செய்தி அறிக்கை

ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவுகள் – எளிய, நடுத்தர மக்கள் மீது பலத்த அடி! வரி உயர்வுகளை திரும்ப பெறுக! ஒன்றிய அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

399b9cce 2615 11ec 97ad Def1feb12b09 1633463355146

30.06.2022

                ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் எடுத்துள்ள முடிவு, ஏழை எளிய, நடுத்தர மக்கள் மீது பெரும் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

                விதி விலக்குகளை நீக்குதல் (Removal of exemptions) என்ற பெயரில் அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீது ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. முன்னரே உறையிடப்பட்ட (Pre packed) தயிர், மோர், இயற்கை தேன், பார்லி, ஓட்ஸ், மக்கா சோளம், தானியங்கள், மீன் மற்றும் மாமிசம், லஸ்ஸி உள்ளிட்ட உணவுப் பொருட்களும் அதில் அடங்கும்.

                ஏற்கனவே அச்சுத் தொழில், சிறு சிறு நகலகங்கள் திண்டாடுகிற சூழலில் அச்சு மை மற்றும் எழுத்து மை மீதான ஜி.எஸ்.டி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. எல்.இ.டி விளக்குகள் உள்ளிட்ட மின் விளக்குகளுக்கான ஜி.எஸ்.டி-யும் 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. முழுமை அடைந்த தோல் பொருட்கள் (Finished Leather)  மீது ஜி.எஸ்.டி. 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்ந்துள்ளது.

                அஞ்சலக சேவைக்கு 5 சதவீதம், ரூ 1,000/-க்கு குறைவான ஹோட்டல் அறைகளுக்கான வாடகைக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி என்பது எல்லாம் ஏழை, நடுத்தர மக்கள் மீதான துல்லிய தாக்குதல் ஆகும்.

                ஜி.எஸ்.டி முறைமையில் இடு பொருள்களுக்கு கூடுதல் வரியும், உற்பத்தி முழுமையாகும் கட்டத்தில் குறைவான வரியும் விதிப்பது என்பது (Inverse Rate Structure) ஜி.எஸ்.டி சுமையை இன்னும் உயர்த்தும்.

                எல்லாவற்றிற்கும் மேலாக மாநிலங்களுக்கான இழப்பீட்டை நீட்டிப்பது குறித்து அநேகமாக எல்லா மாநிலங்களுமே (ஒரு சில விதி விலக்குகள் தவிர) வலியுறுத்தியும் கூட அதன் மீது ஜி.எஸ்.டி. கமிஷன் முடிவெடுக்கவில்லை. கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் மத்திய ஜி.எஸ்.டி – மாநில ஜி.எஸ்.டி பகிர்வு விகிதத்தை உயர்த்த வேண்டுமென்றும் கோரிக்கைகளை வைத்துள்ளன. ஏற்கனவே செஸ், சர்சார்ஜ் என்ற பெயரில் மாநிலங்களுக்கான வரிப் பங்கை ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. கூட்டாட்சி கோட்பாட்டை பலவீனப்படுத்த தொடர்ந்து முனையும் ஒன்றிய அரசு மாநிலங்களின் கோரிக்கைக்கு தீர்வை வழங்காமலேயே கூட்டத்தை முடித்துள்ளது.

                ஜி.எஸ்.டி முறைமை முற்றிலுமாக நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு புறம்பானதாக அமைந்திருக்கிறது. முன்பெல்லாம் வரி திரட்டல் முடிவுகள், பட்ஜெட்டுகளின் போது, மக்கள் பிரதிநிதிகள் உள்ள அவைகளில் விவாதத்திற்கு உள்ளாகும். ஆனால் இப்போதோ இரண்டு மாத இடைவெளிகளில் ஜி.எஸ்.டி கவுன்சில் கூடுவதும், புதிய சுமைகளை ஏற்றுவதுமான அநீதி அரங்கேறுகிறது.

                ஏற்கனவே மக்கள் கோவிட் பாதிப்புகளில் இருந்து முழுவதும் மீளாத நிலையில், வேலை இழப்பு – வருமான இழப்பால் தத்தளிக்கும் நிலையில் ஜி.எஸ்.டி உயர்வுகள் அவர்களின் அன்றாட வாழ்க்கையை, சிறு வியாபாரத்தை, சிறு தொழில்களை கடுமையாக பாதிக்கும்.

                ஆகவே, உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரிகள் உடனடியாக திரும்ப பெறப்பட வேண்டும்; மாநிலங்களுக்கான இழப்பீடு தொடர வேண்டும்; ஒன்றிய – மாநில ஜி.எஸ்.டி பகிர்வு விகிதம் மாற்றப்பட்டு மாநில உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும். கூட்டாட்சி விழுமியங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.

CPIM Tamilnadu
the authorCPIM Tamilnadu