மற்றவை

சிபிஐ(எம்) அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் கொடியேரி பாலகிருஷ்ணன் மறைவு தமிழ்நாடு மாநிலக்குழு செவ்வஞ்சலி

309862847 622915109292813 7940630633745151206 N

02.10.2022

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் மகத்தான தலைவரும், அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், கேரள மக்களின் இதயங்களில் நிறைந்திருப்பவருமான தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் நேற்றிரவு காலமானார். அவரது மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் தமிழ்நாடு மாநிலக்குழு செவ்வாஞ்சலியையும், வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது,

கண்ணூர் மாவட்டத்தில் பிறந்த தோழர் கொடியேரி பாலகிருஷ்ணன் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தனது மாணவப் பருவம் முதலே வீரஞ்செறிந்த போராட்டங்களில் பங்கேற்றார். கண்ணூர் மாவட்டத்தில் மதவெறியர்களால் திட்டமிடப்பட்டு கலவரங்கள் நடத்தப்பட்ட போது, அந்த பிரதேசம் முழுவதும் தீவிரமாக செயல்பட்டு மதநல்லிணக்கத்தையும் மக்கள் ஒற்றுமையையும் பேணி பாதுகாத்திட்ட மகத்தான தலைவர் தோழர் கொடியேரி பாலகிருஷ்ணன். அவசர நிலை காலத்தின் போது மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 18 மாதங்கள் கண்ணூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, காவல்துறையின் கடும் சித்ரவதைக்கு உள்ளானவர். கேரளத்து மக்களின் நலன் காக்கவும், நாடு முழுவதும் உள்ள பாட்டாளி மக்களின் நலன் காக்கவும், வர்க்கப் போராட்டத்தின் முன்னணி தளபதிகளில் ஒருவராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வழிநடத்தியவர்.

தோழர் கொடியேரி பாலகிருஷ்ணன் கிளைச் செயலாளர் பொறுப்பில் துவங்கி, மாணவர் சங்க மாநில செயலாளர், வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர், மாநிலக்குழு உறுப்பினர், மாநில செயற்குழு உறுப்பினர், மத்தியக்குழு உறுப்பினர், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், மூன்றுமுறை கேரள மாநிலச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றி தடம் பதித்தவர். 1982 இல் முதல்முறையாக தலசேரி தொகுதியிலிருந்து கேரள சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட அவர், தொடர்ந்து 1987, 2001, 2006, 2011 தேர்தல்களில் மகத்தான வெற்றி பெற்று உள்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் திறம்பட செயல்பட்டவர். கேரள மக்களின் நலன்களுக்காவும், மாநில வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்ட தோழர் கொடியேரி பாலகிருஷ்ணன் அவர்களின் மறைவு இடதுசாரி இயக்கத்திற்கும், முற்போக்கு சக்திகளுக்கும் பேரிழப்பாகும். சிபிஐ (எம்) தமிழ்நாடு மாநிலக்குழு அவருக்கு தனது அஞ்சலியையை தெரிவித்துக் கொள்கிறது.

தோழர் கொடியேரி பாலகிருஷ்ணன் குடும்பத்தாருக்கும், கேரள மக்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது.

தோழர் கொடியேரி பாலகிருஷ்ணன் மறைவையொட்டி கட்சி நிகழ்ச்சிகளை மூன்று நாட்களுக்கு ரத்து செய்து கட்சி கொடியை அரைக்கம்பத்திற்கு பறக்கவிட்டு இரங்கல் அனுஷ்டிக்க வேண்டுமென கட்சி அணிகளை மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

கே. பாலகிருஷ்ணன்
மாநில செயலாளர்

CPIM Tamilnadu
the authorCPIM Tamilnadu