செய்தி அறிக்கை

திருச்சி மாநகரில் சாதியின் பெயரில் உள்ள தெருக்களின் பெயரை மாற்றுக;

திருச்சி மாநகரில் 65 வார்டுகளிலும் பல்வேறு தெருக்களுக்கு மனிதர்களை அவமதிக்கும் விதமாக இந்த 21வது நூற்றாண்டிலும் சாதியின் பெயரால் தெருக்கள் அழைக்கப்படுவதும் விளம்பரபலகை வைப்பதும் அரசு பதிவேட்டில் ஆவணங்கில் மிகவும் மேசமான முறையில் தற்போதும் செயல்பாட்டில் உள்ளது.
உறையூரில் குறத் தெரு என்றும் காந்திபுரம் தாந்தோன்றி பறையர் தெரு என்றும் பாலக்கரையில் தோட்டி காலனி, சக்கிலியத் தெரு என்றும் எடமலைப்பட்டியில் டோபி காலனி என்றும் ஸ்ரீரங்கத்தில் 1வது வார்டில் “நைட்சாயில் டெப்போடு ரோடு ” என்றும் அவணங்களில் இருக்கிறது. இதன் தமிழாக்கம் என்பது “மனித மலக்கிடங்கு சாலை” என்பதாகும் பல ஆண்டுகளுக்கு முன்பு சீரங்கம் பகுதியின் குடியிருப்புகளில் உள்ள கழிப்பறை என்பது “எடுப்பு கக்கூஸ்” என்று அழைக்கப்படும் மனித மலத்தை வீடுகளின் கழிவறைகளில் இருந்து எடுத்து அதை தூய்மை பணியாளர்கள் சுமந்து சென்று மலக்கிடங்கில் கொண்டு சேர்க்கும் மிக கொடூர பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்ததையே இது காட்டுகிறது.

இதுபோன்று திருச்சி மாநகரில் தெருக்களின் பெயரால் சாதி ரீதியான இழிவு செய்யும் போக்கை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியும் பல்வேறு பொது நல அமைப்புகளும் தொடர்ந்து குரல் கொடுத்தும் சில இடங்களில் பெயர் மாற்றம் செய்து தெருவின் பெயர் பலகை மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. பத்திர பதிவு அவணங்களில், வாக்காளர் பட்டியலில், குடும்ப அட்டை, ஆதார் கார்டுகளில் சாதியின் பெயரே குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்றம் கூட திருச்சி மாநகரத் தெருக்களின் சாதி பெயர்களை மாற்ற வேண்டும் என உத்திரட்டுள்ளது. எனவே தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக சாதிய ரீதியாக பட்டியலின மக்களை அவமானப்படுத்தும் தெருக்களின் சாதிப் பெயர்களை அனைத்து அரசு ஆவணங்களிலும் மாற்றிடும் வண்ணம் பெயர் மாற்றம் செய்து அரசிதழில் வெளியிட முன்வரும் படி தமிழக அரசை, மாவட்ட நிர்வாகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டக்குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தோழர் ஆர்.ராஜா, திருச்சி மாநகர் மாவட்டச் செயலளார் #CPIM