பொருளியல் ஆய்வுகளில் மிகப்பெரிய பங்களிப்பை செய்துள்ள பொருளாதார அறிஞர் பேராசிரியர் சி.டி.குரியன் (92) நேற்று (23.07.2024) பெங்களூரில் உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த கவலையளிக்கிறது. அவரது மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
பேராசிரியர் சி.டி.குரியன் சென்னை கிறித்தவக் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்தவர். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (எம்.ஐ.டி.எஸ்) இயக்குநராக பல ஆண்டு காலம் பணியாற்றியவர். சென்னை, எம்.ஐ.டி.எஸ் வளர்ச்சிக்காக தனது தொடர் பங்களிப்பை செலுத்தி, இந்தியாவில் தேசிய அளவிலான மிகச்சிறந்த சமூக அறிவியல் நிறுவனங்களில் ஒன்றாக இந்நிறுவனம் வளர்ச்சி பெற்றுள்ளதற்கு இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. இவருடைய ஆய்வுகள் சமூகத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வு குறித்த பிரச்சனைகளுக்கும், அனைவரையும் உள்ளடக்கிய பொருளியல் மேம்பாட்டை உருவாக்குவதிலேயே முக்கியத்துவம் கொடுத்து கவனம் செலுத்தியவர். ஏராளமான ஆய்வு நூல்களை எழுதியவர்.
குறிப்பாக, தமிழக கிராமப்புற மாறுதல்கள் என்ற அவருடைய ஆய்வு தமிழகத்தில் முக்கிய பங்களிப்பை செய்தது. இவருடைய ஆய்வு மாணவர்களான வி.கே.ராமச்சந்திரன், ஜெ.ஜெயரஞ்சன் ஆகியோர் தமிழகம், கேரளம் மாநிலங்களில் திட்டமிடும் குழுக்களில் மிக முக்கிய பொறுப்புகளை வகித்தவர்கள் என்பது பெருமைக்குரியது. இடதுசாரி சிந்தனைகள் மீது ஆழ்ந்த பற்றுடையவர். 60 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி பணியிலும், ஆய்வு பணியிலும் தனி முத்திரை பதித்தவர். அவரது மறைவு பொருளியல் துறைக்கும், கிராமப்புற உழைப்பாளி மக்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.
அவரது மறைவால் துயருற்றுள்ள அன்னாரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு தனது ஆறுதலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறது.