செய்தி அறிக்கை

தமிழறிஞர் அவ்வை நடராசன் மறைவு; சிபிஐ(எம்) இரங்கல்!

தமிழறிஞர் அவ்வை நடராசன் மறைவு

தமிழறிஞர் அவ்வை நடராசன் மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது மறைவு தமிழ் இலக்கிய ஆய்வுலகிற்கு பேரிழப்பாகும்.

தமிழ்த் தொண்டையே தன் பெரு வாழ்வின் பெரு நெறியாகக் கொண்ட அறிஞர் அவர். கல்லூரி விரிவுரையாளர் பணி தொடங்கி, பல்கலைக்கழக துணைவேந்தர் வரை, அகில இந்திய வானொலியின் செய்தி வாசிப்பாளர் பணி தொடங்கி தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத்துறைச் செயலாளர் பதவி வரை பல்வேறு பொறுப்புகளை ஏற்று திறம்பட செயல்பட்டவர். செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர்.

தமிழறிஞர் அவ்வை நடராசன் தொல்காப்பியம், சங்க இலக்கியம், கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம் என தமிழ் இலக்கியங்களை வெகு மக்களிடம் கொண்டு சேர்த்தவர். தமிழ் இலக்கணத்தைக் கூட எளிய மக்களுக்கும் புரியும்படி விளக்கியவர். இலக்கியப் புலமைமிக்க தலைசிறந்த பேச்சாளர். பல்வேறு ஆய்வு நூல்களுக்கு சொந்தக்காரர்.

எல்லோரிடமும் இனிமையாக பழகக் கூடிய பண்பாளர். தமிழ் மொழியை உலக அரங்கில் நிலை நிறுத்த அவர் ஆற்றிய பணி என்றென்றும் நினைவுகூரப்படும். அவரது மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கு கட்சியின் சார்பில் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.