விபத்துக்கள் இல்லாமல் பேருந்துகள் இயங்க ஹோமம் நடத்தி பரிகார பூஜை செய்ய வேண்டுமென அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட மேலாண்மை இயக்குநர் அவர்களின் உத்தரவின் பேரில் திருவாரூர் மற்றும் வேளாங்கண்ணி பணிமனையில் பொதுமேலாளர், தொழில்நுட்ப மேலாளர், வணிக மேலாளர் மற்றும் போக்குவரத்து உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு பூஜை நடத்தியுள்ளது கடும் அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த மாதத்தில் மட்டும் 10 மரண விபத்துகள் நடந்துள்ளன. இதைத் தடுக்க தங்களது போதாமை மற்றும் திறமையின்மையை மறைப்பதற்காக அதிகாரிகள் இத்தகைய முயற்சியில் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. என்னென்ன காரணங்களால் விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை கண்டறிந்து வேலைப்பளு, உதிரிபாகங்கள், தொழில்நுட்ப பிரச்சனைகள் இவற்றில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அவற்றை நீக்குவதற்கு முயற்சி செய்திருக்க வேண்டும். மேலும், விபத்தை தடுப்பதற்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்க வேண்டும். இத்தகைய உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திசை திருப்புவதற்காக யாகம் நடத்தி பரிகார பூஜை செய்வது என்பது அறிவியலுக்கு புறம்பான நடவடிக்கையாகும்.
போக்குவரத்துத்துறை அமைச்சகத்திடமிருந்து எந்தவித அனுமதியும் பெறாமல், தனிப்பட்ட மனிதர்களின் நம்பிக்கைகளை அரசிற்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனத்தில் தன்னிச்சையாக திணித்த போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மீது உரிய விசாரணைக்கு உத்தரவிட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.
மேலும், விபத்துக்களை தவிர்க்கும் வகையில் ஊழியர்கள், உதிரிபாகங்கள், பேருந்துகள் பராமரிப்பு போன்றவற்றை மேம்படுத்திடவும், தொழிலாளர்களின் வேலைப்பளுவை குறைக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
(பெ. சண்முகம்)
மாநில செயலாளர்







