பெ.சண்முகம், மத்திய குழு.
கார்ப்பரேட் நிறுவனங்களின் பாதுகாவலன், இந்திய பெருமுதலாளிகளின் புரவலர் மோடி என்பது உலகம் ஏற்றுக் கொண்ட உண்மை. அப்படிப்பட்டவர் இந்திய பிரதமராக இருந்து ஆட்சி செய்யும் நாட்டில் விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் அரசின் ஆதரவு எப்படி இருக்க முடியும்? “பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழனாக” நடிக்க வேண்டுமானால் செய்யலாம். அந்த நடிப்புத் தொழிலைத் திறம்பட நிறைவேற்றுபவராக மோடி விளங்குகிறார். அதனால்தான் மூன்றாவது முறையாக அவரையே பிரதமராக அக்கட்சி தேர்ந்தெடுத்துள்ளது.
வேளாண் சட்டங்களும் விவசாயிகள் போராட்டமும்
கடந்த ஆட்சிக்காலத்தில் இந்திய விவசாயத்தையும் – விவசாயிகளையும் ஒருசேர அழித்தொழிக்கும் வகையில் மூன்று வேளாண் சட்டங்கள் கொரோனா எனும் கொடியநோய் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருந்த காலத்தில் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கே அனுமதிக்காமல் நிறைவேற்றப்பட்டது. ஒருவருக்கொருவர் கைகொடுத்துக் கொள்வது கூட நோய் தொற்றுக்கு வழிவகுக்கும் என்று ஆட்சியாளர்கள் செய்த பிரச்சாரத்தால் அனைவரும் உயிர் பயத்தில் இருந்தனர். ஆனால், விவசாயிகள் உயிரைத் துச்சமென மதித்து களம் கண்டனர். இலட்சக்கணக்கில் திரண்டனர். கொரோனாவைவிடக் கொடியவராக மோடியும், அவர் கொண்டு வந்த சட்டமும் இருக்கிறது; எனவே, கொரோனாவில் சாவதை விட இந்தச் சட்டத்தை எதிர்த்த போராட்டத்தில் நாங்கள் சாகத் தயார் என்று போராட்ட வேள்வியில் குதித்தனர்.
மார்க்சிஸ்ட் கட்சியின் பங்களிப்பு
விவசாயிகளின் இந்தப் பேரெழுச்சிக்கு ஆதரவு கரம் நீட்டி களத்திலும் நின்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. டெல்லியில் நடைபெற்றுக் கொண்டிருந்த விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகத் தனது கட்சி உறுப்பினர்களை நாடு முழுவதும் களத்திலே இறக்கி முன்னணிப் படையாகச் செயல்பட்டது செங்கொடி இயக்கம் என்பதை எல்லோரும் ஏற்பர்.
விவசாயிகள் நலனுக்கான போராட்டங்கள்
தமிழ்நாட்டிலும் இந்தப் போராட்டத்தை வீரியமுடன் எடுத்துச் செல்வதில் தீவிரமாகச் செயல்பட்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இதன் தொடர்ச்சியாக சட்டங்களைத் திரும்பப் பெறுவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொண்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென்ற கடந்த மூன்று ஆண்டுகாலமாக ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சார்பில் நடத்தப்பட்டு வரும் அனைத்துப் போராட்டங்களுக்கும் நாடு முழுவதும் தனது முழுமையான ஆதரவை, பங்கேற்பதன் மூலம் வெளிப்படுத்தி வருகிறது.
குறைந்தபட்ச ஆதரவு விலைப் பிரச்சனை
ஒன்றிய அரசு கொடுத்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதை உத்தரவாதம் செய்யும் சட்டம் இயற்றப்படும் என்பது. இந்த மிக முக்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான எந்த முயற்சியும் செய்யாமல் விவசாயிகளை ஏமாற்றிவிட்டது மோடி அரசு. தற்போது ஒன்றிய அரசு அறிவிக்கும் குறைந்தபட்ச விலை கூட விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை. ஏனென்றால், அந்த விலையைக் கொடுத்தே தீர வேண்டுமென்று சட்டம் கிடையாது. விலையை அறிவித்த அரசு கொள்முதல் செய்வதற்கான எந்த ஏற்பாடும் இல்லை. நெல், கோதுமை, கொப்பரை, பருத்தி உள்ளிட்ட ஒரு சில பொருட்களுக்கு மட்டுமே அரசுக் கொள்முதல் என்பது இருக்கிறது.
மாநில அரசின் நிலைப்பாடு
தமிழ்நாட்டில் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக, நெல்லுக்குக் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500ம், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4000மும், கேரளாவைப் போல் காய்கறி, பழங்கள் அரசே கொள்முதல் செய்யும் என்றெல்லாம் வழங்கப்பட்ட வாக்குறுதி இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. நான்காம் ஆண்டு ஆட்சி நடைபெற்றுக் கொண்டுள்ளது. எப்போது நிறைவேற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
வேளாண் விளைபொருட்கள் விற்பனைக் கொள்கை
விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க வேண்டுமென்றால் மேற்கண்ட கோரிக்கையை ஏற்றுச் செயல்படுத்த வேண்டும். மாறாக, விலை தீர்மானிப்பதில், கொள்முதலில் பெருமுதலாளிகளையும், பெரும் வர்த்தகர்களையும் நம்பி வாழ வேண்டிய அவல நிலையை விவசாயிகளுக்கு ஏற்படுத்தும் வகையில் வேளாண் விளைபொருட்கள் விற்பனைக் கொள்கை ஒன்றை கடந்த நவம்பர் மாதம் வெளியிட்டுள்ளது.
