மற்றவை

ஸ்டெர்லைட் படுகொலைகள்: சி.பி.ஐ(எம்) விமர்சனம் குறித்து சி.வி.சண்முகம் அறிக்கை! அவதூறுச் சேற்றுக்குள் உண்மையை புதைக்கும் முயற்சியே

Rrr Copy

05.11.2022

ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடக் கோரி அமைதியான முறையில் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் போது காவல்துறையினரே வன்முறை ஏவியதும், குருவிகளை சுடுவதைப் போல மக்களை சுட்டுக் கொன்று குவித்ததையும் நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை ஆணித்தரமாக வெளிக் கொண்டுவந்துள்ளது. இந்த வழக்கில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளோடு அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், வேதாந்தா நிறுவனமும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்துகிறது. இதனால் ஆத்திரமடைந்த அதிமுக, அமைப்புச் செயலாளர் திரு சி.வி.சண்முகம் எம்.பி. ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கை அவதூறுகளை அள்ளி வீசி உண்மையைப் புதைத்துவிடலாம் என்ற அற்ப முயற்சியே தவிர வேறல்ல என்பதை புரிந்து கொள்ள முடியும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கும்போது உரிய ஆதாரங்கள் இன்றி வைப்பதுமில்லை, வற்புறுத்துவதுமில்லை. முன்னாள் முதலமைச்சர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்ற குற்றச்சாட்டினை நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்களது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள அடிப்படையிலேயே வற்புறுத்தி வருகிறோம். மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் அதிமுக ஆட்சியின்போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் நியமிக்கப்பட்டது என்பதை திரு சி.வி. சண்முகம் அவர்கள் மறுக்கமாட்டார் என கருதுகிறோம்.

போராட்டம் 44வது நாளாக தொடர்ந்த போது தனது உருக்காலையை பராமரிப்பதற்காக 15 நாட்கள் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு அதன் உரிமத்தை புதுப்பிக்க நிர்வாகம் விண்ணப்பித்தது. ஆனால் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 9.4.2018 அன்றைய உத்தரவின்படி உரிமத்தை புதுப்பிக்க மறுத்து விட்டது. மேலும் மின்சார இணைப்பையும் துண்டிக்க உத்தரவிட்டது. ஆனால் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவுகளை மீறி ஸ்டெர்லைட் உருக்காலை செயல்பட்டு வந்தது. இதுகுறித்து “இந்த ஆணையம் தனது உணர்வை மறைக்க இயலாமல் கூறுவது என்னவெனில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலையின் இயக்கத்தை புதுப்பிக்க மறுத்து உத்தரவிட்டுள்ளதையும் பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரியச் செய்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை திறமையாக ஒருங்கிணைத்து செயல்பட்டிருந்தால் 22.5.2018 அன்று நடந்த துயரச் சம்பவத்தை நிச்சயமாக தவிர்த்திருக்கலாம்”. என ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆணையத்தின் கூற்றுப்படி ஸ்டெர்லைட் ஆலையின் இயக்கத்தை நிறுத்துவதற்கும் மின் இணைப்பை துண்டிப்பதற்கும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த மறுத்தது ஏன்?. இந்த உத்தரவுகளை எல்லாம் மீறி ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்குவதற்கு பின்புலமாக இருந்த சக்தி எது? போன்ற பல கேள்விகளுக்கு விடை தெரிந்தாக வேண்டும். மட்டுமின்றி, ஏற்கனவே ஆலையை மூடுவதற்கும், மின் துண்டிப்பு செய்வதற்கும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்ட பின்னர் அந்த உத்தரவுகளை பொதுமக்களிடம் எடுத்துச் சொல்லி போராட்டத்தை சுமூகமாக முடிக்க 22.5.2018 மேற்கொள்ளாதது ஏன்? என்பதும் விசாரிக்கப்பட வேண்டியுள்ளது.

அனைத்திற்கும் மேலாக, நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில், “பிறரை போல தானும் ஊடகங்களை பார்த்துதான் ஸ்டெர்லைட் கலவரம் பற்றி தெரிந்து கொண்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். ஆனால் அரசின் அப்போதைய தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி கே. ராஜேந்திரன், உளவுத் துறை ஐஜி கே. என். சத்யமூர்த்தி ஆகியோர் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் தூத்துக்குடியில் நடைபெற்ற கலவரம் குறித்து நிமிடத்திற்கு நிமிடம் தகவல் தெரிவித்திருப்பதாக கூறிய ஆதாரம் இருப்பதால் எடப்பாடி பழனிசாமி கூறியது பொய் என்று தெரிய வருகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

திரு. சி.வி.சண்முகம் முன்னாள் சட்ட அமைச்சராவார். அவர் அரசு நிர்வாகத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் நீக்கமற அறிந்தவர். தமிழகத்தில் நடக்கும் ஒவ்வொரு சம்பவம் குறித்தும் உடனுக்குடன் உளவுத்துறை மூலம் முதலமைச்சருக்கு அறிக்கை அளிக்கும் நடைமுறை உள்ளது அவர் அறிந்ததே. மேலும், ஆணையம் சுட்டிக்காட்டியது போல, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து உடனுக்குடன் உளவுத்துறை மூலமும், தலைமைச் செயலாளர் மூலமும் அவருக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, அங்குள்ள பதட்ட நிலைமை குறித்து உளவுத்துறை அறிக்கையும் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வளவுக்கு பிறகும் தொலைக்காட்சியை பார்த்துதான் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தான் அறிந்ததாக முதலமைச்சர் கூறியிருப்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்பதை மறுக்க இயலாது. இருந்தும், முன்னாள் சட்ட அமைச்சர் இதையே மீண்டும் மீண்டும் வழிமொழிவது துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திலிருந்து அப்போதைய முதலமைச்சரை தப்புவிப்பதற்கான கீழ்த்தரமான முயற்சியே தவிர வேறல்ல.

