செய்தி அறிக்கை

தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்திட வேண்டும்! தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!

1 PS copy

தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநில செயலாளர் பெ. சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் ஐ. ஆறுமுக நயினார் இருவரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடத்திட வேண்டுமெனவும், ஏப்ரல் மாதத்தில் தமிழ் வருடப் பிறப்பு, சித்திரை திருவிழாக்கள் நடைபெறுவதால் அதனை கருத்தில் கொண்டு பொருத்தமான தேதியை நிச்சயிக்க வேண்டுமெனவும், எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையால் தமிழகத்தில் விடுபட்ட 74 லட்சம் வாக்காளர்களை கண்டுபிடித்து அவர்களுக்கான வாக்கை உறுதி செய்திட வேண்டுமெனவும், தேர்தல் முடிந்தவுடன் வாக்குப் பதிவு நடந்தவை குறித்து 17 சி படிவம் உரிய முறையில் தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் வெளியிட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது. பண பலத்தின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும், அதிகார துஷ்பிரயோகம் இல்லாமல் தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் தேர்தல் ஆணையம் நடத்த வேண்டுமெனவும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வழங்குகிற சூழலை உருவாக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது. 

மேலும் இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அவர்களிடம் வழங்கிய ஆலோசனைகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

இதனை தங்களின் மேலான பத்திரிகை / தொலைக்காட்சியில் செய்தி வெளியிட கேட்டுக் கொள்கிறோம்.

(பெ. சண்முகம்)
மாநில செயலாளர்

Leave a Reply