19ஆவது நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பின்னடைவைத் தந்து இருப்பவையாகும். கடந்த 2014, 2019 நாடாளுமன்றத் தேர்தல்களில் பாஜக பெற்ற பெரும்பான்மையை தற்போது அது இழந்துள்ளது. வெல்ல முடியாதவர் மோடி என்று அவரைச் சுற்றி எழுப்பப்பட்டிருந்த பிம்பத்தின் மீது விழுந்துள்ள பலத்த அடியாகும் இது. இந்த தேர்தலில் 400 சீட்டுகள் கிடைக்கும் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த நிலையில் இது நடந்தேறி உள்ளது.
எதிர்க்கட்சிகள் மீது கடுமையான தாக்குதல் தொடுக்கப்பட்டிருந்த பின்புலத்தில் இந்த தேர்தல்கள் நடைபெற்றன. ஒன்றிய அரசின் முகமைகள் தவறாகப் பயன் படுத்தப்பட்டன. பெருமளவில் பண பலம் களத்தில் இறக்கப்பட்டது. இத்தகைய எதேச்சதிகார தாக்குதல்களுக்கு எதிராகவும், அரசமைப்பு சட்டம் – ஜனநாயகம்- குடிமை உரிமைகள் பாதுகாக்கவும் உறுதியாக நின்றுள்ள மக்களை அரசியல் தலைமைக் குழு பாராட்டுகிறது.
வேலையின்மை, விலைவாசி உயர்வு, விவசாயிகளின் துயரம், ஜனநாயகம் மற்றும் அரசமைப்பு சட்டம் மீதான தாக்குதல்கள் ஆகிய பிரச்சனைகளை முன்னிறுத்தி குறிப்பிடத்தக்க வெற்றியை “இந்தியா” அணி பெற்றிருக்கிறது. மோடியும் பாஜகவும் மேற்கொண்ட வகுப்புவாத பிரச்சாரத்தை பெருமளவுக்கு அவர்களால் எதிர்கொள்ள முடிந்துள்ளது.
சமதள ஆடுகளத்தை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தி இருந்தால் முடிவுகள் இன்னும் பாஜகவுக்கு எதிரானதாக அமைந்திருக்கும். மோடியின் வகுப்புவாத வெறியேற்றுகிற பேச்சுகளை கட்டுப்படுத்த தவறியதென்பது தேர்தல் ஆணையத்தின் அப்பட்டமான தோல்வியாகும். தேர்தல் நடத்தை விதிகளை அமலாக்கத் தவறியது தேர்தல் ஆணையத்தின் மரியாதை மீது படிந்துள்ள களங்கமும் ஆகும்.
சிபிஎம் மும் இடதுசாரி கட்சிகளும் தங்கள் எண்ணிக்கையை சிறிதளவு மேம்படுத்திக் கொண்டுள்ளன. முழுமையான தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் மேலும் விரிவான பரிசீலனை நடத்தப்படும்.
தேர்தல் தீர்ப்பு வந்துள்ள சமிக்ஞை எதுவெனில், ஜனநாயகம், அரசமைப்பு சட்டம், வாழ்வுரிமை மீதான தாக்குதல்களை மக்கள் எதிர்த்து பின்னுக்குத் தள்ளுவார்கள் என்பதே ஆகும்.