திருத்தணி ரயில் நிலையம் அருகே இரு தினங்களுக்கு முன்பு புறநகர் ரயிலில் பயணம் செய்த வடமாநில இளைஞரை போதையில் இருந்த நான்கு சிறுவர்கள் கத்தியால் வெட்டி கொடூரமாகத் தாக்கி அதனை வீடியோ எடுத்து இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. கொடும் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது ஆறுதல் அளிக்கிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொடூரமான செயலில் ஈடுபட்ட சிறுவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாகவும், கைபேசி மூலம் கத்தியை வைத்து மிரட்டுவதுபோல் ரீல்ஸ் எடுத்ததாகவும் அப்போது அந்த வடமாநில இளைஞர் முறைத்ததாகவும், அவரை திருத்தணி ரயில் நிலையத்தில் இறக்கி ரயில் குடியிருப்பு பகுதியில் அழைத்துச் சென்று கத்தியால் வெட்டி படம் பிடித்து இணைய பக்கத்தில் ரீல்ஸ் வெளியிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த கொலைவெறித் தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
தமிழகத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பல்வேறு சமூகக் குற்றங்களுக்கு ஆளாவதில் போதைப் பொருள் ஒரு முக்கிய காரணியாக விளங்குகிறது. தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையை அறவே ஒழிப்பதற்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யும் கும்பல்கள் மீது கடுமையான நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டுமெனவும்; போதைப் பொருட்களுக்கு எதிராக இளைஞர்கள், சிறுவர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும்; வட மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்கள், குடியிருப்புகள் உள்ளிட்டு அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்திடவேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது.
ரயில் பயணங்களின் போது இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் இனி நடக்காமலிருக்க ரயில்வே காவல்துறையினர் உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டுமெனவும், கடுமையான வெட்டுக் காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வரும் இளைஞருக்கு உரிய மருத்துவ சிகிச்சையும், அவரது வாழ்வாதாரத்திற்கு உரிய இழப்பீடு அளித்திட வேண்டுமெனவும் ரயில்வே நிர்வாகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
(பெ.சண்முகம்)
மாநிலச் செயலாளர்







