செய்தி அறிக்கைதீர்மானங்கள்மாநிலக் குழு

சிபிஐ(எம்) தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் புதுக்கோட்டையில் டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மாநிலக்குழு கூட்ட தீர்மானங்கள்:

Cpim WBS copy

03.12.2025

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் புதுக்கோட்டையில் டிசம்பர் 2, 3 தேதிகளில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயலாளர் பெ.சண்முகம், மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், கே.பாலபாரதி உள்ளிட்ட மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இரண்டாவது நாள் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் 1 : டிட்வா புயல் பாதிப்பு ஒரு ஏக்கருக்கு ரூபாய் 35,000 வழங்குக!

டிட்வா புயலின் தாக்கத்தால் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக வேளான் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் சுமார் 3 லட்சம் ஏக்கர் பாதித்து விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களிலும், கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களிலும் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. தொடர்ந்து மழை பெய்யாமல் இருந்தால் கூட தேங்கியுள்ள தண்ணீர் முற்றிலும் வடிவதற்கு ஒரு வார காலம் ஆகும். ஏற்கனவே குறுவை நெல் அறுவடை செய்யப்பட்டபோது பெய்த தொடர் மழையின் காரணமாக நெல் முளைத்து விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஒன்றிய பாஜக அரசு இயற்கை பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாட்டிற்கு தேவையான நிதியை வழங்க வேண்டும். டிட்வா புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை உரிய முறையில் கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு 8000 ரூபாய் என்று மாநில அரசு அறிவித்திருப்பது ஏற்புடையதல்ல. கைமுதலை இழந்து விவசாயிகள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு 35000/- ரூபாய் நிவாரணம் வழங்கிட வேண்டும். விவசாய வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ள விவசாயத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும்  நிவாரணம் வழங்கிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வலியுறுத்துகிறோம்.

தீர்மானம் 2 : இடதுசாரி மற்றும் வி.சி.க போராட்டத்தை வெற்றி பெறச் செய்வோம்!

டிசம்பர் 8 அன்று தமிழ்நாடு முழுவதும், சி.பி.ஐ (எம்), சி.பி.ஐ, சி.பி.ஐ (எம்.எல்) மற்றும் விசிக கட்சிகள் சார்பில் ஒன்றிய பாஜக அரசு அமல்படுத்தியுள்ள தொழிலாளர் சட்டத் தொகுப்பினை திரும்ப பெற வேண்டும் என கோரி போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளன. தொழிலாளர் சட்டத் தொகுப்பு குறித்து உண்மைக்கு மாறாக பொய்களை பரப்பி மக்களிடமும் தொழிலாளர்களிடமும் ஆதரவு தேட பாஜக முயற்சிக்கிறது. ஆனாலும் தமிழ்நாடு முழுவதும்       தொழிற்சங்கங்கள் தனியாகவும் கூட்டாகவும் உடனடி எதிர்ப்பு இயக்கங்களை நடத்தியது பாராட்டுக்குரியது. தொடர்ந்து பலகட்ட போராட்டங்களை தொழிற்சங்கங்கள் அறிவித்திருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு ஆதரிக்கிறது.

பாஜக ஆட்சியின் நவ தாராளமய கொள்கை தொழிலாளர்களையும் இதர உழைக்கும் மக்களையும் மொத்தமாக சுரண்டுகிறது என்றால், நவ பாசிசம் மதவெறியை தூண்டி போராடும் தொழிலாளர்களை பிரித்து வைக்கிறது. கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு பாஜகவின் வகுப்புவாத கொள்கை குதூகலமாக இருக்கிறது. தற்போது அமலாக்கியுள்ள தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்பு தொழிலாளர்கள் மீது உழைப்புச் சுரண்டலை தீவிரப்படுத்தும். எனவே, தொழிலாளி வர்க்கத்தின் மிக வலுவான ஒன்றுபட்ட போராட்டங்கள் மூலம் தான் மேற்படி சட்டத் தொகுப்புகளையும், வர்க்க சுரண்டலையும் தடுத்திட முடியும்.

நிரந்தரமற்ற வேலை, காண்ட்ராக்ட் வேலை போன்றவற்றை ஆதரிக்கக் கூடிய சட்ட தொகுப்புகள் இளைஞர்களின் கனவை, எதிர்காலத்தை நிராசையாக மாற்றக் கூடிய ஒன்றாகும். எனவே, வேலை தேடும் இளைஞர்களும், மாணவர்களும் இந்த சட்டத் தொகுப்பிற்கு எதிராக களம் காண வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு அறைகூவி அழைக்கிறது.

