(கட்சியின் 24 வது மாநில மாநாடு, விழுப்புரத்தில் தோழர் எம்.ஏ.பேபி ஆற்றிய தொடக்கவுரை )
கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளை ஆராயவும், தொடர்ந்து மக்கள் நலனை செங்கொடி இயக்கம் முன்னெடுக்கவும், போராடவுமான திட்டத்தை வகுத்திடவும் சி.பி.ஐ(எம்) தனது மாநில மாநாட்டை நடத்துகிறது.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தொழிலாளி வர்க்கமும், பெண்கள், விவசாய தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர், அறிவுஜீவிகள், கலைஞர்கள், வாலிபர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் செழுமையான பங்களிப்பை செய்துள்ளார்கள். இந்த மாநிலத்தின் தனித்துவத்தை சுட்டிக்காட்டுவது பொருத்தமானது என கருதுகிறேன். வரலாற்றுப் பதிவுகளிலும் அதை பார்க்க முடியும்.
*
இந்தியாவிலேயே முதல் முறையாக மே தினம் 1923 ஆம் ஆண்டில் மதராசில்தான் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ம.சிங்காரவேலர் நடத்தினார். இது உண்மையா என்று உறுதிப்படுத்த முடியவில்லை. இறுதிக் கணத்தில் அவரால் சிவப்புக் கொடியை ஏற்பாடு செய்ய முடியாத நிலையில், அவருடைய இணையர் தன் சிவப்பு சேலையில் ஒரு பகுதியை கிழித்துக் கொடுத்ததாக சொன்னார்கள். இது இந்த மாநிலத்தின் வரலாற்றில் பெண்களுடைய சிறப்பான பங்களிப்பை எடுத்துக் காட்டுவதாக பார்க்கிறேன்.
சமத்துவ சிந்தனைக்கும் தமிழ்நாட்டின் பங்களிப்பை குறிப்பிட்டு சொல்ல முடியும். கார்ல் மார்க்சும், பிரடெரிக் எங்கெல்சும் லீக் ஆப் ஜஸ்ட் அமைப்பில் இணைந்தது நமக்கு தெரியும். அந்த அமைப்புதான் பின்னர் கம்யூனிஸ்ட் லீக் ஆக மாற்றப்பட்டது. இதே காலகட்டத்திலோ, அல்லது பத்து ஆண்டுகளுக்கு முன்போ தமிழ்நாட்டின் நாகர்கோயிலுக்கு அருகில் பணியாற்றிய வைகுண்ட சுவாமிகள், முற்போக்கான முழக்கங்களை முன்னெடுத்தார்.
உண்மையில் அதுவொரு புரட்சிகர தலம் ஆகும். நான் அப்படித்தான் உணர்கிறேன். அங்குதான் வைகுண்ட சுவாமிகள் சமத்துவ சங்கத்தை தொடங்கினார். இந்த நிகழ்வு கார்ல் மார்க்சுக்கும் சற்று முன்பாக நடந்திருக்கக் கூடும். ஏனென்றால், கார்ல் மார்க்ஸ் 1818 ஆம் ஆண்டில் பிறந்தார். வைகுண்ட சுவாமிகள் கார்ல் மார்க்சை விட 9 வயது மூத்தவர். உலகம் முழுவதும் சமத்துவ சிந்தனைகள் தீவிரமாக வளர்ந்தன. அந்த சூழ்நிலையில்தான் மார்க்சும், எங்கெல்சும் சமத்துவ சிந்தனைகளுக்கு விஞ்ஞான அடிப்படையை வழங்கி, தீவிரமாக முன்னேறுவதற்கான வழிமுறையை வழங்கினார்கள். எனவே வைகுண்ட சுவாமிகளின் பங்களிப்பை இங்கே நான் நினைவுகூர விரும்புகிறேன்.
