மற்றவை

கலாசேத்ரா கல்லூரி மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தல் செய்த பேராசிரியர்களை கைது செய்திடுக!

கலாசேத்ரா கல்லூரி Copy

தீர்மானம் – 2

கடந்த இரு தினங்களாக சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள கலாசேத்ரா அறக்கட்டளையின், ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் போராடி வருகின்றனர். 2018 முதல் பாலியல் வன்கொடுமையை சந்தித்து வருவதாகவும், கல்லூரி நிர்வாகம் இதனை கண்டுகொள்ளாமல் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. கல்லூரி ஆசிரியர்களான அரிபத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோர் பாலியல் துன்புறுத்தல் செய்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ஹைதராபாத்தில் நடந்த நிகழ்வுக்கு சென்னை மாணவிகளுக்கு பாதுகாப்பாக மேற்படி ஆசிரியர்களை நிர்வாகம் அனுப்பியது என்ற தகவல், மாணவிகள் மீது நடத்தப்படும் பாலியல் துன்புறுத்தல்களை கண்டு கொள்ளாதது மட்டுமல்ல உடந்தையாகவும் செயல்பட்டதோ என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. எனவே, மேற்படி குற்றச்சாட்டு சார்ந்த அம்சத்தில் நிர்வாகம் நேர்மையாக நடக்கும் என்ற நம்பிக்கை உருவாகவில்லை.

            இந்த பின்னணியில் தமிழ்நாடு அரசு தலையிட்டு மேற்படி 4 ஆசிரியர்களையும் பணியிடை நீக்கம் செய்து, அவர்கள் மீது பாலியல் வன்கொடுமை பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை பாலியல் ரீதியான துன்புறுத்தல் சார்ந்த குற்றச்சாட்டு அளித்த மாணவிகளிடம் பாலியல் வழக்குகள் குறித்த வழிகாட்டுதல்படியான நடைமுறைகளை பின்பற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

            தமிழ்நாடு சட்டமன்றத்தில் இப்பிரச்சனை விவாதிக்கப்பட்டு மாநில முதல்வர் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க உறுதியளித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேபோல், மாநில மகளிர் ஆணைய தலைவர் திருமதி குமரி நேரில் சென்று விசாரித்ததும் சரியானதே. புகார் அளிக்க மாணவிகளிடம் உள்ள தயக்கம், மாணவிகளின் எதிர்காலம் குறித்த அச்சம் சார்ந்தது. மாணவிகளின் சமூக உளவியல் பிரச்சனைகளை புரிந்து கொண்டு காவல்துறை நிர்வாகம்,  அரசு, மகளிர் ஆணையம் உரிய வகையில் கையாள்வதும், குற்றவாளிகள் தப்பிவிடாமல் இருக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வேண்டுமென சிபிஐ (எம்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. நேற்று மாலை முதல் போராடும் மாணவிகளுக்கு துணையாக சமூக மற்றும் உளவியல் ரீதியில் உடனிருந்து போராடும் அனைத்திந்திய ஜனநயாக மாதர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் அமைப்பினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகிறது.