ஈரோட்டில் நடந்துவரும் புத்தகக் கண்காட்சியில், பாஜக /ஆர்.எஸ்.எஸ் மதவெறி அரசியலை அம்பலப்படுத்தும் புத்தகங்களை விற்பதை சில சங் பரிவார நபர்களோடு, காவல்துறை ஆய்வாளர் ஒருவரும் புத்தக விற்பனையாளர்களை மிரட்டியுள்ளார். உடனடியாக அந்த காவலர்களை இடம் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.
மதிமுக பொருளாளர் செந்தில் அதிபன் எழுதியுள்ள “இந்துத்துவப் பாசிசம் வேர்களும் விழுதுகளும்” என்ற புத்தகம் பாஜகவின் அரசியல் எப்படி இந்து நம்பிக்கையை தனது லாபத்திற்காக பயன்படுத்துகிறது என அம்பலப்படுத்துகிறது. அதேபோல, பகுத்தறிவு பிரச்சாரத்தை பரப்பும் ஏராளமான நூல்கள் பல ஆண்டுகளாக புத்தகக் கண்காட்சிகளில் விற்கப்படுகின்றன. நாட்டிலேயே அதிகமான நூலகங்களும், வாசிப்பு பழக்கமும் உள்ள தென் மாநிலங்களில் தனது வெறி அரசியல் எடுபடாது என ஆத்திரமடைந்த ஆர்.எஸ்.எஸ் கூட்டம் எழுத்தாளர்கள் மீது பாய்வதை வாடிக்கையாக செய்து வருகிறது. இந்த சக்திகளை தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது.
காவல்துறையில் சிலர் இவ்வாறு ஆர்.எஸ்.எஸ் அரசியலுக்கு பலியாகியிருப்பது சில நிகழ்வுகளில் தெரிகிறது. சில நாட்கள் முன், மத வெறுப்புடன் இணைய வழியாக பேசிய சென்னை புளியந்தோப்பு போக்குவரத்துக் காவல்துறை ஆய்வாளர் ராஜேந்திரன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு காந்தி நினைவுநாளில் கோட்சே கொலை செய்ததை பேசுவதற்கு காவலர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். பின் அவர் நடவடிக்கைக்கு உள்ளானார்.
காவல்துறையும், அரசு நிர்வாகமும் அரசியல் அமைப்பு சட்டத்தையே உயர்த்திப் பிடிக்க வேண்டும், ஆர்.எஸ்.எஸ் வெறி அரசியலை அல்ல என்ற உறுதியுடன் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. தமிழ்நாட்டு மக்கள் உறுதியோடு நின்று ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்தை ஒதுக்கி தள்ள வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
(கே.பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்