தூத்துக்குடியில் 100 நாட்களாக போராடி வந்த மக்களது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பல நல்ல வாய்ப்புகள் இருந்த போதும் அவைகளை எல்லாம் பயன்படுத்த அரசாங்கம் தவறியதன் பின்னணியிலேயே மே 22ந் தேதிய கொடூரச் சம்பவம் நடந்துள்ளதை ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

ஆணையத்தின் அறிக்கை 38வது பாராவில், “தூத்துக்குடியில் நிலவிய தீவிரமான சூழ்நிலை சம்பந்தமாக வேரும் யாரும் அல்ல, மாநில நுண்ணறிவு தலைவரே (கே.என். சத்தியமூர்த்தி) முதலமைச்சரைச் சந்திப்பதற்காக சேலம் வரை சென்று முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. உடனடியாக முதலமைச்சருக்கு இவ்வலுவான நுண்ணறிவு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தும், கடுமையான சட்டம் – ஒழுங்கு நிலைமை கவனிக்கப்படாமல் இருந்தது வியப்பை ஏற்படுத்துகிறது. இந்த கடுமையான பிரச்சனையை தீவிரமாக கவனித்திருந்தால் ஆரம்பக் கட்டத்திலேயே திறன்பட சமாளித்திருக்கலாம். அவ்வாறு செய்யாதது அலட்சியமாகவும், அசட்டையாகவும் இருந்ததற்கு ஒரு உதாரணமாகும்.”

இவ்வாறு ஆணையம் ஆணித்தரமாக கூறியுள்ளது. அப்போதைய முதலமைச்சருக்கு அளிக்கப்பட்ட உளவுத்துறையின் அறிக்கையின் மீது நடவடிக்கை எடுக்காமல் தடுத்தது எது? வெறும் அலட்சியமா அல்லது வேதாந்தா நிறுவனத்தை பாதுகாக்கும் அணுகுமுறையா?. நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் முன்னாள் முதலமைச்சரும், வேதாந்தா நிறுவனமும் விசாரணை வளையத்திற்குள் வந்தால்தான் உண்மையை கண்டறிய முடியும். ஸ்டெர்லைட் படுகொலைகளில் அன்றைய முதலமைச்சருக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என்றால், விசாரணையை எதிர்கொள்வதற்கு என்ன தயக்கம் என்பதற்கு சி.வி.சண்முகம்தான் பதில் சொல்ல வேண்டும்.

போகிற போக்கில் திரு சி.வி.சண்முகம் அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து அதிமுக அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆனால், 01.08.1994 அன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலைக்கு தடையில்லா சான்று வழங்கியபோதும், 30.10.1994ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டபோதும், 1995 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தியை துவக்கிட அனுமதி வழங்கியபோதும், 2016 ஆம் ஆண்டு 2வது யூனிட்டிற்கு அனுமதி வழங்கியபோதும் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியே இருந்ததும், அந்த அரசில் அவர் அமைச்சராகவும் இருந்தார் என்பதுமே உண்மைகள்.

மேலும், துப்பாக்கிச்சூட்டிற்கு பின்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் இணையதள வசதியை முடக்கி ஜனநாயக உரிமைகளை பறித்து சில ஆயிரம் அப்பாவி இளைஞர்களை இரவோடு இரவாக கைது செய்து பல்வேறு பிரிவுகளில் பொய் வழக்கு போட்டு சித்ரவதை மேற்கொண்டது அதிமுக அரசு என்பதையும் மறுக்க முடியாது. மேலும், நடைபெற்ற துப்பாக்கிச்சூடு மக்கள் கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டது என அரசின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு செய்ததும் அதிமுக அரசுதான் என்பதை திரு சி.வி.சண்முகம் அவர்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறோம்.
மேலும், 20.12.2018 அன்று அன்றைய சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்களை நானும், சிபிஐ(எம்) தூத்துக்குடி மாவட்ட செயலாளர் திரு கே.அர்ச்சுணனும் நேரில் சந்தித்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனி சட்டம் இயற்ற வேண்டும் எனவும், சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டுமெனவும் மனு கொடுத்து வற்புறுத்தினோம். ஆனால், இவ்வளவு நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ள திரு சி.வி.சண்முகம் அவர்கள் அன்றைக்கு இக்கோரிக்கைகள் மீது குறைந்த நடவடிக்கைகள் கூட மேற்கொள்ளவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு படுகொலைகளுக்கு பொறுப்பான அனைவர் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்து உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். முன்னாள் முதலமைச்சர், வேதாந்தா நிறுவனம் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களும் விசாரணையிலிருந்து தப்பிவிடக் கூடாது. அமைதியாக போராடிய மக்கள் மீது கொடூரமான தாக்குதல் தொடுத்திருக்கிற அரசு பயங்கரவாத நடவடிக்கை தமிழகத்தில் எதிர்காலத்தில் எங்கேயும் தலையெடுக்காமல் தடுப்பதற்கு இந்த நடவடிக்கைகள் ஒரு படிப்பினையாக அமைந்திட வேண்டும் என்பதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் அழுத்தமான வற்புறுத்தலாகும்.

கே.பாலகிருஷ்ணன்

மாநில செயலாளர்

CPIM Tamilnadu
the authorCPIM Tamilnadu