இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநில செயலாளர் பெ.சண்முகம் இன்று (11.12.2025) சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். இச்சந்திப்பின் போது அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி, மாவட்ட செயலாளர்கள் ஆர். வேல்முருகன், எம். ராமகிருஷ்ணன், ஜி. செல்வா ஆகியோர் உடனிருந்தனர். இச்சந்திப்பின் போது வழங்கப்பட்ட அறிக்கை:
டிச.16 அன்று சென்னையில் குடிமனைப்பட்டா கேட்டு லட்சம் பேர் முதலமைச்சரிடம் மனு கொடுக்கும் இயக்கம்!
சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில், மூன்றில் ஒரு வீட்டிற்கு பட்டா இல்லை. தமிழ்நாடு அரசு பட்டா வழங்க பல திட்டங்களை அறிவித்துக் கொண்டே இருக்கிறது. ஆனாலும், ஏழை எளிய மக்கள் பட்டா கேட்டு போராடிக் கொண்டே இருக்கிறார்கள்.
நகர வளர்ச்சியின் காரணமாக பயன்பாடற்ற நீர்நிலைகள் அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறிவிட்டன. தமிழ்நாடு அரசே புறம்போக்கு நிலத்தில் மக்களை மறுகுடியமர்வு செய்தது. மக்கள் வாழும் பகுதிகளில் சாலை, மழைநீர்கால்வாய் போன்ற கட்டமைப்புகளை செய்துள்ளது. குடிநீர், மின்சாரம், கழிவுநீர் இணைப்புகளை வழங்கியுள்ளது. அங்குள்ளவர்களிடம் சொத்துவரியும் வசூலிக்கிறது. இதன்பிறகு, மக்களை ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ என்று வகைப்படுத்துகிறது. நீர்ப்பிடிப்பு பகுதி, புறம்போக்கு, ஆட்சேபணை நிலம், அரசு நிலம், ரயில்வே நிலம், கல்விநிலையங்களுக்கான நிலம், டிரஸ்ட் நிலம் என பல்வேறு காரணங்களை கூறி பட்டா கொடுக்காமல் இருக்கிறது.
அனாதீன நிலங்கள், வகைப்படுத்தப்படாத நிலங்களில் பல்லாண்டுகளாக மக்கள் வசித்து வருகின்றனர். அத்தகைய பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளை அரசே கட்டியுள்ளது. ஆனாலும், பட்டா இல்லை என்று கூறி மின் இணைப்பு, கழிவு நீர் இணைப்பு, குடிநீர் இணைப்பு மறுக்கப்படுகிற நிலையும் நிலவுகிறது.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு (குடிசைமாற்று) வாரியம் ஒதுக்கீடு செய்த மனைகளுக்கு, முழுத்தொகை செலுத்திய பயணாளிகளுக்கு கூட கிரயப்பத்திரம் வழங்கப்படாமல் உள்ளது. வாரிசுகள் மற்றும் ஒதுக்கீட்டுதாரரிடம் இருந்து மனையை வாங்கியவர்களுக்கு பெயர்மாற்றம் செய்து தராமலும் அலைகழிக்கப்படுகின்றனர்.
நீதிமன்றங்கள் கள ஆய்வு செய்யாமல், 50 ஆண்டுகளுக்கு முந்தைய ஆவணங்களை மட்டும் வைத்துக் கொண்டு கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்கின்றன. ஏரி மீது கட்டப்பட்ட நீதிமன்றங்களில் இருந்து கொண்டு, ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று விநோதமாக உத்தரவிடுகின்றனர். மக்களின் வாழ்வுரிமையை கருத்தில் கொள்ளாமல் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளால் அரசுக்கும் மக்களுக்கும் மோதல் ஏற்படுகிறது. மக்கள் நிர்க்கதியாய் நிறுத்தப்படுகின்றனர்.
பட்டியல் சாதி மக்கள் சென்னையின் மையப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் நிலை தொடர்கிறது. சென்னை மாநகரை அழகுபடுத்துகிறோம் என்ற பெயரில் குடிசைப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு, பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் கண்ணகி நகர், செம்மஞ்சேரி பகுதியில் மறுக்குடியமர்வு செய்யப்பட்டுள்ளனர். கண்ணகி நகரில் 100 சதுர அடிக்கும் குறைவான பரப்பில், வாழத்தகுதியற்ற இடத்தில் உள்ளனர்.
மேலும், கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆண்டாண்டு காலமாக வசித்து வருகின்றனர். இவர்களை வாடகைதாரராக முறைப்படுத்தி, நியாயமான வாடகை நிர்ணயிப்பதற்கு பதிலாக, அறநிலையத்துறை இவர்களை அகற்ற முயற்சிக்கிறது. அநியாய வாடகை விதிக்கிறது.
இத்தகைய சூழலில்,
* தமிழ்நாட்டில் உள்ள நிலங்களை அளவீடு (சர்வே) செய்து ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. எனவே, மாநிலம் முழுவதும் நிலத்தை மறு அளவீடு செய்ய வேண்டும்.
* தற்போதைய நீர்ப்பிடிப்பு பகுதிகளை தவிர்த்து பயன்பாடற்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும்.
* தனியார் நிலத்தில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருபவர்களுக்கு நிலத்தை அரசு கையகப்படுத்தி பட்டா வழங்க புதிய அரசாணை வெளியிட வேண்டும்.
* பல்வேறு வகையான அரசு புறம்போக்குகளில் வசித்து வரும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.
* அரசு கொடுத்த மாற்று இடத்தில் வீடுகட்டி குடியிருக்கும் மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும்.
* குடிசை மாற்று வாரியத்தால் ஒதுக்கீடு செய்து கொடுத்த நிலங்களுக்கு கிரயப்பத்திரம், பெயர் மாற்றி சான்றிதழ் வழங்க வேண்டும்.
* தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் இடம் வாங்கி பணம் செலுத்தி முடித்தவர்களுக்கு கிரயப்பத்திரம் மற்றும் பெயர் மாற்று சான்று வழங்க வேண்டும்.
* கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு அறநிலையத்துறை சட்டபிரிவு 34ஏ-ன்படி வரைமுறைப்படுத்தி குறைந்த வாடகை தீர்மானிக்க வேண்டும்.
* சென்னையில் இருந்து வெளியேற்றப்பட்டு அரசு குடியமர்த்தியுள்ள மக்களுக்கு வாழத்தகுதியான வீடுகளை கட்ட சிறப்பு திட்டத்தை வகுக்க வேண்டும்.
என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 16-12-2025 அன்று காலை 9.30 மணி அளவில் சுவாமி சிவானந்தா சாலையில் ஒரு லட்சம் பேர் சென்று முதலமைச்சரிடம் மனு கொடுக்கும் இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிறது. இந்த இயக்கத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கங்கள், கோவில் நிலங்களில் குடியிருப்போர் நலச்சங்கங்கள் பங்கேற்கின்றன. இதன் தொடர்ச்சியாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம்.
மக்களின் வாழ்விட உரிமையைப் பாதுகாக்க நடைபெறும் இந்த இயக்கத்திற்கு பொதுமக்கள் பேராதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
(பெ.சண்முகம்)
மாநிலச் செயலாளர்