உழைக்கும் மக்கள் விடுதலைக்கான போராட்டத்தில், ஒடுக்குமுறைக்கு எதிரான சமூக மாற்றப் போராட்டத்தில் நாம் அடைந்துள்ள முன்னேற்றத்தை கட்சி மாநாடுகளில் ஆராய்கிறோம், பகுப்பாய்வு செய்கிறோம். நம்முடைய கட்சி ஜனநாயகமான கட்சியாகும். ஆனால் ஊடகங்கள் வேறு சில கட்சிகளைத்தான் ஜனநாயக கட்சியாக முன்வைக்கிறார்கள். அந்த கட்சிகள் உண்மையில் ஜனநாயக அடிப்படையில் இயங்குகின்றனவா இல்லையா என்பதை பற்றி நான் இப்போது கருத்து எதுவும் கூறவில்லை. ஆனால், பணிவோடு சொல்லிக் கொள்கிறேன், நம்முடைய கட்சி தனது அமைப்புச் சட்டத்தின்படி ஜனநாயகமாக சரியாகச் செயல்படுகிறது. நம் கட்சியின் கிளை மட்டத்தில் இருந்து, அகில இந்திய மாநாடுகள் வரை அனைத்திலும் நாம் கூடுகிறோம். அதுவரை பின்பற்றிய அரசியல் உத்தியையும், நடைமுறை உத்தியையும் பரிசீலனை செய்கிறோம். எதிர்காலத்தில் பின்பற்ற வேண்டிய அரசியல் உத்திகளை விவாதிக்கிறோம்.
இந்த மாநாடுகளில்தான் நாம் நம்முடைய கட்சியின் தலைவர்களையும், தலைமைக் குழுக்களையும் ஜனநாயக வழிமுறையில் தேர்வு செய்கிறோம். அவ்வாறே நம்முடைய கட்சியின் அரசியல் அணுகுமுறையை வடிவமைப்பதில் ஒவ்வொரு கட்சி உறுப்பினரையும் ஈடுபடுத்துகிறோம். கட்சியின் தலைமையை, கட்சி உறுப்பினர்களே அதன் பல்வேறு நிலைகளிலும் பங்களிக்கிறார்கள்.
*
நம் நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையை மதிப்பீடு செய்யும்போது ஒரு கலைவையான உணர்வு ஏற்படுகிறது. இதில் சில நிலைமைகள் உற்சாகம் தருகின்றன. சில எதிர்மறை அம்சங்களும் உள்ளன.
நம்முடைய கட்சியின் 23 வது அகில இந்திய மாநாட்டில் ஒரு அரசியல் உத்தியை முடிவு செய்தோம். அதன்படி நம்முடைய நாட்டில் மக்கள் ஒற்றுமையை வலுப்படுத்துவதன் மூலமும், அரசியல் சக்திகளை ஒன்றுதிரட்டுவதன் மூலமும், ஆர்.எஸ்.எஸ் தலைமையில் இயங்கும் பாஜகவையும் அதன் கூட்டாளிகளையும் வீழ்த்திட வேண்டும் என முடிவு செய்தோம். அதுதான் சென்ற மாநாட்டில் வகுக்கப்பட்ட நடைமுறை உத்தி.
இந்திய சூழலில் நாம் வகுத்த இந்த உத்தி எத்தனை பொருத்தமானது என்று நாம் விளக்க வேண்டியதில்லை.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, பாசிசக் கூறுகளைக் கொண்டதொரு அமைப்பாகும். அந்த அமைப்பின் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்காள் அல்ல. நான் அந்த விபரத்தை மேலும் கூடுதலாக விவரிக்கவில்லை. ஆனால் அந்த அமைப்பின் செயல்திட்டத்தை அந்த அமைப்பின் முக்கியமான கோட்பாட்டாளர் கோல்வால்கர் அதனை தெளிவாக கூறியுள்ளார். அதன்படி, அதிகாரத்தை மையப்படுத்தி, பெரும்பான்மை உணர்வைத் தூண்டுவதன் மூலம் மக்களை பிளவுபடுத்தி, இந்து ராஷ்ட்டிராவை உருவாக்குவதுதான் அவர்களுடைய திட்டம். தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் இந்த திட்டம் ஏற்கனவே அம்பலப்பட்டுள்ளது. எனவே நான் அதனை மேலும் விளக்கவில்லை.
