மற்றவை

நளினி, முருகன் உட்பட 6 பேர் விடுதலை! உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

Rajiv Murder 7members 1598176850 1612459140 1668156690

11.11.2022

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனைப் பெற்ற பேரறிவாளன் தொடர்ந்த வழக்கின் மீது 2021 மே மாதம் உச்சநீதிமன்றம் அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது தொடரப்பட்ட வழக்கில் நளினி, முருகன், ராபர்ட் பயாஸ், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் அளித்திருக்கிற தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.

இந்த வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்த இவர்களை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பிற கட்சிகள் மற்றும் ஜனநாயக இயக்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. தமிழக சட்டமன்றத்திலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அரசியல் சாசனப்பிரிவு 161 கீழ் இவர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தும், ஆளுநரும், ஒன்றிய அரசும் உள்நோக்கத்துடன் முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு வந்தனர். பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பின்னராவது ஆளுநர் மீதமுள்ள 6 பேரையும் விடுதலை செய்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஆளுநர் இதை நிறைவேற்றவில்லை.

இந்த சூழ்நிலையில் தற்போது மீதமுள்ளவர்கள் தங்களையும் விடுவிக்க வேண்டுமென்ற தொடர்ந்த வழக்கில், ஆளுநர்கள் தொடர்ந்து காலம் தாழ்த்தியதை சுட்டிக்காட்டியும், அவர்களின் நன்னடத்தை சிறையில் கல்வி கற்றது, பரோல் நடைமுறைகளை முறையாக கடைபிடித்தது ஆகியவற்றை குறிப்பிட்டு உச்சநீதிமன்றம் இவர்களை விடுதலை செய்திருக்கிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியும் அவரோடு சேர்ந்து சிலரும் படுகொலை செய்யப்பட்டது மிகுந்த வேதனைக்குரிய நிகழ்வாகும். இவ்வழக்கில் தண்டனை பெற்றவர்கள் நீண்ட காலம் சிறை தண்டனை அனுபவித்த பின்னணியில் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இவ்வாறு பொது மன்னிப்பு வழங்குவது அரசியல் சட்டம் ஏற்றுக்கொண்ட ஒன்றாகும். இத்தகைய மனிதாபிமான நடைமுறையினை ஒன்றிய பாஜக அரசும், அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் ஆளுநரும் உள்நோக்கத்துடன் கிடப்பில் போட்டது மட்டுமின்றி, மாநில அரசின் சிபாரிசுகளையும் நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தியது மாநில அரசுகளின் உரிமைகளை தட்டி பறிப்பதாகும். இந்நிலையில் உச்சநீதிமன்றம் மாநில அரசின் உரிமைகளை உறுதிபடுத்தியதுடன், ஆளுநரின் செயல்பாட்டிற்கும், ஒன்றிய அரசுக்கும் சரியான பாடம் புகட்டியுள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

கே. பாலகிருஷ்ணன்
மாநில செயலாளர்

CPIM Tamilnadu
the authorCPIM Tamilnadu