செய்தி அறிக்கை

விழுப்புரம் ஆசிரமத்தில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை மற்றும் மனித உரிமை மீறல்கள்! இச்சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்

Firefox Screenshot 2023 02 16t03 59 42.713z

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், குண்டலப்புலியூர் பகுதியில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி என்ற ஆசிரமத்தில் தமிழ்நாடு, கேரளம், கர்நாடக உள்ளிட்டு பல மாநிலங்களிலிருந்து 143 பேர் அடைத்து வைக்கப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டுள்ளதும், இளம் பெண்களை போதைப்பொருட்கள் கொடுத்து பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளதும், பலர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த மனிதாபமற்ற கொடுஞ்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

ஜோதி ஆசிரமம் உரிய அனுமதி பெறாமல் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளது. இதில் அனுமதிக்கப்பட்டவர்களை விவசாய வேலைகளுக்கு பயன்படுத்துவது, மாடு மேய்க்க விடுவது, அப்படி செய்யாதவர்களை சங்கிலியால் அடித்து சித்தரவதைகளுக்கு உள்ளாக்குவது, குரங்குகளை விட்டு கடிக்க விடுவது, வெளிமாநிலங்களுக்கு கடத்துவது  உள்ளிட்ட மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். பெண்கள் – சிறுமிகளை போதைப் பொருட்கள் கொடுத்து பாலியல் வன்முறைகளும் செய்துள்ளனர். இங்கு தங்கியிருந்த 16க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளனர். இதில் திருப்பூரைச் சேர்ந்த ஹனிதீன் என்பவர் கடந்த 2021ம் ஆண்டு ஜபாருல்லா என்பவரை (45 வயது) ஆசிரமத்தில் சேர்த்து விட்டுள்ளார். ஓராண்டு கழித்து அவரை பார்க்கச் சென்ற போது மேற்படி நபரை காணவில்லை. இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணைக்குப் பிறகு ஆசிரமத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுபோன்று காணாமல் போயுள்ளவர்கள் குடும்பத்iச் சார்ந்தவர்கள் பலர் நீதிமன்றத்தை நாடாமலே உள்ளனர்.

2018ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம், பாலேஸ்வரத்தில் இயங்கி வந்த கருணை இல்லத்தில் பல மனநோயாளிகள், முதியவர்கள் சித்தரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்து தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பின்னணியில் தற்போதும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வது வேதனையானது. 

எனவே, இந்த ஆசிரமத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்தும், பாலியல் வன்முறைகள் குறித்தும், காணாமல் போயுள்ளவர்கள் குறித்தும் விசாரிப்பதற்கு ஒரு சிறப்பு விசாரணை அல்லது சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டுமெனவும், தமிழ்நாடு முழுவதும் செயல்படும் ஆசிரமங்கள், காப்பகங்கள், முதியோர் இல்லங்கள் முறையாக செயல்படுகின்றனவா என்பது குறித்து ஆராய்வதற்கு ஒரு சிறப்புக்குழுவை ஏற்படுத்தி முறைப்படுத்திட வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.