அவர்கள் உள்நாட்டில் மூன்று எதிரிகளை வரையறுத்துள்ளார்கள். அதில் முதல் இரண்டு எதிரிகள் நம் நாட்டின் சிறுபான்மை மக்களான முஸ்லீம்களும், கிருஸ்துவர்களும் ஆகிய மதவழி சிறுபான்மையினர் ஆவர். மூன்றாவதாக அவர்கள் கம்யூனிஸ்டுகளை கூறுகிறார்கள். அதுமட்டுமல்ல அவர்கள் மதச்சார்பற்ற சக்திகளையும் தங்களுடைய எதிரிகளாக காண்கிறார்கள். இன்னும் நுட்பமாகப் பார்த்தால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திட்டத்தின்படி இந்து நம்பிக்கையாளர்களும் கூட அவர்களின் எதிரிகளே ஆவர். அவர்களுடைய மதபீட சிந்தனை வெறியால் தாக்கமடைந்த நபர்கள்தான் மகாத்மா காந்தியை கொலை செய்தார்கள். கல்பர்கி, கவுரி லங்கேஷ், நரேந்திர தபோல்கர் என பலரும் கொல்லப்பட்டார்கள்.
இந்த அனுபவங்களின்படி பார்க்கும்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஒரு பாசிச வகைப்பட்ட அமைப்பே ஆகும். மோடி அரசாங்கத்தை ஆர்.எஸ்.எஸ் அமைப்புதான் கட்டுப்படுத்துகிறது. மகாத்மா காந்தியின் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒரு நபரான சாவர்க்கரை, நரேந்திர மோடியுடன் தொடர்புபடுத்திப் பார்ப்பது எளிது. ஏனென்றால் நாட்டின் பிரதமரான மோடி, சாவர்க்கரை தனது அரசியல் ஆசான் என்று அறிவிக்க வெட்கப்படவில்லை. இன்றைய நிலைமை இதுதான்.
எனவே, நம் நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிராக நிறுத்த வேண்டும். இந்த போராட்டத்தில் இடதுசாரிகளையும், முற்போக்காளர்களையும் மட்டுமல்ல. சாத்தியமுள்ள எல்லா சக்திகளையும் திரட்ட வேண்டும். இது நம் போராட்டத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனென்றால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் இந்திய அரசின் அனைத்து பொறிகளையும் கட்டுப்படுத்துகிரார்கள். நீதித்துறை முதல் தேர்தல் ஆணையம் வரை எல்லா அமைப்புகளையும் கட்டுப்படுத்துகிறார்கள்.
எனவேதான் 23 வது அகில இந்திய மாநாட்டில் நடைமுறை உத்தியை அதற்கேற்ப முடிவு செய்தோம். கடந்த நாடாளுமன்றத்தை நாம் பரிசீலித்தால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 2 க்கும் குறைவாகவே இருந்ததை பார்க்கிறோம். எனவே நாம் அவர்கள் தோற்கடிக்க முடிந்த சக்திகளே என்பதை இந்த தேர்தலில் நாம் நிரூபித்துவிட்டோம். அவர்கள் நினைத்த இலக்கை குறிப்பாக அவர்களால் எட்டிப்பிடிக்க முடியவில்லை. 2014, 2019 தேர்தல்களில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் இருந்தது. எனவே, கடந்த தேர்தலில் அவர்கள் நானூறு எண்ணிக்கையில் வெற்றிபெற வேண்டும் என்று இலக்கு வைத்திருந்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை.
2024 இல் நடைபெற்ற தேர்தலில். பாஜக 63 இடங்களில் தோல்வியடைந்தது, அதில் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் அடங்கும். ராமர் கோவிலை கட்டி முடிக்காமலே, கோயில் திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்த பிரதமர் மோடி, மக்களை மேலும் பிளவுபடுத்த முடியும் என்ற விருப்பத்திலும் மக்கள் ஸ்ரீ ராமர் மீது கொண்டுள்ள மரியாதையை வாக்குகளாக மாற்ற முடியும் என்று கருதியும் இதை அவசரப்படுத்தினார். அரசியல் நெறிமுறைகளை பொருட்படுத்தாமல், பிரதமரே சென்று ஒரு வழிபாட்டு தலத்தை திறந்து வைத்தார். ஆனால், இது பாஜகவிற்கு உதவியதாக இல்லை. ராமர் கோயில் திறந்து வைக்கப்பட்ட இடத்தில் நரேந்திர மோடி தோல்வியை சந்தித்தார் என்பதை நாங்கள் அறிகிறோம். சமாஜ் வாடி கட்சியால் நிறுத்தப்பட்ட வேட்பாளர் அந்த தொகுதியை வென்றார்.
எனவே நாம் கூட்டாக விவாதுத்து முன்னெடுத்த அரசியல் உத்தி முன்னேற்றத்தை கொடுத்துள்ளது. வெற்றிக்கு நெருக்கமாக நம்மை அழைத்துச் சென்றது. ஆனாலும் நாம் இப்போது நாம் அந்த உத்தியை பரிசீலனை செய்யும் இடத்தில் இருக்கிறோம். நம்மால் ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றுதிரட்ட முடிந்தது எப்படியென்றும், ஒரு பரந்த மேடையை அமைத்து நமது இலக்கை நோக்கி எவ்வாறு முன்னேறினோம், பாசிச சக்திகளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து, அதிகாரத்தில் இருந்து நாம் அவர்களை அகற்ற முயற்சித்தோம் என்பவைகளை விவாதிக்கவுள்ளோம்..
தோழர்களே, இந்த மாநாடு மேற்கொள்ள வேண்டிய முக்கிய கடமைகள் குறித்து விவரிக்க அதிக நேரம் இல்லாததால் சில முக்கியமான கருத்துகளை மட்டுமே நான் கூறுகிறேன். தேர்தல் முடிவுகளின் மூலம் இந்திய மக்கள் வெளிப்படுத்திய எச்சரிக்கை, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு தெளிவாகவே எதிராக அமைந்திருக்கிறது. ஆனாலும் அவர்கள் வெட்கமேயில்லாமல் மக்களை பிளவுபடுத்தியும், சூழ்ச்சியான வழிகளிலும் தங்கள் ஆதரவை விரிவாக்க முயற்சித்தார்கள். நம்முடைய பிரதமருடைய நூற்றுக்கணக்கான தேர்தல் உரைகளில், பிளவுவாதக் கருத்துக்களை முன்வைக்க வெட்கப்படவில்லை. அந்த மோசமான பேச்சுக்களை நான் இங்கே திரும்பச் சொல்லவில்லை. அர்ப்பணிப்புள்ள சில ஊடகவியலாளர்கள் அந்தப் பேச்சுக்களை அடையாளம் காட்டினார்கள். ஆனால் சில ஊடகங்களோ அந்த நிகழ்ச்சிநிரலில் தம்மை கரைத்துக் கொண்டன. அதுதவிர பாஜக சாதி உணர்வுகளை பயன்படுத்தி, சோசியல் என்ஜினியரிங் செய்தது. அதை மாநிலத்திற்கு மாநிலம் வெவ்வேறு வழிமுறைகளில் செய்தது.
பணத்தை பயன்படுத்தி தலைவர்களை குறிவைத்து, சில தலைவர்களை விலைக்கு வாங்குவதன் மூலம் கட்சிகள் உடைக்கப்பட்டன. அவர்களிடம் சென்ற சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற அமைப்புகள் “சிறைக்கு செல்கிறீர்களா அல்லது பாஜவில் சேர்கிறார்களா?” என்று கேட்பார்கள். பாஜகவில் ஒருவர் சேர்ந்துவிட்டால் அவர் சுதந்திரமாக இருக்கலாம் என்பதுடன் பெரும் தொகையும் கிடைக்கும் என்பதுதான் நிலைமை. ஆக பணமா, சிறையா என்ற கொள்கையை பயன்படுத்தி முக்கியமான அரசியல் கட்சிகள் எப்படி உடைக்கப்பட்டன, மராட்டிய மாநிலத்தை எப்படி கைப்பற்றினார்கள் எனபது உங்களுக்கே தெரியும்.
அரசு இயந்திரமும் வெட்கமேயில்லாத வகையில் குறுகிய பார்வையோடு பயன்படுத்தப்பட்டது. முன்பு பெரிதும் மதிக்கப்பட்ட அமலாக்கத்துறை இப்போது தேர்தல் பணி பார்க்கத் தொடங்கியது. இடி என்று சொன்னால் அதன் பொருள் தேர்தல் பணி அதாவது எலக்சன் டியூட்டி என பாஜகவால் மாற்றப்பட்டது.
இவ்வாறு தான் அவர்கள் தன்னாட்சி பெற்ற அமைப்புகளை சீர்குலைத்து வருகின்றனர். நீதித்துறையும் கூட பாதிப்புக்கு உள்ளாகிறது. சமீபத்தில், அலஹாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் மிக மோசமாக பேசியதை கேள்விப்பட்டோம். இதனை சுட்டிக்காட்டிய தோழர் பிருந்தா காரத் உச்ச நீதிமன்றத்திற்கு எழுதினார். அதன் பிறகு, இந்திய உச்ச நீதிமன்றம் தாங்கள் சும்மா வேடிக்கை பார்க்கவில்லை என்று நம்ப வைக்க சில முயற்சிகளை செய்தாலும் அதில் பெரிதாக முன்னேற்றம் இல்லை.
உத்திரபிரதேசத்தில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றிபெருவதற்காக அவர்கள் என்னவெல்லாம் செய்தார்கள் தெரியுமா.. பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று நினைக்கப்பட்டவர்களை வாக்கு பதிவு மையங்களுக்கு செல்ல முடியாமல் தடுத்தார்கள். இப்படியான போக்குகள், தேர்தலையும், ஜனநாயகத்தையும் அழித்துக்கட்டும் வெளிப்படையான போக்குகளாகும். எனவே நாம் இதைப்பற்றி விழிப்போடு இருக்க வேண்டும்.
தோழர்களே, நண்பர்களே. ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் வழிநடத்தப்படும் பாஜவுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு செழுத்திய தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள். மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும், அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு விரிவான ஆதரவை கொடுத்து மக்கள் வெற்றிகரமாக்கினார்கள்.
இடதுசாரிக் கட்சிகளுடைய முக்கியமான பங்களிப்போடு மற்ற ஜனநாயக சக்திகளும் கைகோர்த்த இந்த அரசியல் ஏற்பாடு தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்/பாஜகவின் செல்வாக்கு பெறாமல் தடுப்பதற்கு வெற்றிகரமாக பயன்பட்டது. இந்த வெற்றிக்காக கூட்டணியையும், மக்களையும் வாழ்த்தும் அதே சமயத்தில், சமுதாய தளாத்தில் நிலவும் வேறு பல போக்குகளையும் நாம் எச்சரிக்கையோடு கவனிக்க வேண்டுமென கூறுகிறேன். கேரளாவிலும் கூட அவர்கள் முன்னேறுகிறார்கள். எனவே, இதைப் பற்றியெல்லாம் நாம் மிகுந்த அக்கறையோடும், எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும். பாஜகவையும் அதன் கூட்டாளிகளையும் எதிர்த்து, தோற்கடித்த தமிழக அரசு, பல்வேறு மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி காட்டும் என்று நம்புகிறோம். அந்த அளவுக்கு, நம்பிக்கையுடனும் அரசியல் திட்டத்தின் ஒரு பகுதியாக நிற்கிறோம். எனினும், ஒரு புரட்சிகர போராட்ட இயக்கம் என்ற விதத்தில் நாம் தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளையும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையையும் காப்பதில் உறுதிகாட்டுவோம் என்பது தெரிந்த விசயம்தான். இவைகளையும் இந்த மாநாடு விவாதிக்கும் என்று நம்புகிறேன்.
*
அதேபோல, நான் சார்ந்த கேரள மாநிலத்தை பற்றி நீங்கள் நன்றாக அறிவீர்கள். கேரள மாநிலத்தை நம் கட்சியின் தலைமையிலான அணி ஆள்கிறது. அந்த அரசு இடதுசாரிகளையும், இடதுசாரி அல்லாத கட்சிகளையும் உள்ளடக்கியதாகும். இந்தியாவில் இடதுசாரிகளும், கம்யூனிஸ்டுகளும் தலைமைதாங்குகிற ஒரே அரசாகவும் இது அமைந்திருக்கிறது.
நாம் மிகவும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளோம். RSS மற்றும் பாஜக அரசு மீது தாக்குதல் நடத்துவதோடு மட்டுமல்லாமல், பிற சக்திகளும் நம் நாட்டிலுள்ள ஒரே இடதுசாரி முன்னணி அரசை தாக்கும் RSS-பாஜக திட்டத்திற்கு உதவியாக இருக்கிறார்கள்.
இதுதான் 1957 ஆம் ஆண்டு அமைந்த இ.எம்.எஸ் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. அந்த நேரத்தில் அமெரிக்காவின் சி.ஐஏ அமைப்பும், அமெரிக்க டாலரும் கூட கேரளாவில் பிற்போக்கு சக்திகள் முன்னெடுத்த இழிபுகழ் பெற்ற விடுதலை போராட்டத்தில் பங்களித்தன. பிற்போக்கு சக்திகள் கேரள மாநிலத்தில் ஒரு கடுமையான சூழ்நிலையை உருவாக்கியுள்ளார்கள். நாம் இந்த நிலைமையை எதிர்கொண்டுதான் இடது ஜனநாயக அரசாங்கத்தை முன்னெடுக்கிறோம். அந்த போராட்டத்தில் நாம் ஒரு அரிய சாதனையை படைக்கவும் முயற்சி செய்கிறோம். அது என்ன?
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் நாம் தீவிர வறுமையை எதிர்கொள்கிறோம். ஆனால், கேரளாவில் இடது ஜனநாயக அணியின் அரசு, தீவிர வறுமையை முற்றாக அகற்றுவதற்காக செயல்திறனுடன் செயல்பட்டு வருகிறது. மேலும், ஒரு ஆண்டுக்குள் இந்த இலக்கை எட்டுவது சாத்தியமே. அப்பொழுது, கேரள மாநிலத்தை தீவிர வறுமை இல்லாத ஒரே மாநிலமாக இடது ஜனநாயக அரசு மாற்றிக் காட்டிடும்.
இந்த எதார்த்த நிலையையும் கேரளத்தில் இடது ஜனநாயக அரசின் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த பணிகளையு, பாத்திரங்களை கருத்தில் கொண்டு, ஜனநாயகத்தை விரும்பும் மக்கள் கேரள இடது ஜனநாயக அரசுக்கு தங்கள் ஆதரவு மற்றும் ஒருமைப்பாட்டை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
*
நண்பர்களே தோழர்களே, நான் பாலஸ்தீனத்தில் உள்ள காசாவின் நிலவரத்தை இப்போது குறிப்பிட விரும்புகிறேன். அதை பேசும்போது வேதனையாக உள்ளது.
அங்கே குழந்தைகள், பெண்கள், முதியவர்களின் நிலைமை மிக மோசமாக உள்ளது. அவர்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகிறார்கள். ஹிட்லர் ஆஸ்விட்ஸ்சிலும், பிற கொலை முகாம்களிலும் யூதர்களுக்கு என்ன செய்தார் என்பதை நாங்கள் நினைவுகூருகிறோம். இன்று மாலை, மாநில மாநாட்டின் ஓரு பகுதியாக, ஆஸ்விட்ஸின் கொலைக்களங்களுடைய படங்களை காட்சிப்படுத்தும் கண்காட்சி திறக்கப்பட உள்ளது. ஜெர்மன் நாசிகள் செய்த பயங்கரமான அத்துமீறல்களை அதில் காணலாம். நாசி ஜெர்மனியின் கீழ் கொடுமைகளுக்குள்ளான யூதர்கள், அவர்களுக்கான ஒரு அரசு வேண்டுமென ஏங்கினார்கள். ஆனால் தற்போது இஸ்ரேலை ஆளும் பாசிச அரசியல் சக்திகளான ஜியோனிஸ்டுகள் , பாலஸ்தீனியர்களுக்கு எதிராக அசாத்தியமான கொடூரங்களையும், இனப்படுகொலையையும் மேற்கொள்கிறது.
நிச்சயமாக, பாலஸ்தீனியர்களுக்குள் பல விதமான அரசியல் போக்குகள் உள்ளன. ஹமாஸ் குறித்து, சில குறிப்பிட்ட அம்சங்கள் விமர்சிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த நேரத்தில் முக்கியம் பெறுவது அதுவல்ல, நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேல் மேற்கொள்ளும் இன அழிப்புதான் பேசப்பட வேண்டிய ஒன்று.
