சிறப்பு பதிவுகள்மாநிலக் குழு

100 நாள் வேலை திட்டத்தினை ஒழித்துக் கட்டும் ஒன்றிய அரசின் உத்தரவு! தமிழ்நாடு அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம்!!

Cpim 1 Copy

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தினை ஒழித்துக் கட்ட முனையும் ஒன்றிய அரசின் உத்தரவை நிராகரிப்பதற்கும், வேலை அட்டை பெற்றுள்ளஅனைத்து பயனாளிகளுக்கும் வேலை வழங்கிடவும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (06.03.2024) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதம் கீழே தரப்பட்டுள்ளது.

            இதனை தங்களின் மேலான பத்திரிகை / தொலைக்காட்சி / ஊடகங்களில் செய்தியாக வெளியிட கேட்டுக் கொள்கிறோம்.

பெறுநர்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,

தமிழ்நாடு அரசு,

தலைமைச் செயலகம்,

சென்னை – 600 009.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்.

பொருள்:- தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் வேலை வழங்கிடவும், மண் சார்ந்த வேலைகளை ரத்து செய்து விட்டு, பொருட்கள் செலவினம் சார்ந்த (material component) பணிகளை மட்டுமே செய்ய வேண்டுமென்ற ஒன்றிய அரசின் சுற்றறிக்கையை நிராகரிப்பதற்கும் – உரிய நடவடிக்கை எடுக்க கோருதல் தொடர்பாக:

            ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் காலத்தின் போது இடதுசாரி கட்சிகளின் வற்புறுத்தலின் பேரிலும், “குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தின்” முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான கிராமப்புறத்தில் வசிக்கும் 18 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் வேலை வழங்கிடும் வகையில் “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம்” நிறைவேற்றப்பட்டு நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினால் கிராமப்புற ஏழை, எளிய மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.

            2014ம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு இத்திட்டத்தை ஒழித்துக் கட்ட வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு நிபந்தனைகளை விதித்தும், சட்டங்களை திருத்தியும், நிதி ஒதுக்கீட்டை படிப்படியாக வெட்டிச் சுறுக்கியும் இத்திட்டத்தை சிதைத்து வருகிறது. இதனால் கிராமப்புற ஏழைகள் இந்த வேலை திட்டத்தில் கிடைத்து வந்த வேலை நாட்கள் தற்போது சரிபாதியாக குறைந்து வருமானம் இழந்து தவித்து வருகின்றனர்.

            இதன் தொடர்ச்சியாக தற்போது அதிக அளவிலான தொழிலாளர்களுக்கு வேலை அளிக்கும் ஏரி, வாய்க்கால், குளம், தூர்வாருதல் போன்ற மண் சார்ந்த வேலைகளை ரத்து செய்துவிட்டு, ஒப்பந்ததாரர்கள் கொள்ளையடிக்கும் விதமாக பொருட்கள் செலவினம் சார்ந்த (material component) பணிகளை மட்டுமே இப்போது செய்திட வேண்டுமென ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறையால் அனைத்து ஊராட்சிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.           ஏரி, வாய்க்கால், குளம், தூர்வாருதல் போன்ற வேலைகளை செய்தால் கூலி வழங்க இயலாது எனவும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

            ஏற்கனவே, ஆதார் இணைப்புடன் ஊதிய பரிவர்த்தனை என்ற திட்டத்தால் தமிழகத்தில் சுமார் 70 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். விவசாய வேலைகள் எந்திரமயமாகி உள்ள பின்னணியில் 80 சதவிகித பெண் தொழிலாளர்கள் வேலை வருமானம் இழந்து சிரமத்தில் தள்ளப்பட்டுள்ளனர். கோடை காலத்தில் விவசாய வேலைகள் ஏதும் இல்லாத காலத்தில் விவசாய தொழிலாளர்களின் குடும்பங்கள் மோசமான வறுமை மற்றும் பசி பட்டினியால் வாடும் நிலைமை உள்ளது. இந்த சூழலில் ஒன்றிய அரசின் இதுபோன்ற மோசமான நிபந்தனைகளால் இத்திட்டத்தின் கீழ் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசு கிராமப்புற வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்தாமல் நிறுத்தி வைத்து தமிழ்நாடு அரசின் மீது மக்களின் அதிருப்தைய உருவாக்கிட கபட நாடகத்தை அரங்கேற்றுகிறது.

            எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு வேலை அட்டை பெற்றுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் வேலை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பிரதமரையும், ஒன்றிய அரசையும் வலியுறுத்தி மண் சார்ந்த நீர் நிலைகளில் பெருமளவு தொழிலாளர்கள் பங்கேற்கும் அளவில் வேலை நடைபெறுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்து இந்த வேலையை நம்பி வாழும் கிராமப்புற ஏழை, எளிய மக்களை பாதுகாக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி.

இப்படிக்கு,

தங்களன்புள்ள,/ஒப்பம்
(கே. பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்