மற்றவை

சுங்க கட்டணம் உயர்விற்கு சிபிஐ(எம்) கண்டனம்!

இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை வரும் ஏப்ரல் 1ந் தேதி முதல் 5 முதல் 10 சதவிகிதம் வரை உயர்த்த தேசிய நெடுஞ்சாலை திட்ட ஆணையம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே கடுமையான விலைவாசி உயர்வு, வேலையின்மையால் சாதாரண ஏழை, எளிய நடுத்தர மக்கள் சொல்லொணா துயரங்களைச் சந்தித்து வரும் நிலையில், இந்த சுங்க கட்டண உயர்வால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. வணிகர்கள், வாகன உரிமையாளர்கள் மட்டுமல்லாமல் அனைத்துப் பகுதி பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சாமானிய மக்களின் வரிப் பணத்தில் மாநில அரசு அமைத்துள்ள சாலையில், தனியார் நிறுவனங்கள் மக்களிடம் பணம் வசூலிக்க சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமாக 62 சுங்கச்சாவடிகள் உள்ளன.

இதில் காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை மூட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டு ஜனநாயக இயக்கங்களும், பொதுமக்களும் தொடர்ந்து போராடி வந்த நிலையில், இவற்றை அகற்றுவதற்கு தமிழ்நாடு அரசும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பியது.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஒன்றிய பாஜக அரசு கிடப்பில் போட்டுள்ளது. 60 கிலோ மீட்டர் தூர இடைவெளியில் இருக்கும் சுங்கச்சாவடிகள், நகர்ப்பகுதியில் இருக்கும் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

காலாவதியான சுங்கச்சாவடிகள் அனைத்தும் பணம் வசூலிக்கும் மையங்களாகவே செயல்பட்டு பொது மக்களிடம் கொள்ளையடித்து வருகின்றன. சுங்கச் சாவடிகள் சாலைகளை சீரமைப்பது போன்ற பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படுவது இல்லை. சட்ட விதிகள் எதையும் முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை.

இதை தடுக்க வேண்டிய ஒன்றிய அரசு சுங்கச்சாவடி உரிமையாளர்களோடு கை கோர்த்துக் கொண்டு கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு வருவது கடும் கண்டத்திற்குரியது.

எனவே, ஒன்றிய அரசு உத்தேசித்துள்ள சுங்க கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமெனவும், தமிழகத்தில் காலவதியாகியுள்ள 32 சுங்கச் சாவடிகளையும், 60 கி.மீ. தூரத்திற்கு குறைவாக இருக்கும் சுங்க சாவடிகளையும், நகர்புறத்தில் இயங்கும் சுங்கச் சாவடிகளையும் உடனடியாக அகற்றிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.