முதுபெரும் முற்போக்கு எழுத்தாளர் தோழர் கு. சின்னப்ப பாரதி (88) மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவருடைய மறைவு முற்போக்கு கலை இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும்.
ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தன்னை இணைத்துக் கொண்ட அவர் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், கரும்பு விவசாயிகள் சங்கம் போன்ற அமைப்புகளில் முக்கிய பங்காற்றியவர். தோழர் பி. சீனிவாசராவ் தலைமையில் நில உச்சவரம்பு கோரி கோவையிலிருந்து சென்னைக்கு சென்ற நடை பயணக்குழுவில் இடம்பெற்றவர். இறுதிவரை உறுதியான மார்க்சிஸ்ட்டாக வாழ்ந்தவர்.
செம்மலர் இலக்கிய மாத இதழை துவக்கியவர் தோழர் கு.சி.பா. பின்னர் அந்த ஏட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஒப்படைத்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தை உருவாக்கிய தலைவர்களில் ஒருவர். தாகம், சங்கம், சர்க்கரை, பவளாயி, தலைமுறை மற்றும் சுரங்கம், பாலை நில ரோஜா ஆகிய ஏழு நாவல்களையும் ஏராளமான சிறுகதைகளையும், கவிதைகளையும் எழுதி குவித்தவர் தோழர் கு.சி.பா.
கள ஆய்வுகள் மூலம் நாவல்களை உருவாக்கும் ஆற்றல்படைத்த கு.சி.பா. கொல்லிமலை மலைவாழ் மக்கள் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு சங்கம் நாவலை படைத்ததோடு, மேற்குவங்க மாநிலம் அசன்சோலி சுரங்கப்பகுதிக்குச் சென்று தங்கியிருந்து சுரங்கத் தொழிலாளர்களின் வாழ்க்கையை சுரங்கம் என்ற நாவலாக படைத்து தந்தவர். தமிழில் சோசலிச எதார்த்தவாத படைப்புகளை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர்.
இவருடைய படைப்புகள் இந்திய மொழிகளில் மட்டுமின்றி ஆங்கிலம், பிரெஞ்சு, மலாய், சிங்களம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளிலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தில்லி தமிழ்ச் சங்க விருது, உலகத் தமிழ் பண்பாட்டு மைய விருது, கலைஞர் பொற்கிழி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.
தம்முடைய பெயரில் இலக்கிய விருதுகள் வழங்குவதற்காக அறக்கட்டளை ஒன்றைத் துவக்கி ஏராளமானோருக்கு விருதுகள் தந்த அவர் பின்னர் இந்த அறக்கட்டளையை தமுஎகசவிடம் ஒப்படைத்தார்.
தோழர்கள் இ.எம்.எஸ். நம்பூதிரிபாத், என். சங்கரய்யா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களால் போற்றி பாராட்டப்பட்டவர். தமிழக முற்போக்கு இலக்கிய உலகில் முகங்களில் ஒருவராக செயல்பட்ட தோழர் கு. சின்னப்ப பாரதி தன்னுடைய படைப்புகளின் வழியே என்றென்றும் நினைவு கூறப்படுவார்.
அவரை இழந்து வாடும் அவரது மகள்கள் பாரதி, கல்பனா ஆகியோருக்கு கட்சியின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.