செய்தி அறிக்கைதீர்மானங்கள்மாநில செயற்குழு

சிபிஐ(எம்) தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் 2026 ஜனவரி 9 அன்று தேதிகளில் நடைபெற்றது. மாநில செயற்குழு கூட்ட தீர்மானங்கள்:

மாநில செயற்குழு கூட்ட தீர்மானங்கள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் 2026 ஜனவரி 9 அன்று மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், கே.பாலபாரதி, மாநில செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்டு மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு..

தீர்மானம் 1 :

குடும்ப அட்டைதாரர்களிடம் கையெழுத்து பெற்று பொங்கல் தொகுப்பை வழங்கிட வலியுறுத்தல்!

 தமிழர் திருநாள் தைப்பொங்கல் பரிசு தொகுப்பு – 2026 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மற்றும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இணைந்து ஏற்பாடுகள் செய்து வருகிறது.

பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான வழிமுறையான கையடக்க மின்னணு கணினி (POS) மூலம் கைரேகை பதிவு செய்து வழங்க வேண்டி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் இப்பணி நடைபெறுவதால் இணையதள சேவை முழுமையாக கிடைப்பதில் தடங்கல் இருப்பதால் காலதாமதம் ஆகிறது. இதனால் ஒரு குடும்ப அட்டைதாரருக்கு  குறைந்தபட்சம் 15 நிமிடத்திற்கு மேல் ஆகிறது.  இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள். எனவே, இதனை துரிதப்படுத்த இணைய சேவைத்திறனை அதிகரிக்கவும், தொழில்நுட்ப கோளாறுகளை உடனடியாக சரி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இத்திட்டத்தினை விரைந்து அமலாக்க குடும்ப அட்டைதாரர்களிடம் கையெழுத்து பெற்று பொங்கல் தொகுப்பை வழங்கிட, அரசு உடனடியாக திட்டமிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 2 :

இந்திய பொருட்களின் மீது 500 சதவீதம் வரி விதிப்போம் என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜனவரி 22ல் கண்டன இயக்கம்!

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவிகிதம் இறக்குமதி வரி விதிக்கும் மசோதா ஒன்று அமெரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இது நிறைவேற்றப்பட்டால் இந்திய ஏற்றுமதி சந்தை கடும் பாதிப்புகளை சந்திக்கும்.

ஏற்கெனவே இந்திய பொருட்களின் மீது 16 சதவீதம் வரி இருந்த நிலையில் ரஷ்யா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதாக காரணம் காட்டி, டிரம்ப் 50 சதவிகிதம் வரியும், அபராதமும் சேர்த்து விதித்தார். பிரதமர் மோடி இது குறித்து பேச மறுக்கிறார். இதனிடையே டிரம்ப், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ‘‘இந்தியா என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பது அவசியம், ரஷ்யாவிடம் தொடர்ந்து எண்ணெய் கொள்முதல் செய்தால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்” என்று மிரட்டல் விடுத்தார்.

இந்த நிலையில் அமெரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் கம்பெனிகளின் தேவைக்காக தற்போது வெனிசுலாவின் மீதான தாக்குதல் உள்பட பல்வேறு எண்ணெய் வள நாடுகளின் மீது அத்துமீறி தாக்கி வளங்களை கைப்பற்றி வருகிறது.  இந்த சூழலில் இந்தியா அமெரிக்கா இடையேயான ஏற்றுமதி வர்த்தகம் என்பது 86.50 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ 7.40 லட்சம் கோடி) என்ற அளவில் தற்போது உள்ளது. இதில் ஆபரணங்கள், மருந்துப் பொருட்கள், மின்சாதனங்கள், துணிநூல் மற்றும் ஜவுளி ஆடைகள், பெட்ரோலிய பொருட்கள், ரசாயனங்கள், இயந்திரங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள், வேளாண் பொருட்கள் மற்றும்  ஐ.டி / மென்பொருள் சேவைகள் என பிரதானமாக இந்திய உள்நாட்டு உற்பத்தியில் 0.02 சதவீதம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது.

மேற்படி துறைகளில் பிரதானமாக சிறுகுறு தொழில் நிறுவனங்கள் உள்ளது. 500 சதவிகிதம் வரி எனில் மூடப்படும் அபாயம் உள்ளது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டின் பிரதான தொழில் நகரங்களான சென்னை, காஞ்சிபுரம், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், கிருஷ்ணகிரி, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்திக்கும். நாடு முழுவதிலுமிருந்து இலட்சக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை நம்பி இந்த நகரங்களில் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர் ; அவர்களும் பாதிக்கப்படுவார்கள்.

ஏற்கனவே, அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் பிரதான ஏற்றுமதி பொருட்களின் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.  2025 ஆகஸ்ட் 27 அன்று இந்த வரி நடைமுறை அமலுக்கு வந்தவுடனேயே திருப்பூர் ஏற்றுமதி தொழில்துறை பாதிப்பை சந்திக்கத் தொடங்கியது, ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான பின்னலாடைகள் தேக்கம் அடைந்தது. மேலும், இந்த மூன்று மாத காலத்தில் வந்திருக்க வேண்டிய வர்த்தகம் ரூபாய் 12,000 கோடி அளவில் பறிபோய்விட்டது. இது, மேலும் பாதிப்பை உருவாக்கும் என கருதப்படுகிறது. வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி வர்த்தகம் மாறிவிட்டால் மீண்டும் சந்தையை இந்தியாவிற்கு சாதகமாக கொண்டு வருவது கடும் நெருக்கடிகளை உருவாக்கும். எனவே, ஒன்றிய பாஜக அரசு இந்திய நலனில் அக்கறை கொண்டு இப்போதாவது வாய் திறக்க வேண்டும். அமெரிக்க அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி இந்திய நலனை பாதுகாக்க வேண்டும். தொடர்ந்து உலக போலீஸ்காரனாக நடந்துவரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜனவரி 22 ல் சென்னை, காஞ்சிபுரம், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், கிருஷ்ணகிரி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கட்சி அணிகள் முழுமையாக பங்கேற்க வேண்டுமென அறைகூவி அழைக்கிறோம் ; அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்று ஆதரவு தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

தீர்மானம் 3 :

கடும் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

இறையாண்மை மிக்க வெனிசுலா நாட்டின் தலைவர் மதுரோ மற்றும் அவரது இணையரை அமெரிக்க ராணுவம் அவரது நாட்டிற்குள் புகுந்து கைது செய்து கடத்திச் சென்று அமெரிக்க சிறையில் அடைத்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இத்தகைய நடவடிக்கையை எதிர்த்து அமெரிக்காவிலும், உலகெங்கிலும் மக்கள் வீதிகளில் இறங்கி போராடிக் கொண்டிருக்கின்றனர்.

சென்னையில், அமெரிக்க தூதரகம் அருகில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜனவரி 5ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியிருந்தோம்.

அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 5ந் தேதி காலை ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தோழர்கள் ஒன்று சேர ஆரம்பித்தவுடன், காவல்துறையின் துணை ஆணையர் தலைமையில் சாலையின் நடைபாதையில் நின்று கொண்டிருந்த தோழர்களை வலுக்கட்டாயமாக காவல்துறை வாகனத்தில் ஏற்றியுள்ளனர். கட்சியின் மாவட்ட செயலாளர் சட்டையைப் பிடித்து இழுத்து காவல்துறை வாகனத்தில் தலை இடிபடும் வகையில் பலவந்தமாக வாகனத்தில் ஏற்றியுள்ளனர். பல தோழர்களை கைகளால் குத்தியும், கால்களால் மிதித்தும் அடித்து ஏற்றியுள்ளனர்.

ஆர்ப்பாட்டம் தொடங்குவதற்கு முன்பே நான்கு வாகனங்களில் ஏற்றப்பட்ட தோழர்கள் அண்ணா சாலையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வரை காவல்துறை வாகனத்தில் அலைக்கழிக்கப்பட்டனர். மூன்று மணி நேரம் வாகனத்தில் அமர்த்தி வைக்கப்பட்டு பின்னர் ராயப்பேட்டையில் உள்ள ஒரு மண்டபத்திற்கு மதியம் ஒரு மணிக்கு அழைத்து சென்றனர்.

இதேபோன்று, ஜனவரி 6 அன்று அமெரிக்க அரசை கண்டித்து காமராஜர் அரங்கத்தின் பின்புறம் உள்ள சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களையும் காவல்துறை பலவந்தமாக கைது செய்துள்ளது. இதேபோன்று தரமணியில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட தோழர்களையும் காவல்துறை கொடூரமாக தாக்கியுள்ளனர். மேலும், தலைவர்கள் உள்ளிட்டு நூற்றுக்கணக்கானோர் மீது பொய் வழக்கும் புனையப்பட்டுள்ளது.

காவல்துறையின் இத்தகைய நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இதுபோன்ற அணுகுமுறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என சுட்டிக்காட்டுகிறது.

அமெரிக்க அரசாங்கத்தை கண்டித்து சென்னையில் அதன் தூதரகம் அருகில் பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடந்து வந்திருக்கின்றன. ஆனால், சமீப காலமாக போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என சென்னை மாநகர காவல்துறை  முடிவெடுத்து அராஜகமாக நடந்து வருகிறது. ஜனநாயக உரிமைகளை எப்படி செயலாக்க வேண்டும் என்பதை சென்னை மாநகர காவல்துறை மட்டுமே தீர்மானிப்பது என்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

எனவே, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் நேரடியாக தலையிட்டு, காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்ட காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், புனையப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்ய காவல்துறைக்கு அறிவுறுத்த வேண்டுமெனவும், வரும் காலங்களில் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட உரிமைகளை ஒடுக்கும் முறைக்கு முடிவு கட்ட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது.

மேலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் சமீப காலத்தில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மீது தண்டனை வரி விதிப்பது உள்ளிட்டு ராணுவத் தலையீடுகளையும் நடத்திவரும் நிலையில், அமெரிக்க தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த பொருத்தமான ஒரு இடத்தை ஒதுக்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

(பெ.சண்முகம்)

மாநில செயலாளர்

Leave a Reply