கடிதங்கள்செய்தி அறிக்கை

கோகுல் ஸ்ரீ மரணத்திற்கு காரணமானவர்கள் கைது! தாயாருக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு, வீடு ஒதுக்கீடு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!!

கே. பாலகிருஷ்ணன்

மாநில செயலாளர்

06.02.2023

பெறுதல்

            மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,

            தமிழ்நாடு அரசு,

            தலைமைச் செயலகம்,

            சென்னை - 600 009.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்.

            செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் கொலை செய்யப்பட்ட கோகுல்ஸ்ரீயின் தாயார் திருமதி பிரியா அவர்களை 22.01.2023 அன்று நானும் மற்றும் எங்கள் கட்சியின் மாவட்டத் தலைவர்களும் நேரில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆறுதலை தெரிவித்தோம்.

            இச்சந்திப்பிற்கு பிறகு, கோகுல்ஸ்ரீ கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யவும், அவரது தாயார் பிரியா அவர்களுக்கு நஷ்ட ஈடும், அரசு வீடும், வேலையும், தமிழ்நாடு முழுவதும் கூர்நோக்கு இல்லங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும், கூர்நோக்கு இல்லங்களின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறன்களை மேம்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும்  தங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை விடுத்திருந்தேன்.

            இக்கோரிக்கையினை ஏற்று இன்று (06.02.2023) கொலை செய்யப்பட்ட கோகுல்ஸ்ரீயின் தாயாருக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடும், தமிழ்நாடு நகரப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின், “அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ் ஒரு குடியிருப்பு ஒதுக்கீடு செய்தும், குற்றம்சாப்பட்டப்பட்டுள்ள கூர்நோக்கு இல்ல அலுவலர்கள் ஆறு பேரை கைது செய்தும், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியற்றின் செயல்பாடுகள், நிர்வாகத் திறன்களை மேம்படுத்தும் பொருட்டு சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில், ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் சார்பாக ஒரு பிரதிநிதியும் உள்ளடக்கிய உயர்மட்டக்குழு ஒன்று உருவாக்கப்படும் எனவும்  தாங்கள் அறிவித்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம், நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

            கோகுல்ஸ்ரீயின் மரணத்திற்கு பின்னர் சாட்சியங்களை மறைக்கவும், தடயங்களை அழிக்கவும் கூர்நோக்கு இல்ல அதிகாரிகளும், குற்றவாளிகளும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். எனவே, இவ்வழக்கின் விசாரணையை துரிதப்படுத்தி இந்த கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் பாரபட்சமின்றி கைது செய்து உரிய சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.