ஒன்று, தொழிலாளர்கள் நெடிய போராட்டங்கள் மூலமாக வென்றெடுத்த சட்டங்களை பாஜகவின் ஆட்சி கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு சாதகமாக மாற்றி அமைக்கிறது. இரண்டு, நவீன இயந்திரமயமாக்கல் காலத்தில் வேலை நேரத்தை குறைத்து, கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு பதிலாக வேலைநேர வரம்பை தளர்த்துகிறது. மூன்று, மிகப் பெரும்பான்மையான அமைப்பு சாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை மேற்படி நான்கு சட்டத் தொகுப்புகளும் நிராகரிக்கிறது. ஒப்பந்தம், பயிற்சி, குறிப்பிட்ட கால வேலை போன்ற நிரந்தரமற்ற வேலை வாய்ப்புகள் மூலம் தொழிலாளர்களின் உரிமைகளையும், இளம் தொழிலாளர்களின், வேலையற்ற இளைஞர்களின் எதிர்காலத்தை நாசம் செய்கிறது. எனவே, இந்திய சமூகத்தின் பெரும்பான்மையான உழைக்கும் வர்க்கம் ஒன்றினைந்து போராடுவதன் மூலமே ஆளும் வர்க்கத்தின் இத்தகைய தாக்குதலை முறியடிக்க முடியும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு சுட்டிக்காட்டுகிறது.

      அந்தவகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) விடுதலை கட்சிகள் சார்பில், எதிர்வரும் டிசம்பர் 8 அன்று வலுவான போராட்டங்களை நடத்துவது என முடிவெடுத்து தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக போராடி பெற்ற தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்க, தொழிலாளர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் பேராதரவு தர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 3: உச்சபட்ச குழப்பத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்! உடனடியாக கைவிட மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை!!

கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு மாநில தலைமை தேர்தல் அதிகாரி, அகில இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கான (SIR) அட்டவணையை அறிவித்திருந்தார்.  கணக்கீட்டு படிவங்கள் கணினி மூலம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். ஆனால் இன்று வரை, அது எந்த அளவுக்கு செய்யப்பட்டிருக்கிறது என்ற விவரத்தை வெளிப்படையாக தெரிவிக்க தலைமை தேர்தல் அதிகாரி மறுத்து வருகிறார்.

பல இடங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் /  முகவர்களும் படிவங்களில் பழைய வாக்காளர் பட்டியலில் இருந்து விபரங்களை நிரப்பி கையெழுத்தை மட்டும் பெற்றுக் கொண்டு அவற்றை சமர்ப்பித்திருக்கிறார்கள். கொத்துக்கொத்தாக இவ்வாறு எந்தவித சரிபார்ப்பும் இல்லாமல் சமர்ப்பிக்கப்பட்ட படிவங்கள் தான் பெரும்பான்மையாக இருக்கின்றன என அறிகிறோம்.

      பணிச்சுமை காரணமாகவும், மன அழுத்தம் காரணமாகவும், அதிகாரிகளின் மிரட்டல் உருட்டல்களுக்கு பயந்தும் சில வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். தங்களுக்கு போதிய சன்மானம் வழங்கப்படவில்லை என்று இன்னும் சில அமைப்புகள் போராட்டத்திற்கு தள்ளப்பட்டதையும் பார்த்தோம். போதிய அவகாசம் இல்லாததன் காரணமாக கொடுக்கப்பட்ட பணிகளை நிறைவேற்ற முடியாமல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை தவிக்கவிட்டது என்பது, தேர்தல் ஆணையத்தின் உள்நோக்கம் கலந்த அவசரத்தின் பின்விளைவு என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு  சுட்டிக்காட்ட விரும்புகிறது.

தேர்தல் ஆணையம் இந்த நடைமுறையை கணக்கெடுப்பு படிவம் பெறுவதிலிருந்து இறுதி வாக்காளர் பட்டியல் வரை, ஒரு வாரத்திற்கு நீடித்திருக்கிறது. இதனுடைய அடுத்த கட்டமாக வரக்கூடிய வாக்காளர் பட்டியல் என்னவித குழப்பங்களோடு வருமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. தங்கள் பெயர் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்குமா? இல்லையா? தங்களது வாக்காளர் உரிமை நிலைநிறுத்தப்பட்டிருக்குமா என்ற பதட்டம் மக்கள் மத்தியில் இருக்கிறது.

இந்தக் குழப்பங்களை தீர்க்கிற வகையில், இந்த SIR நடைமுறை உடனடியாக கைவிடப்பட வேண்டும்; பழைய முறையில் வாக்காளர் பட்டியலை இறுதி செய்து தேர்தல்களை நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 4: தூய்மை பணியாளர்கள் போராட்டம் – சிபிஐ(எம்) ஆதரவு!

தூய்மை பணியில் ஒப்பந்த தொழிலாளர்களை ஈடுபடுத்துகிற நடைமுறை நாடு முழுவதும் அதிகரித்து உள்ளது. இதற்கு எதிரான போராட்டங்களும் வலுப்பெற்று நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து போராடி வருவதை மாநில அரசு கணக்கில் கொண்டு உடனடியாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

அதேபோல் வருகிற டிசம்பர் 8 அன்று சிஐடியு-வுடன் இணைந்த உள்ளாட்சி ஊழியர் சம்மேளனம் வேலை நிறுத்தம் செய்து மறியல் களம் காண்பது என முடிவு செய்துள்ளது. ஏ.ஐ.டி.யூ.சி காத்திருக்கும் போராட்டம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த போராட்டங்களுக்கு  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு தனது முழு ஆதரவை தெரிவிக்கிறது.

தொழிற்சங்கங்களுடன் உரிய பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்த தொழிலாளர் நடைமுறையை கைவிடவும் அவர்களின் கோரிக்கையை அமலாக்கவும் முன்வர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

(பெ.சண்முகம்)

மாநில செயலாளர்

Leave a Reply