மற்றவை

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் (ஓ.என்.ஜி.சி.)பிராந்திய தலைமை அலுவலகத்தை சென்னையிலிருந்து மாற்றும் முயற்சியை கைவிடுக!

Untitled 1

கடந்த 2003ம் ஆண்டு முதல், ஆந்திரப் பிரதேசம் மாநிலம் ராஜமுந்திரியைச் சுற்றியுள்ள கிருஷ்ணா – கோதாவரி எண்ணெய் படுகை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள காவிரி எண்ணெய் படுகை ஆகியவற்றின் எண்ணெய் வளம் குறித்து புவியியல் ஆய்வு மூலம் எண்ணெய் படுகைகளை கண்டறிவதும், அதிலிருந்து இயற்கை எரிவாயுவை பிரித்தெடுப்பதற்குமான செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான தலைமையகம் சென்னையில் இயங்கி வருகிறது. இதற்கு முன்னரும் ஒரு சில சந்தர்ப்பங்களில் இந்த அலுவலகத்தை பிரித்து ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கு அனுப்புவதற்கான முயற்சிகள் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு, ஜனநாய இயக்கங்கள் மற்றும் ஊழியர்களின் எதிர்ப்பு காரணமாக அது கைவிடப்பட்டது. தற்போது மீண்டும் கிருஷ்ணா – கோதாவரி படுகை குறித்த செயல்பாடுகளுக்கான அலுவலகத்தை சென்னையிலிருந்து பிரித்து ராஜமுந்திரிக்கு அனுப்புவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக தெரிகிறது. இதை தமிழ்நாட்டு மக்களும், அரசாங்கமும், ஊழியர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

            சென்னையில் உள்ள தாளமுத்து நடராசன் கட்டிடத்தில் உள்ள இயற்கையோடு இயைந்த அலுவலகம் (Green Building) ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் பெரும் செலவு செய்து சொந்தமாக கட்டப்பட்டது. இவற்றில் சுமார் 600 நிரந்தர ஊழியர்களும், ஆயிரக்கணக்கான துணை நிலை ஒப்பந்த ஊழியர்களும் செயல்படுகிறார்கள்.  அண்ணா நகரில் பெரும் மூலதனத்தில் உருவான ஊழியர் குடியிருப்பு உள்ளது. அதில் ஊழியர்களின் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகாலமாக இங்கு செயல்பட்டு கொண்டிருக்கிற இந்த ஊழியர்களினுடைய எதிர்காலத்தைப் பற்றி கணக்கில் கொள்ளாமல் அதை மூடுவதன் மூலம் தமிழ்நாட்டில் ஏற்கனவே இருக்கக் கூடிய வேலைவாய்ப்புகள் பறிபோகும் சூழல் ஏற்படும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு பதிலாக இருக்கும் வேலை வாய்ப்புகளை பறிக்கும் ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை கடுமையான கண்டனத்திற்குரியது.

            எனவே, ஒன்றிய அரசின் எண்ணெய் வள அமைச்சகம் உடனடியாக தலையிட்டு ஓ.என்.ஜி.சி.யின் கார்ப்பரேட் தலைமையகம் எடுத்திருக்கக் கூடிய இந்த தவறான முயற்சியை கைவிடச் செய்ய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரக் கூடிய இதுபோன்ற ஒரு முக்கியமான  அமைப்பை மூடுவது சரியல்ல. எனவே, மாநில அரசும் ஒன்றிய அரசை இது குறித்து வற்புறுத்த வேண்டுமென சிபிஐ (எம்) தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.