செய்தி அறிக்கைமாநில செயற்குழு

எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்குகிற செயல்!சு.வெங்கடேசன்உள்ளிட்டு 8 எம்பிக்கள் மீது “உரிமை மீறல்” புகார்! சிபிஐ(எம்) கண்டனம்!!

Cpim WBS copy

நாடாளுமன்றத்தில் டிசம்பர் 18, 2025 அன்று கிராமப் புற எளிய மக்களின் வாழ்வுரிமை புகலிடமாகத் திகழும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் பெயரை மாற்றவும்,  அதன் உள்ளடக்கத்தை நீர்த்துப் போகவும் செய்கிற விபி ஜி ராம் ஜி சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் கண்டனம் தெரிவித்ததற்கு எதிராகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தலைவர் இருக்கைக்கு முன்பாக வந்து குரல் எழுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கான புகார் பாஜக எம்.பி.க்கள் டாக்டர் நிஷிகாந்த் துபே, டாக்டர் சஞ்சய் ஜெய்ஸ்வால், பி.பி. சௌத்ரி, பி.சி. மோகன் ஆகியோரால் தரப்பட்டு அதன் அடிப்படையில் உரிமை மீறல் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற விதிகளை இயந்திரகதியாக அமலாக்க இயலாது, அதன் எழுத்து மட்டுமின்றி எண்ணமும் உயிர்ப்போடு செயலாக்கம் பெற வேண்டும். ஆனால், இன்றைய பிஜேபி ஆட்சியாளர்களிடம் இத்தகைய நாடாளுமன்ற மாண்புகளை எதிர்பார்க்க இயலுமா! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரலுக்கு செவி சாய்க்கும் பண்பு அற்றவர்களாக பிஜேபி ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள் என்பதே மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்ட திருத்தத்தின் போது அவர்களின் அணுகுமுறை வெளிப்படுத்தியது. நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மை இல்லாத அரசாங்கம், பெரும் எண்ணிக்கையில் எதிர்க்கட்சிகளின் இருப்பு என்பதை சற்றும் மனதில் கொள்ளாமல் ஜனநாயக மறுப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். நாடாளுமன்றத்தில் 50 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிகமானோர் தங்களின் மாறுபட்ட கருத்துக்களை பதிவு செய்தும் அச்சட்ட வரைவை நாடாளுமன்றத்தின் தெரிவுக்குழு அல்லது நிலைக் குழு பரிசீலனைக்கு கூட அனுப்ப அரசு தயாராக இல்லை. இதற்கான மக்களின் உணர்வை, குமுறலை, கோபத்தை மக்கள் பிரதிநிதிகள் வெளிப்படுத்தினார்கள் என்பதே உண்மை.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவிப்பதால், அவை ஒத்தி வைக்கப்படுவதை நாடு கண்டிருக்கிறது. ஆனால், பாஜக ஆளும் கட்சியாக இருந்த போதிலும் கூட எப்படி நடந்து கொள்கிறார்கள், அவை நிகழ்ச்சிகளை எப்படி தடுக்கிறார்கள் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எங்கோ ஒரு பேரணியில் யாரோ ஒருவர் மோடிக்கு எதிராக முழக்கம் எழுப்பினார், கர்நாடகா அமைச்சர் ஒரு கருத்தைக் கூறினார் என்று சொல்லி ஆதாரங்கள் எதுவும் இல்லாமல், நாடாளுமன்றம் முடக்கப்பட்டதைக் கூட இந்த குளிர் காலத் தொடரிலேயே கண்டோம். நாடாளுமன்றத்தின் நிலைக் குழுக்களுக்கு 10 சதவிகிதம் சட்ட வரைவுகள் கூட அனுப்பப்படுவது இல்லை. பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வருவதே அபூர்வமாக உள்ளது. இதெல்லாம் இவர்கள் நாடாளுமன்றத்திற்கு தருகிற மரியாதையா? ஆனால் மக்களின் பிரச்சினைகளுக்காக, வாழ்வுரிமை பறிக்கப்படுவதற்கு எதிராக குரல் கொடுத்தார்கள் என்பதற்காக உரிமை மீறல் அறிவிப்பாணை விடுப்பதெல்லாம் ஜனநாயக விரோதம், மற்றும் அச்சுறுத்தல் செயலாகும்.

சர்ச்சைகளை தவிர்ப்பதே அரசியல் முதிர்ச்சி ஆகும். ஆனால், பாஜக ஆட்சியாளர்களோ சர்ச்சைகளை உருவாக்கி மக்கள் கவனத்தை திசை திருப்புவதையே உத்தியாகக் கொண்டிருக்கிறார்கள். எளிய மக்களின் வேலை உரிமையை பறிக்கிற சட்ட வரைவில் இருந்து கவனத்தை திருப்புவது இதுபோன்ற அராஜக நடவடிக்கைகளின் நோக்கமாகும்.

மக்களவைத் தலைவர் இத்தகைய உள்நோக்கங்கள் கொண்ட புகார்களை புறம் தள்ளவேண்டுமென்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் தமிழ்நாடு மாநில செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது.  மக்கள் பிரதிநிதிகளின் உணர்வுகளையும், கருத்துக்களையும் அவமதிக்கும் பாஜகவுக்கு வன்மையான கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

(பெ. சண்முகம்)

மாநில செயலாளர்