இந்த நிலைமை உருவாகவில்லை எனில், நெதன்யாகுவிற்கு ஊழல் வழக்கில் தண்டனை கிடைத்திருக்கும். இந்தியாவின் மோடி அரசாங்கம் இஸ்ரேலை ஆதரிக்கிறது. அமெரிக்க நிர்வாகமும் அதே செய்யும் நிலையில், உலகம் மிக மோசமான இனப்படுகொலையை பார்க்கிறது.
அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஐநா சபை உலகின் மீது தன்னுடைய கட்டுப்பாட்டை செலுத்துகிறது. அவர்கள் உலகத்தை எதிர்வினையாற்றாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்று சிலருக்கு தோன்றுகிறது. ஐக்கிய நாடுகள் சபை தனது முக்கியத்துவத்தை இழந்திருக்கிறது. அவர்கள் முன்வைக்கும் தீர்வுகளை யாரும் கேட்பதாக இல்லை. இந்த சூழ்நிலையில் இந்தியாவில் மோடி ஆட்சியின் நிர்வாகம் முன்னெடுக்கும் நிலைப்பாடு முக்கியமாகிறது. இனப்படுகொலை தாக்குதலை மோடி அரசு ஆதரிக்கும் நிலை எடுப்பது மிகத் தெளிவான கண்டனத்திற்குரிய ஒன்றாகும்.
சோவியத் ஒன்றியத்துக்கும் கிழக்கு ஐரோப்பிக்கும் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பின், ஏகாதிபத்தியமும் பிற்போக்கு சக்திகளும் உலக அரசியலில் தற்காலிக ஆதிக்கம் செலுத்துகின்றன. அதனால்தான் இந்த போக்கு தொடர்கிறது. உலகின் பல பகுதிகளில் வலதுசாரி இயக்கங்களின் எழுச்சியையும் நாம் கவனிக்கிறோம், நான் நேரம் இல்லாத காரணத்தால் அதைப் பற்றி விமர்சிப்பதை தவிர்க்கிறேன்.
உலகின் பல பகுதிகளில் இத்தகைய நெருக்கடி சூழல்கள் ஏற்படும்போதும், டிரம்பின் எதிர்பாராத வெற்றி மற்றும் அமெரிக்க அரசியலில் அதன் தாக்கம் உள்ளிட்டவை இடம்பெற்ற போதிலும், உலகில் சில நேர்மறை முன்னேற்றங்களும் உள்ளன. எடுத்துக்காட்டாக, லத்தின் அமெரிக்காவில் சில நம்பிக்கை காணப்படுகின்றன. டிரம்பைப் போல ஆட்சி செய்யும் அதிகாரவாதி வெற்றிபெற்ற அர்ஜென்டினாவைத் தவிர, பெரும்பாலான லத்தின் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி சக்திகள் ஆதரவு நிலைகளில் உள்ளனர்.
இலங்கையில் நடைபெற்ற தேர்தலில், ஏ.கே.டி என்ற அறியப்படும் அனுர குமார திஸ்சநாயகே வெற்றி பெற்றார். இது மிகவும் சவாலான நிலைமை என்பதால், அடுத்ததாக என்ன நடக்கிறது என்பதை நாம் கவனமாக பார்த்து தெரிந்து கொள்ளுவது முக்கியமாக இருக்கும். அவர்கள் தேசிய மக்களின் சக்தி என்ற ஒரு பரந்த முன்னணியை அமைத்துள்ளனர். பல்வேறு நாடுகளில், பலவிதமான முன்னணிகளை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தேசிய மக்களின் சக்திக்குள், பல்வேறு அமைப்புகள் இயங்கியுள்ளன. எப்படியாயினும், இது இடதுசாரி வெற்றியே ஆகும். இங்கே முக்கியமாக குறிப்பிட வேண்டியது இதுதான். உலகின் பல்வேறு பகுதிகளிலும் இடதுசாரி சக்திகள் வளர்ந்து வருகிறார்கள்.