நிலக் கையகப்படுத்தல் பிரச்சனை
அரசுகள் பல்வேறு தேவைகளுக்காக விவசாயிகளிடமிருந்து நிலத்தைக் கையகப்படுத்தும் போது விவசாயிகளின் ஒப்புதல் இன்றி நிலத்தைக் கையகப்படுத்தக் கூடாது. அப்படியே கையகப்படுத்தினாலும் 2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டப்படி நியாயமான இழப்பீடு மற்றும் மறுவாழ்வை உத்திரவாதப்படுத்த வேண்டுமென்று கட்சி வலியுறுத்துகிறது.
நில உரிமைப் போராட்டம்
தமிழ்நாடு அரசு 1997 ஆம் ஆண்டு சட்டத்தினைப் பயன்படுத்தி நிலத்தை விவசாயிகள் ஒப்புதலின்றி கையகப்படுத்தும் செயலில் ஈடுபடுகிறது. இது விவசாயிகளின் நில உரிமையை மறுதலிக்கும் செயலாகும். அது மட்டுமல்லாமல் விவசாயிகள் மற்றும் பொது நிலங்களை, அரசுக்குச் சொந்தமான நிலங்களைத் தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் வகையில் ‘நில ஒருங்கிணைப்புச் சட்டம் 2023’ நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனைத் திரும்பப் பெற வலியுறுத்தி மாநிலக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமில்லாமல் மாநிலம் முழுவதும் போராட்டத்தை நடத்தியது செங்கொடி இயக்கம்.
வர்க்க ஒற்றுமையின் அவசியம்
மக்கள் ஜனநாயகப் புரட்சியின் அச்சாணி விவசாயிகள் – தொழிலாளர்களின் உருக்கு போன்ற ஒற்றுமைதான் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் குறிப்பிடுகிறது. வர்க்க அடிப்படையிலான அத்தகைய கூட்டணியை உருவாக்குவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரும்பாடுபட்டு வருகிறது. இந்த அணியின் மூலம்தான் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும். உழைப்பாளி மக்களுக்கு உன்னதமான, சமத்துவமான ஒரு வாழ்க்கையை உருவாக்கித்தர முடியும் என்று மார்க்சிஸ்ட் கட்சி போராடி வருகிறது.
இயற்கைப் பேரிடர்களும் விவசாயிகளின் நிலையும்
பருவநிலை மாற்றத்தின் காரணமாகப் பல விதமான இயற்கைப் பேரிடர்களை நாடு எதிர்கொள்ளும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை மற்றும் பெஞ்சால் புயல் காரணமாகப் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் அழிந்துபோயின. இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல நூற்றுக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தன.
மார்க்சிஸ்ட் கட்சியின் மீட்புப் பணிகள்
மக்கள் இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்படும் போதெல்லாம் ஓடோடிச் சென்று உதவும் உற்ற நண்பனாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களப்பணியில் தன்னைக் கரைத்துக் கொண்டுள்ளதை மக்கள் அறிவார்கள். அதுமட்டுமல்லாமல், அரசு அறிவித்துள்ள இழப்பீடு போதுமானது அல்ல, அதை உயர்த்தி வழங்க வேண்டும் என்று மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தி அரசை வலியுறுத்தி வருகிறது.
கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம்
தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் கிராமப்புற விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் அரசின் மூலம் வேலைவாய்ப்பு வழங்கும் ஒரே திட்டம் இது. இது வாழ்வாதாரம் மட்டுமல்ல, பொருளாதார முன்னேற்றம், கிராமப்புறக் கட்டமைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட நீண்டகாலப் பலன்களை உருவாக்கும் திட்டமாகும்.
திட்டத்தின் சிதைவும் போராட்டமும்
ஆட்சியாளர்கள் இதை நலத்திட்டமாகவும் தேவையில்லாத சுமை என்றும் கருதி இதை நிர்மூலமாக்குவதற்கான தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். விதவிதமான நிபந்தனைகளை விதித்துப் பயனாளிகளைத் திட்டத்திலிருந்து வெளியேற்றுவது, நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து, வேலை நாட்களைக் குறைப்பது என அத்திட்டத்தின் நோக்கத்தைச் சிதைத்து வருகிறது.
தமிழகத்தில் கட்சியின் செயல்பாடுகள்
தமிழ்நாட்டில் இத்திட்டத்தைச் செம்மையாகச் செயல்படுத்தவும், இதில் நடைபெறும் ஊழல், முறைகேடுகளுக்கு எதிராகவும், நகர்ப்புற வேலை உறுதித் திட்டத்தைப் பரவலாகச் செயல்படுத்த வேண்டுமென்றும் வீரியமிக்கப் போராட்டத்தை விடாமல் நடத்திக் கொண்டிருப்பது மார்க்சிஸ்ட் கட்சி.
விவசாயிகளே, களமிறங்குவீர்!
இப்படிப்பட்ட கட்சியைத் தங்களின் தோளில் சுமந்து வளர்த்திருக்க வேண்டியது விவசாயிகளின் கடமையாகும். இந்தக் கட்சி நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும், உள்ளாட்சி மன்றங்களிலும் அதிக எண்ணிக்கையில் இடம்பெறுவது உழைக்கும் மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும், எதிரான செயல்களைத் தடுத்து நிறுத்தவும், உறுதிமிக்க முறையில் சம்பந்தப்பட்ட மன்றங்களில் செயல்பட உதவும். தமிழ்நாட்டில் பலமான மார்க்சிஸ்ட் கட்சியை வளர்த்தெடுக்கத் துணை நிற்பதே விவசாயிகளின் நலன்களுக்கு நல்லது.