நாமக்கல் மாவட்டத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவரும், சிறந்த தொழிற்சங்கவாதியாக திகழ்ந்தவருமான தோழர் பி. செங்கோடன் (வயது 84) உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
ஏழை விவசாயக் கூலி குடும்பத்தில் பிறந்த தோழர் செங்கோடன் சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்தபோது தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தவர். ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தில் விவசாய சங்கத்தில் இணைந்து ஏழை விவசாயிகளையும், கிராமப்புற உழைப்பாளி மக்களையும் திரட்டுவதில் முக்கிய பாத்திரம் வகித்தவர். கிராமப்புறங்களில் நிலவும் பண்ணை அடிமைத்தனத்திற்கு எதிராகவும், தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காகவும் பல்வேறு இயக்கங்களை முன்னின்று நடத்தியவர். விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் என பல பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியவர். அவரது மறைவு கிராமப்புற உழைப்பாளி மக்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பேரிழப்பாகும்.
அவரது மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இயக்க தோழர்களுக்கும் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.
பெ. சண்முகம்,
மாநில செயலாளர்







