சிறப்பு பதிவுகள்மாநிலக் குழு

மலேசியாவில் தமிழக தொழிலாளி பணத்திற்காக படுகொலை! மலேசிய அரசு ரூ. 1 கோடி நிவாரணம் தர வேண்டும்உடலை மீட்டு வர சிபிஐ (எம்) கோரிக்கை!

மலேசியாவில் தமிழக தொழிலாளி பணத்திற்காக படுகொலை!

மலேசியாவில் வேலைக்காக சென்ற தஞ்சாவூரை சேர்ந்த தொழிலாளியின் குடும்பத்தை பணம் கேட்டு மிரட்டியதுடன் அத்தொழிலாளியை கொன்று வீசியுள்ள கொடூர சம்பவத்தை விசாரித்து குற்றவாளிகளை தண்டிப்பதுடன், மலேசிய அரசாங்கம் ரூ. 1 கோடி நிவாரணம் வழங்க வேண்டுமெனவும், தமிழ்நாடு அரசாங்கம் விரைந்து செயல்பட்டு உடலை மீட்டு வர வேண்டுமென்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

            தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் மன்னை நகர் பகுதியைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. மலேசியாவிற்கு வேலை தேடிச் சென்ற அவர் கடந்த 11 மாதங்களாக ஏஜெண்ட் உறுதி கூறிய படி சம்பளமோ, உணவு, தங்குமிட வசதிகளோ, வேலை உரிமமோ அளிக்கப்படாத நிலையில் துன்பங்களை சகித்துக் கொண்டு ‘சேர்டாங் செலங்கூர்' என்ற பகுதியில் இரும்புக்கடையில் பணியாற்றி வந்தார்.  அவரை நிறுவனத்தின் உரிமையாளரும், அவரது மகன்களும் பிடித்து வைத்துக் கொண்டு விநாயகமூர்த்தியின் கைப்பேசியை பயன்படுத்தி அவரது குடும்பத்தாரிடம் ரூ, 10 இலட்சம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், பணம் கொடுக்காவிட்டால் அவர் மீது திருட்டுக் குற்றம் சாட்டி சிறைக்கு அனுப்புவோம் என்று அச்சுறுத்தியதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். அவர்கள் கேட்ட ரூ.10 லட்சத்தை கொடுக்க முடியாத நிலையில், ரூ.7 லட்சத்தை தமிழ்நாட்டில் ஒருவரின் மூலமாக பெற்றுக்கொண்டுள்ளனர். அதன் பின்னர் விநாயக மூர்த்தியை கொலை செய்து மூட்டையில் கட்டி சாலையில் வீசியுள்ளதாக அவருடைய குடும்பத்தினர் மாவட்ட ஆட்சித் தலைவரிடமும், காவல்துறை கண்காணிப்பாளரிடமும் புகார் அளித்துள்ளனர். மலேசியாவில் நடந்த உடற்கூராய்வு குறித்தும் அவர்களுக்கு வலுவான சந்தேகம் உள்ளது.

            எனவே, கொடூரமாக கொல்லப்பட்ட விநாயகமூர்த்தியின் உடலை தமிழ்நாட்டுக்கு எடுத்து வருவதுடன், ஆள் கடத்தல் மற்றும் கொலையில் ஈடுபட்ட கும்பலை கைது செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும், மறு உடற்கூராய்வு நடத்தப்பட வேண்டும், பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தாருக்கு நிவாரணமாக மலேசிய அரசாங்கம் ரூ.1 கோடி வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

            மலேசியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு வேலைக்காக செல்லும் தொழிலாளர்கள் பலரும் இதுபோல பாதுகாப்பற்ற சூழலில் துன்புறுத்தப்படுவதாக செய்திகள் வருகின்றன. ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறையும், தமிழ்நாட்டின் அயலக தமிழர்களுக்கான துறையும் இந்த பிரச்சனையில் சிறப்பு கவனம் செலுத்தி தொழிலாளர்களுக்கான பாதுகாப்பையும், மேம்பட்ட பணிச் சூழலையும் உறுதி செய்திட வேண்டும். குறிப்பாக, வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்பவர்கள் அயலக தமிழர்களுக்கான துறையில் உரிய முறையில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு உரிய முறையில் விளம்பரம் செய்திட வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

(கே.பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்