பொருளாதாரம் எதிர்கொள்ளும் கட்டமைப்பு பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் (FTA) கையெழுத்திடுவதன் மூலமும், சில தற்காலிக பண ஊக்கத்தொகை களை வழங்குவதன் மூலமும், அந்நிய மூல தனத்திற்கு பொருளாதாரத்தைத் திறந்துவிடு வதன் மூலம் அரசாங்கம் நெருக்கடியைச் சமாளிக்க முயற்சிக்கிறது. அமெரிக்கா விதித்த வரிகளின் விளைவாக, இந்தியாவின் ஏற்றுமதிகள் 37.5 சதவீதம் சரிந்தன. இது சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்ட மிகக் கடுமையான குறுகிய கால சரிவுகளில் ஒன்றாகும். அரசாங்கத்தின் அவசர தலையீடு இல்லாமல், முன்னர் வலுவான நிலையை வகித்த துறைகளில் இந்தியா சந்தைப் பங்கை இழக்கும் அபாயம் உள்ளது.
அமெரிக்க-இந்திய முக்கிய பாதுகாப்பு கூட்டாண்மைக்கான கட்டமைப்பு
அமெரிக்க-இந்திய முக்கிய பாதுகாப்பு கூட்டாண்மைக்கான கட்டமைப்பு இந்தியா-அமெரிக்க 10 ஆண்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு கட்டமைப்பு, அமெரிக்க ஏகாதிபத்திய நோக்கங்களுக்கு இந்தியாவைப் பணியவைக்கும் விதத்தில் முன்னெடுத்துச் சென்றுகொண்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம் நிலம், வான், கடல், விண்வெளி மற்றும் சைபர்ஸ்பேஸ் ஆகிய அனைத்து களங்களிலும் ஆழமான ஒத்துழைப்பை நோக்கமாகக் கொண்டுள்ளது. வெறும் ஆயுத விற்பனையைத் தாண்டி முழு அளவிலான இராணுவ இயங்குதன்மைக்கு நகர்கிறது. அதன் விதிகள் அடிப்படையில் இந்தியாவின் சுயாட்சியை சமரசம் செய்கின்றன. அதன் இராணுவ மற்றும் வெளியுறவுக் கொள்கையை அமெரிக்காவின் கட்டளைகளுக்குக் கட்டுப்படுத்துகின்றன. இந்த கட்டமைப்பு தொழில்நுட்ப சார்புநிலையை ஆழமாக்குகிறது. இந்தியாவின் பாதுகாப்பு தொழில்துறை தளத்தை அமெரிக்க ஏகபோகங்களின் நலன்களுக்கு உட்படுத்துகிறது, அதே நேரத்தில் பிராந்தியங்களில் மோதல் ஏற்படக்கூடிய அபாயத்தையும் அதிகரிக்கிறது. சீனாவைக் கட்டுப்படுத்துவதும், அமெரிக்கா தலைமையிலான இராணுவக் கட்டமைப்பிற்குள் இந்தியாவை முறையாக பிணைப்பதும் இதன் நோக்கம் என்பது ஒப்பந்தத்தில் தெளிவாக உள்ளது. நமது நாட்டை அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் ஆழமாகத் தள்ளி, நமது நலன்களுக்கு தீங்கு விளைவித்து வருவதற்காக, பாஜக தலைமையிலான அரசாங்கத்தை அரசியல் தலைமைக்குழு கண்டிக்கிறது.
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம்
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்க தயாரிப்புகளுக்கு பல்வேறு துறைகளில் விரிவான சந்தை அணுகலை வழங்கும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்கா இந்திய அரசாங்கத்தை அழுத்தம் கொடுத்து வருகிறது. மரபணு மாற்றப்பட்ட சோளம் மற்றும் சோயாபீன்ஸ் அணுகல், கட்டுப்பாடற்ற எல்லை தாண்டிய தரவு ஓட்டங்கள், தாராளமயமாக்கப்பட்ட மின் வணிகம் மற்றும் அறிவுசார் சொத்து (Intellectual Property) விதிகள் மற்றும் அமெரிக்க எண்ணெய், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதற்கான பெரிய உறுதிமொழிகள் உள்ளிட்ட பெரும்பாலான தொழில்துறை பொருட்களுக்கான வரிகளை இந்தியா நீக்க வேண்டும், பண்ணை மற்றும் பால் துறைகளைத் திறக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. அமெரிக்க அழுத்தத்திற்கு அரசாங்கம் அடிபணிந்து வருவதாகவும், நமது நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர் நிறுத்தமும் காசா அமைதித் திட்டமும்
போர் நிறுத்தமும் காசா அமைதித் திட்டமும் காசாவில் ஏற்பட்ட போர் நிறுத்தமும் இஸ்ரேலிய குண்டுவீச்சு மற்றும் விரோதப் போக்கு முடிவுக்கு வந்ததும், நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்ட காசாவின் மக்களுக்கு ஓரளவு நிம்மதியை அளித்துள்ளது. பாலஸ்தீனத்துடன், ஒற்றுமையாக வளர்ந்து வரும் மக்கள் இயக்கத்தால் ஏற்பட்ட மகத்தான அழுத்தம் காரணமாக, போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள இஸ்ரேலை அமெரிக்கா கட்டாயப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இருப்பினும், சியோனிச இஸ்ரேல் தொடர்ந்து போர் நிறுத்த மீறல்களையும் வன்முறையையும் தொடர்கிறது. இந்திய அரசாங்கம் இஸ்ரேல் மீதான தனது கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும், அதன் அனைத்து பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உறவுகளையும் துண்டித்து, பாலஸ்தீனத்துடன் ஒற்றுமையாக நிற்க வேண்டும்.







