21.10.2022
தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மயிலாடுதுறை மாவட்டம், மாணகிரி பகுதியைச் சேர்ந்த மீனவர் வீரவேல் படுகாயமுற்று சிகிச்சை பெற்று வருகிறார். இந்திய கடற்படையினரின் இந்த கொடூரச் செயலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வன்மையாக கண்டிக்கிறது.
ஏற்கனவே தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும், சிறை பிடிக்கப்படுவதும், உடமைகளை சேதப்படுத்துவதும் போன்ற கொடுமைகளை தொடர்ந்து அனுபவித்து வரும் நிலையில், தற்போது இந்திய கடற்படையினரும் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது கொடூரத்தின் உச்சமாகும்.
எனவே, துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடற்படையினர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்திட வேண்டுமெனவும், படுகாயமுற்று சிகிச்சைப் பெற்று வரும் தமிழக மீனவருக்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.
அதுபோல் இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு நிரந்தர தீர்வு காணவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஒன்றிய அரசை சிபிஐ (எம்) வலியுறுத்துகிறது.
கே. பாலகிருஷ்ணன்
மாநில செயலாளர்