சீனா, வியட்னாம், கொரியா, கியூபா அல்லது லாவோஸ் ஆகிய நாடுகளைப் பற்றியும் சொல்ல வேண்டும். “புரட்சி” என்ற ஒற்றைச் சொல்லுக்கு எந்த மாற்றும் இல்லை. இரண்டாம் உலகப் போருக்கு பின் வியட்னாம், கொரியா, கியூபா அல்லது லாவோசில் நாம் காண்பது, நம்முடைய அரசியல் செயல்பாட்டுக்கு வந்தால் முக்கியமான மாற்றங்கள் சாத்தியமே என்று காட்டுகிறது. கணக்கிட்டால், இன்று சுமார் 25% மக்கள் சுரண்டலற்ற உள்ள ஒரு சமூகத்தில் வாழ்கிறார்கள். இந்த ஐந்து நாடுகளில்—சீனா, கியூபா, கொரியா, வியட்னாம், மற்றும் லாவோசு—உலக மக்கள் தொகையின் 20% வசிக்கின்றனர்.
அது சிறிய விசயம் அல்ல. என் மாணவர் நாள்களில், உலக மக்கள் தொகையின் மூன்றிலொன்று கம்யூனிச நாடுகளில் வாழ்கின்றனர் என்று நாங்கள் கூறிப்பேசுவோம். அது மாறிவிட்டது, ஆனால் இப்போதும், சோசலிசம் என்ற கருத்து, மக்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு கருத்தாக உள்ளது. அதைக் கடைப்பிடித்து முன்னேறு முயற்சிகள் உள்ளன. எனினும் அந்த பாதை சிக்கலானதே ஆகும்.
“இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் மூலதனம்” எனும் அவருடைய புகழ்பெற்ற படைப்பை 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட பொருளாதார நிபுணர் தோமஸ் பிக்கட்டி, வரவு செலவின் இடைவெளி மற்றும் அசமத்துவத்தை பற்றி பேசினார். அப்போது, பொதுவாக அவர் ஒரு நடுநிலை அணுகுமுறையை காட்டினார். ஆனால், கடந்த ஆண்டு, 2024 ஆம் ஆண்டில், அவர் “Time for Socialism” என்ற பெயரில் ஒரு புத்தகம் வெளியிட்டார். நிச்சயமாக, நாம் அவரை விமர்சிக்கக் கூடிய பகுதிகள் இருக்கும், ஆனால் தோமஸ் பிக்கட்டி, தன்னளவில் அடைந்திருக்கும் மாற்றமும் குறிப்பிடத்தக்கது. எனவே, தோழர்களே, நம்பிக்கையுடன், நாம் நம் பணிகளை முன்னெடுக்கத் தயாராக இருக்க வேண்டும்: இடது ஜனநாயக அணியை எப்படி வலுப்படுத்துவது, இடதுசாரி சக்திகளை எப்படி உறுதிப்படுத்துவது என்று சிந்திக்க வேண்டும்.
இடதுசாரிகளையும் ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைக்கும் உண்மை மாற்றை எவ்வாறு உருவாக்க முடியும் என்று பார்க்க வேண்டும். அதே நேரத்தில் பர்ந்துபட்ட மாபெரும் மேடையை உருவாக்கி பாசிச சக்திகளுக்கு எதிராக போராடி அவர்களை தனிமைப்படுத்தவும், அம்பலப்படுத்த வேண்டும். இதையெல்லாம் விவாதிக்கும் இந்த மாநாடு, தமிழ்நாட்டில் இந்த பணிகளை எப்படிச் செயலாம் என்று தெளிவாக முன்வைக்க முடியும் என்று நான் விரும்புகிறேன் மற்றும் நம்புகிறேன்.
மேலும், இந்த முடிவுகள் பிற இடங்களிலும் பயன்படும் என்று எனக்கு நம்பிக்கையுள்ளது. இந்த சில கருத்துகளுடன், எனது உரையை தொடர்ந்து பொறுமையாக நீங்கள் கவனித்தமைக்கு நன்றி கூறுகிறேன். தமிழ்நாட்டில் CPI(M) மாநில மாநாட்டை அதிகாரப்பூர்வமாக துவங்கியதாக அறிவிக்கிறேன். நன்றி.